தேசிய மருத்துவர்கள் தினமின்று!
டாக்டர் பிதான் சந்திர ராய் இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மேதை. மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான படிப்புகளை ஒரே நேரத்தில் படித்தவர். விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்தார். சுதந்திரம் பெற்ற பிறகு மேற்குவங்கத்தின் இரண்டாவது முதலமைச்சராக 14 ஆண்டுகள் பதவி வகித்தார். அப்போதும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். இவரது சேவைகளைப் பாராட்டி, 1961-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ராயின் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இவர் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு நெருக்கமானவாராக இருந்தவர். காந்தியுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகவும் போராடியதோடு மட்டுமல்லாது, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் இருந்தார். அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தின் முதல் அமைச்சராகவும் பொறுப்பு வகித்து மக்கள் சேவையாற்றினார். தன் வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட கொடுத்த டாக்டர் பி.சி.ராய், முதல் அமைச்சராக இருந்த காலத்தில்கூட ஏழைகளுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்தவர்.
மனிதர்களின் வாழ்க்கையில் மருத்துவர்களுக்கு எப்பொழுதுமே உயர்வான இடம் உண்டு. நேரம் காலம் பார்க்காமல், ஓய்வு இன்றி உழைக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள். கரோனா போன்ற கொள்ளை நோய் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் தியாகத்துக்கு ஈடு எதுவும் இல்லை.உயிர் வாதையில் துடித்துக் கொண்டிருக்கும் ஓர் உயிரை காணும் போதெல்லாம் மருத்துவரின் மனதில் அந்த உயிரை எப்படியாவது காப்பாற்றி விடுவோம் என்ற நம்பிக்கை மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுத்தாலும் மருத்துவர்களின் சேவையை வேறு எதனோடும் ஒப்பிடவே முடியாது.இந்த உலகில் தெய்வமே இல்லை என்று வாதிடுபவர்கள் கூட மருத்துவர்களின் அளப்பரிய சேவையை கண்டு அவர் வடிவில் தெய்வத்தை கண்டதாக கூறுவது உண்டு.
தெய்வங்கள் நேரடியாக பூமிக்கு வருவதில்லை. அன்பும், சேவையும், கருணையும் எந்த உள்ளத்தில் இருக்கிறதோ, அந்த மனிதனிடம் இறைவன் வந்து குடிகொள்கிறார். எனவே தான் இவையெல்லாம் கொண்ட நடமாடும் தெய்வங்களாக மருத்துவர்கள் இருக்கிறார்கள். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் மருத்துவர்கள்.அவர்களே மறுபிறவி தரும் கடவுள்கள். மருத்துவர் என்பவர் கடவுளால் அனுப்பப்பட்ட ஒரு பிரதிநிதி. அல்லது கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவர் என்று சொல்லலாம்.
மருத்துவத் தொழிலை புனிதமாக கருதுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் 5 ரூபாய்க்கு மருத்துவ ஆலோசனை வழங்கும் மருத்துவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம் ஆலோசனைக்கு 2 ஆயிரம் ரூபாய் வாங்கும் மருத்துவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.மருத்துவருக்கு 6 மணி நேர வேலை, 8 மணி நேர வேலை என்றெல்லாம் கிடையாது. மருத்துவர் 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.அதை தான் மருத்துவப்படிப்பும் சொல்லிக் கொடுக்கிறது. அதற்காக 24 மணி நேரமும் அவர் மருத்துவமனையில் இருப்பதில்லை.குறைந்தது 14 மணி நேரம் மனப்பூர்வமாக வைத்தியம் செய்கிறார்கள். கடவுள் தந்திருக்கக் கூடிய இந்த அற்புத பணியை கஷ்டப்பட்டு செய்யாமல் இஷ்டப்பட்டு செய்யும் மருத்துவர் உலகமெங்கும் ஏராளமானோர் உள்ளனர்.மேடை கலைஞர்கள் தங்களுக்கு கிடைக்கும் கைதட்டலை தான் பாக்கியமாக கருதுவார்கள். அதேபோல நோயாளி பிழைத்துக் கொண்டார் என்ற வார்த்தை தான் மருத்துவர்களுக்கு சன்மானம்.
இப்படி மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர் காப்பவர்கள் டாக்டர்கள். ஆனால், அவர்களின் ஆயுள் சராசரி மக்களை விட குறைவாக இருக்கிறது என்கிறது இந்திய மருத்துவக் கழகத்தின் (ஐ.எம்.ஏ) ஆய்வு முடிவு.இந்தியாவில் மருத்துவர்களின் சராசரி வயது 55 முதல் 59 ஆண்டுகளாக இருக்கிறது. இது பொது மக்களின் ஆயுளை விட 10 ஆண்டுகள் (சாதாரண மக்களின் ஆயுள் 69 முதல் 72 ஆண்டுகள்) குறைவாகும். அதிக மன அழுத்தம், உடல் செயல்பாடு குறைந்த சொகுசு வாழ்க்கை, உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்,ஒழுங்கற்ற சாப்பாட்டு வேளைகள் போன்றவை மருத்துவர்களின் ஆயுளைக் குறைத்து வருகிறது.
இதை எல்லாம் சுட்டிக்காட்டி தங்களுக்காக மட்டுமல்லாது, மற்ற உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற பொது நலனும் அடங்கி இருப்பதால், மருத்துவர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தவே ராயின் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.டாக்டர் பிதான் சந்திர ராய் இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மேதை. மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான படிப்புகளை ஒரே நேரத்தில் படித்தவர். விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்தார். சுதந்திரம் பெற்ற பிறகு மேற்குவங்கத்தின் இரண்டாவது முதலமைச்சராக 14 ஆண்டுகள் பதவி வகித்தார். அப்போதும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். இவரது சேவைகளைப் பாராட்டி, 1961-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதாக்கும்