நாகை இலங்கை கப்பல் போக்குவரத்து வாரத்தில் மும்முறை மட்டுமே!
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது என பிரதமர் மோடி-இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்துக்கான அனைத்து பணிகளும் தொடங்கி முடிவடைந்தன.
நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் கடந்த இ ஆம் தேதி நடந்து முடிவடைந்தது. கடந்த 10-ந்தேதி தொடங்க இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டு 12-ந் தேதிக்கு மாற்றப்பட்டு மீண்டும் 14-ந்தேதிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று காலை 7 மணி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து காணொலிக்காட்சி மூலம் டில்லியில் இருந்தபடி நேற்று காலை பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி துறை மற்றும் ஆயுஷ் துறைக்கான அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டார். அவர், கொடியசைத்து வைத்ததும், கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் காணொலி காட்சி வழியே கலந்து கொண்டார்.
தற்போது திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகள் என்று 3 நாட்கள் மட்டும் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பயணத்துக்கு போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால், மீதி நாட்களில் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.