நாகை -இலங்கை பயணிகள் கப்பல் இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படும்!
நாகை -– இலங்கையின் காங்கேசன்துறை துறை முகம் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பயணிகள் கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். ‘செரியாபாணி’ என்ற பெயரிலான கப்பல் சேவை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அம்மாத இறுதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஓராண்டுக்குப் பிறகு கடந்த 16-ம் தேதி ‘சிவகங்கை’ என்ற மற்றொரு கப்பல் நிறுவனம், நாகை- இலங்கை இடையேயான கப்பல் சேவையை மீண்டும் தொடங்கியது. முதல் நாள் நாகையில் இருந்து 44 பேர் இலங்கை சென்ற நிலையில், தொடர்ந்து அதில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
நேற்று நாகையிலிருந்து இலங்கைக்கு 5 பேரும், இலங்கையிலிருந்து நாகைக்கு 14 பேரும் மட்டுமே பயணித்தனர். இதன் காரணமாக நாகை – இலங்கை இடையே இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கப்பல் போக்குவரத்து சேவை இருக்கும் என கப்பலை இயக்கும் இன்ட்ஸ்ரீ (Indsri) நிறுவனம் அறிவித் துள்ளது.
செவ்வாய், வியாழன், ஞாயிறு…
இதுகுறித்து அந்த நிறுவனத்தினர் கூறும் போது, ‘‘போதுமான பயணிகள் வருகை இல்லாத காரணத்தால் வாரத் தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு என 3 நாட்கள் மட்டுமே நாகை-இலங்கை இடையேயான கப்பல் சேவை இருக்கும். அடுத்த மாதம் 15-ம் தேதி வரை இந்த நடை முறை தொடரும். அதன் பின்னர் பயணிகள் வருகையைப் பொறுத்து கப்பல் சேவை முடிவு செய்யப்படும்’’ என்றனர்.