டாடாவின் நானோ கார் தயாரிப்புக்கு “டாட்டா”!
ரத்தன் டாடாவின் கனவு வாகனம் என்ற சிறப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நானோ’ கார் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. கடந்த, 2009ல் 1 லட்சம் ரூபாய் விலையில் இந்த நானோ கார் அறிமுகமானது. இந்த காருக்கு துவக்கத்தில் இருந்த வரவேற்பு சில ஆண்டுகளில் குறையத் துவங்கியது. இதனால், உற்பத்தியும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்த நிலையில் 2020, ஏப்., 1 முதல், நானோ கார் தயாரிப்பு விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்படும் எனத் தெரிகிறது.
இது குறித்து ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் பயணியர் வாகன பிரிவு தலைவர், மயாங்க் பரீக் “குஜராத்தின் சனாந்த் தொழிற்சாலையில் ‘நானோ’ கார்கள் தயாராகி வந்தன. இந்த நிலையில், இந்தாண்டு முதல் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரலில் வாகன துறையில் மேலும் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளன.
அதிலும் அடுத்த ஆண்டு, ஏப்., 1 முதல், ‘பாரத் ஸ்டேஜ் – 6’ மாசு கட்டுப்பாடு விதிமுறை அமலுக்கு வர உள்ளது.அதனால், நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும், புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும். சில மாடல்களின் மேம்பாட்டிற்கு முதலீடு செய்யும் திட்டம், நிறுவனத் திடம் இல்லை; அத்தகைய மாடல்களில், நானோ காரும் ஒன்று”என்று அவர் தெரிவித்தார்.