தஞ்சை வேளாண்மை கல்லூரிக்கு எம் எஸ் சுவாமிநாதன் பெயர் : முதல்வர் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அப்போது மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனை நினைவு கூர்ந்து அவரது புகழை எடுத்துரைத்தார். மத்திய அரசு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கும், இந்திய மக்களின் பட்டினிச் சாவைத் தடுப்பதற்கும் 1960-களில் பசுமைப் புரட்சித் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவரான மறைந்த வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனின் அளப்பரிய பணிகளை நினைவுகூர்ந்தார். வேட்டைச் சமூகமாக இருந்த மனித இனம், வேளாண் தொழிலைத் தேர்ந்தெடுத்து என்பது மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்பதுடன் அறிவியல் வளர்ச்சியின் அடையாளமும் ஆகும். வேளாண் அறிவியலை இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி உலகளவில் புகழ் பெற்றவர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் என்று புகழாரம் சூட்டினார்.
பத்மவிபூஷன், ரமோன் மகசசே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள எம்.எஸ். சுவாமிநாதனின் நினைவைப் போற்றும் வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பை வெளியிடுகிறேன். அந்த வகையில் விதி எண்.110-இன்கீழ் இந்த அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமைப்படுகிறேன் என்று முதலமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும். அதேபோல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப்பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.