நரேந்திர தாமோதரதாஸ் மோடி ஆகிய நான்..-மீண்டும் பிரதமரானார்!
இந்திய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3வது முறையாக தக்கவைத்துக் கொண்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, பிரதமர் மோடி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட திரவுபதி முர்மு ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் ராஷ்ட்ரபதி மாளிகையில் பிரதமர் மோடி பதவியேற்று கொண்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, மோடிக்கு பிரதமராக பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவுகள், செஷல்ஸ், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பாஜக ஆட்சியில் உள்ள மாநில முதல்வர்கள், அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா, விளையாட்டு, நீதி, மருத்துவம் உள்ளிட்ட துறைசார்ந்த பிரபலங்களும் இவ்விழாவில் பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவ்ராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், மனோகர் லால் கட்டார், பியூஷ் கோயல், ஹெச்டி குமாரசாமி, தர்மேந்திர பிரதான், ஜித்தன் ராம் மாஞ்சி, ராஜீவ் ரஞ்சன் சிங், சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், ராம்மோகன் நாயுடு, பிரஹலாத் ஜோஷி, கிரிராஜ் சிங், அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியா, பூபேந்திர யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத், கிரண் ரிஜிஜு, ஹர்தீப் சிங் புரி, மன்சுக் மாண்டவியா, ஜி.கிஷன் ரெட்டி, சிராக் பஸ்வான், ராவ் இந்தர்ஜித் சிங், ஜிதேந்திர சிங், அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். மொத்தம் 72 பேர் இன்று மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டார்கள்