For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தேசிய விவசாயிகள் தினம்!

04:27 AM Dec 23, 2024 IST | admin
தேசிய விவசாயிகள் தினம்
Advertisement

ழவுத் தொழில்தான் உலகின் அனைத்து தொழில்களிலும் சிறந்தது. உண்டிக் கொடுத்தோர்; உயிர் கொடுத்தோரே என உழவர்களைச் சிறப்பிக்க நாம் தவறியதில்லை. இன்று வரை நம் மனதில் விவசாயிகள் பற்றிய உயர்ந்த எண்ணமே மேலோங்கியிருக்கிறது. மற்றவர்களைப்போல ஷிப்ட் முறையெல்லாமல் இல்லை. ஒருநாளில் 24 மணிநேரமும் உழைக்கக் கூடியவர்கள். பசியால் யாரும் வாடக்கூடாது என்று எண்ணி உழைக்கும் விவசாயிகளில் பலரும் இன்று ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு வாழ்கின்றனர் என்பதுதான் கவலையளிக்கும் உண்மை. அப்படியான விவசாயிகளை நினைவுகூறவும், விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விவசாயிகளுக்கான உரிய அங்கீகாரத்தை வழங்கவும் விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 23-ம் தேதி இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தை இந்தியில் `கிசான் திவாஸ்' என்று அழைக்கிறார்கள். விவசாயிகளின் தேசிய பங்களிப்பைச் சொல்லும் வகையில் விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் இந்நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயத்திற்காக பல சட்ட திட்டங்களை கொண்டு வந்து மறுமலர்ச்சி ஏற்படுத்திய முன்னாள் இந்திய பிரதமா் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளாளையே இப்படி தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தனைக்கும் 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த சரண் சிங் ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் இவர். அவருடைய ஆட்சியின்போதே உழவர்களின் விளைபொருள் விற்பனைக்காக வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவையும் அறிமுகப்படுத்தினார். இதே போன்று அவர் ஆட்சியின் போது உழவர்களின் நலன்களுக்காக சில முக்கிய திட்டங்களை கொண்டு வந்தார் என்பதாலே இந்த கவுரவம்.

Advertisement

"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை" (குறள்) - எனச் சங்ககாலம் தொட்டு இக்காலம் வரையிலும் உழவர்கள் மற்றும் உழவின் பெருமையைப் பாடுகிறோம். ஆனால் `தந்தையர் தினம், தாயார் தினம் என்று ஒவ்வொரு தினத்தைப் பற்றிம் பலர் பகிரும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், ஃபேஸ்புக் பதிவிலும்தான் செளிப்படுமேஎ தவிர... உண்மையில் எத்தனை பேருக்குத் தெரியுமென்று நினைக்கிறீஎகள். இப்படி விவசாயிகளுக்கும் ஒரு தினம் உண்டெண்பது? இப்படியொரு தினம் கொண்டாடப்படுவது நம் நாட்டில் உள்ள காலே அரைக்கால் சதவிகித விவசாயிகளுக்குக்கூடத் தெரியாது. இதன் மூலமே இப்போது விவசாயிகளின் நிலைமை எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.. !

Advertisement

மக்களின் பசியை போக்க உணவை படைத்து வரும் விவசாயிகள் போற்றத்தக்கவர்கள். இருப்பினும் பல்வேறு காரணங்களால் இன்றைய சூழலில் விவசாய தொழில் சவாலான ஒன்றாக மாறி வருகிறது.இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாய தொழிலில் 60 சதவிகிதம் பேர் ஈடுபட்டுள்ளனர். பசுமை புரட்சியின் பாதிப்புகள் மண் வளத்தை நஞ்சாக்கி இருந்தாலும், விவசாயிகளின் தொடர் உழைப்பால் ஆண்டிற்கு 265 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இப்படி விவசாயத்தில் பல சாதனைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் இன்னும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக நீர் மேலாண்மை இல்லாததால், முப்போக சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் தற்போது ஒரு போக சாகுபடிக்கு கூட வழியில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இது ஒருபுறமிருக்க விவசாய இடுபொருட்களின் விலையேற்றம், உற்பத்திற்கேற்ற விலை கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகளாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், வங்கிகளில் எளிதாக கடனும் கிடைப்பதில்லை

