தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா பார்க்கர் விண்கலம்!

05:37 AM Dec 26, 2024 IST | admin
Advertisement

நாசா விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று, ஒரு புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Advertisement

பார்க்கர் விண்கலம் (Parker Solar Probe) எனப்படும் அந்த ஆளில்லா விண்கலம் சூரியனின் அதீத வெப்பம் மற்றும் தீவிர கதிர்வீச்சை தாங்கிக்கொண்டு, அதன் வெளிப்புற வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது.அதீத வெப்பம் நிலவும் இடத்தில் இந்த விண்கலம் இருப்பதால், பல நாட்களாக இதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28 அன்று 05:00 (GMT) மணிக்கு (இந்திய நேரப்படி காலை 10.30 மணி), இந்த விண்கலத்திலிருந்து சமிக்ஞை கிடைக்கும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். அதன் பிறகு தான் இது தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளதா என்பது தெரிய வரும்.சூரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவும் என்று நம்பப்படுகிறது.

Advertisement

நாசாவின் அறிவியல் துறை தலைவர் டாக்டர் நிக்கோலா ஃபாக்ஸ் இது குறித்து, "பல நூற்றாண்டுகளாக, மக்கள் சூரியனைப் பற்றி ஆய்வு செய்துள்ளனர். ஆனால் நேரடியாக (விண்கலத்தின் பயணம்) சென்று அதை ஆய்வு செய்யாத வரை, அதன் வளிமண்டலத்தைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது. "எனவே அதன் வழியாக பயணம் செய்தால் மட்டுமே, நமது நட்சத்திரத்தின் (சூரியன்) வளிமண்டலத்தை உண்மையில் உணர முடியும். பார்க்கர் விண்கலம் 2018-ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டது. இது நமது சூரிய மண்டலத்தின் மையத்தை நோக்கி பயணிக்கிறது.இது ஏற்கனவே சூரியனை 21 முறை நெருங்கிச் சென்றுள்ளது. ஒவ்வொரு முறையும் சூரியனுடனான அதன் தூரம் குறைந்து வந்தது. ஆனால் இந்த முறை மிக நெருக்கமாக சென்று புதிய சாதனை படைத்துள்ளது.’’ என்றார்

அவரிடம் ‘சூரியனைத் 'தொட' இவ்வளவு கடுமையான முயற்சியை ஏன் எடுக்க வேண்டும்? என்ற கேள்வி எழுப்பினால் இந்த விண்கலம் சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தை (Corona- கொரோனா) கடந்து செல்வதன் மூலம், நீண்டகாலமாக நிலவும் ஒரு மர்மம் தீர்க்கப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புவதாக பதில் சொல்கின்றனர். "கொரோனாவில் மிகமிக அதீத வெப்பம் நிலவுகிறது. ஆனால் அதற்கு காரணம் என்ன என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என்று கூறுகிறார் வேல்ஸில் உள்ள ஃபிஃப்த் ஸ்டார் ஆய்வகங்களின் வானியலாளர் டாக்டர் ஜெனிபர் மில்லார்ட்.

"சூரியனின் மேற்பரப்பு சுமார் 6,000 டிகிரி செல்சியஸ் அல்லது அதைவிட அதிகமான வெப்பநிலையைக் கொண்டது. ஆனால் சூரிய கிரகணங்களின் போது, நீங்கள் காணக்கூடிய இந்த கொரோனா எனும் மெல்லிய வெளிப்புற வளிமண்டலம், லட்சக்கணக்கான டிகிரி வெப்பநிலையை அடைகிறது.. அத்தனைக்கும் அது சூரியனின் மேற்பரப்பிலிருந்து தொலைவில் தான் உள்ளது. அப்படியானால் அந்த வளிமண்டலம் இந்தளவுக்கு சூடாவது ஏன் என்பதுதான் கேள்வி?" என்கிறார் மில்லார்ட்.

மேலும் ‘’சூரிய காற்றைப் (Solar Wind) பற்றி நன்கு புரிந்துகொள்ளவும் விஞ்ஞானிகளுக்கு இந்த ஆய்வு உதவும். இந்த சூரிய காற்று என்பது சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து வெடித்து வெளியேறும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் ஆகும்.இந்த துகள்கள் பூமியின் காந்தப்புலத்துடன் தொடர்பு கொள்ளும்போது, வானில் அழகான துருவ ஒளிகள் தோன்றும்.ஆனால் இந்த விண்வெளி நிகழ்வு, மின் கட்டமைப்புகள், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி, பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்."சூரியன், அதன் செயல்பாடுகள், விண்வெளிச் சூழல், சூரிய காற்று, இவற்றைக் குறித்து நன்றாக புரிந்துகொள்வது, பூமியில் நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்" என்று டாக்டர் மில்லார்ட் கூறுகிறார்.

இப்போதைக்கு பார்க்கர் விண்கலம் இப்போது பூமியுடன் தொடர்பில் இல்லாத நிலையில், நாசா விஞ்ஞானிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர். "பார்க்கர், பூமிக்கு ஒரு சமிக்ஞை அனுப்பியவுடன், விண்கலம் சரியாகதான் செயல்படுகிறது என்பதை அதற்கு தெரியப்படுத்த விஞ்ஞானிகள் குழு 'ஒரு பச்சை நிற இதய சின்னத்தை' குறுஞ்செய்தியாக அனுப்பும்." என்று நிக்கோலா ஃபாக்ஸ் கூறுகிறார். கண்மூடித்தனமான இந்த முயற்சி பற்றி சற்று பதற்றம் இருப்பதை நிக்கோலா ஒப்புக்கொள்கிறார். ஆனாலும் பார்க்கர் விண்கலம் மீது அவருக்கு முழு நம்பிக்கை உள்ளது."நான் விண்கலத்தைப் பற்றி சற்று கவலைப்படுகிறேன். ஆனால் மிக மோசமான நிலைமை அனைத்தையும் தாங்கும் வகையில்தான் நாங்கள் அதை வடிவமைத்துள்ளோம். ஒரு சிறிய, ஆனால் மிகமிக வலிமையான ஒரு விண்கலம் அது" என்கிறார் நிக்கோலா.

ம்.. பார்ப்போம்.. சமிஞ்சை கிடைத்தால் விண் ஆராய்ச்சியில் அது ஒரு மைல்கல் சாதனைதானே!

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
atmosphereburning sunnasaParkershuttlespaceசூரியநாசாபார்க்கர்!விண்கலம்
Advertisement
Next Article