விவசாயிகளின் தற்கொலை என்பது மிகச் சாதாரண செய்தியாகிவிட்டது. செய்தி கேட்டுப் பதறும் முகங்களைக் காண்பது அரிதாகிவிட்டது. அன்றாட நிகழ்வுகளைக் கடந்து செல்வது போல், இதனையும் கடந்து செல்லப் பழகிவிட்டோம். ஆண்டுக்கு ஆண்டு தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தேசிய குற்றப்பதிவுகளின் தரவுகளின் படி 1995-லிருந்து 2015 வரையிலான 20 ஆண்டுகளில் 3,10,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். போதாக்குறைக்குப் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அரசே தண்டிக்கிறது, கைது செய்கிறது. இது வேறெந்த ஒரு தொழில்துறையிலும் நடக்காத ஒரு துயரம். இயற்கைப் பேரிடர், வறட்சி, போதிய நீர் வசதி இல்லாமை, வங்கிக் கடன் இன்னும் இத்யாதி இத்யாதி காரணங்களால் அனைத்து விதங்களிலும் இடிபட்டுப் பட்டு உயிர் விடுவதைத் தவிர வேறென்ன ஓர் உழவன் செய்துவிட முடியும். கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 2 இலட்சம் விவசாயிகள் வேளாண் தொழிலை விட்டுப் போய்விட்டனர். காரணம் என்ன? நம் நாட்டில் வாழும் மக்களுக்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பலரும் அறியாமல் தான் இருக்கிறார்கள். நாட்டுக்கு முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகள் குறித்தும் விவசாயம் குறித்தும் நகரங்களிலிருக்கும் பலரும் அதை இரண்டாம், மூன்றாம் தர செய்தியாகவே அணுகுகிறார்கள். அது குறித்து அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாகத்தான் இது போன்ற கொண்டாட்டங்கள், சர்வதேச தினங்கள், அந்த நாளுக்கான முக்கியவத்தை வலியுறுத்த கடைபிடிக்கப்படுகின்றன.

'பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்' வெளியிட்ட அறிக்கையின் படி கடந்த 20 ஆண்டுகளாகவே விவசாயம் இலாபகரமான தொழிலாக இல்லை. 26 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இந்திய விவசாயிகளின் நிலை மோசமானதாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகச் சர்வதேச சந்தை நிலவரத்தை உற்று நோக்குகையில் இந்திய விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்காக மிகக் குறைவான விலையையே பெற்றுள்ளனர். விவசாய பொருட்களுக்காக நுகர்வோர் தரும் விலையும், விவசாயிகள் பெறும் விலைக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. மொத்த விவசாய வருமானம் 2000-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை சராசரியாக 14 சதவிகித அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. 2020 மற்றும் 2023-ம் ஆண்டில் இது ஆண்டுக்கு 8 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. விவசாயத்தில் புதிய முதலீடுகளைச் செய்யாமை , பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்தது, தவறான வர்த்தக கொள்கை... இவைதான் இந்த நிலைக்குக் காரணமாக உள்ளதாக அறிக்கைத் தெரிவிக்கிறது.

விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அவர்களின் போராட்டம் தலை தூக்கும் போதெல்லாம் பதவியேற்கும் புதிய அரசு 'விவசாய கடனை' தள்ளுபடி செய்துவிட்டு பிரச்னையை தீர்த்துவிட்டதாகப் பெருமை கொண்டுவிடுகிறார்கள். கடன் தள்ளுபடி அவசியமே; ஆனால், அது நிவாரணம் மட்டுமே. நிரந்தர தீர்வென்பது 'நியாயமான கொள்முதல் விலை' நிர்ணயித்து அரசே அதிகளவில் கொள்முதல் செய்வதே. இன்னும் எத்தனை ஆண்டுகள் இதையே முழங்குவது எனத் தெரியவில்லை. செருப்பு விற்பவன் கூட தான் உற்பத்தி செய்த பொருளுக்கான விலையைத் தானே நிர்ணயிக்கிறான். உணவு உற்பத்தி செய்யும் விவசாயிக்கே அந்த உரிமை இல்லாமல் போனது. முதல், செலவு எதனையும் கணக்கில் கொள்ளாது ஏதோ ஒரு விலையை நிர்ணயிப்பதை இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும். 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை நடைமுறைக்குக் கொண்டு வருவோம்' எனக்கூறி மோடி அரசு ஆட்சிக்கு வந்து பன்னிரெண்டாண்டுகள் முடிந்துவிட்டன. என்ன சொல்கிறது அந்த அறிக்கை? "விவசாயிகளின் விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்க வேண்டும் என்றால், உற்பத்திச் செலவோடு, 50 சதவீதம் சேர்த்து ஆதாரவிலையாகத் தர வேண்டும்" என்று மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது. பன்னிரண்டு ஆண்டுகளாக அந்த அறிக்கை தூசிபடிந்து கிடக்கிறது. பின் எவ்வாறு விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்கும்?

காவிரி என்பது வேளாண்மையின் மூலாதாரமாக இருந்த நிலை மாறி, அரசியலின் மூலாதாரமாகிவிட்டது. இந்தியாவில் போதுமான நீர்ப்பாசன வசதி கொண்ட நிலங்கள் 35% மட்டுமே. இதில் எப்போதும் அதிக நீர்த்தேவை கொண்ட பயிர்களையே பயிரிட வேண்டிய சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர். காரணம், அதிக இலாபம் தரும் காய்கறி, பழப்பயிர்களை பயிரிடத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. அவ்வாறு பயிரிடும்போது பழங்களை, காய்கறிகளைப் பாதுகாக்க குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட கிடங்குகள் இருப்பதில்லை. நவீன தொழில்நுட்பத்தை இதுபோன்ற செயல்பாடுகளில் செலுத்தாமல் வேதி உரங்களை மட்டும் தெளித்து மண்ணை மலடாக்குகிறோம். அந்தந்த மண்ணிற்குரிய பாரம்பர்யமான பயிர்களைப் பயிரிடுவதற்காக வசதிகளை அரசு ஏற்படுத்தி தரவேண்டும். அவை மண்ணின் நீர்தன்மைக்கேற்ற பயிர்களாக அமையும். உலக வங்கி அளித்துள்ள தகவலின்படி இந்தியாவில் 80%க்கும் அதிகமான விவசாயிகள் ஓர் ஏக்கருக்கும் குறைவான நிலம் கொண்டோர். எனவே, விளைப்பொருட்களின் விலை குறித்த பேரங்களில் அவர்களால் ஈடுபட முடிவதில்லை. ஆகவே, அவர்களின் பயிர்களை சந்தைப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் விவசாயிகளுக்கான சந்தைக் கூட்டமைப்புகளை உருவாக்கித் தருதல் வேண்டும். இந்தக் கூட்டுறவு முறையில்தான் அமுல் நிறுவனம் மிகச்சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

8 வழிச்சாலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பெட்ரோலிய மண்டலம் என விவசாய நிலங்களைக் கூறு போடாமல் காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலங்களாக அறிவித்து, விவசாய நிலங்களைக் கபளீகரம் செய்யும் திட்டங்களில் இருந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டும். தொலைநோக்கு பார்வையிலான சிறப்பான திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்தால் இருப்பதைக் காக்கலாம்; இழந்ததை மீட்கலாம். அரசிற்கு மட்டுமல்ல; இதை அனைத்தையும் கண்டும் காணாமல் கடந்து போகும் உணவுண்ணும் ஒவ்வொரு மனிதருக்கும் இதில் கடமை உண்டு.

அந்த வகையில் வருடத்தின் ஒவ்வொரு நாளும் வெயிலிலும், மழையிலும் கஷ்டபடும் விவசாயிகளை ஏதாவது ஒருநாள் மட்டும் நினைத்து விட்டு இருந்து விடக் கூடாது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு வேளை உணவின் போதும் விவசாயிகளை நினைக்க வேண்டும். அவர்களுடைய கஷ்டங்களை ஒவ்வொரு நாளும் உணர்ந்து, விவசாய சமூகங்களுக்கு இயன்ற உதவிகளை அளிப்பது நல்லது. நம் நாட்டில் அரை மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இதுபோன்ற துயரங்கள் எல்லாம் மறைந்து, விவசாயிகள் என்றைக்கு நிம்மதியாக அவர்களது தொழிலை செய்து அதன் பலனை அடைகிறார்களோ... அதுவே உண்மையான விவசாயிகள் தினமாக இருக்கும் என்பது மட்டும் நிஜம்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement