புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் கர்ணன் 60- சிறப்பு நிகழ்ச்சி!
1964இல் பத்மினி பிக்சர்ஸ் வழங்கிய பி.ஆர்.பந்துலுவின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியான 'கர்ணன்' இதிகாச திரைப்படத்துக்கு இந்தாண்டு (ஜன. 14) அகவை 60.தமிழ்த்திரையின் வரலாறு படைத்த மாபெரும் காவியமான 'கர்ணன்' திரைப்படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கொடை வள்ளல் கர்ணனாகவே உருவகித்த காவிய சினிமா. மகாபாரத காவியத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான கர்ணனை அதுவரை ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் எவரும் தயாரித்திராத சூழலில், அந்த ஆழமான தத்துவார்த்தமான கதாபாத்திரத்தில் துணிந்து நடிக்க எவரும் முன்வராத நிலையில் நடிப்புக்கே இலக்கணமாக விளங்கிய சிவாஜி கணேசன் துணிந்து, தன் அசாத்திய நடிப்பினால் முத்திரை பதித்த திரைப்படம் இது.
இந்திய சினிமா வரலாற்றை 'கர்ணன்' திரைப்படத்தை தவிர்த்து எழுதிவிட முடியாது. இப்படத்தின் அடுத்தொரு பிரதான கதாபாத்திரமான கிருஷ்ணர் வேடத்தில் நடிக்க முதலில் தெரிவுசெய்யப்பட்டவர் ஜெமினி கணேசனே. ஆயினும், சிவாஜியின் வேண்டுகோளுக்கிணங்க, ஜெமினி ஒதுங்கிக்கொள்ள, கிருஷ்ணர் வேடத்துக்காகவே வார்த்தெடுத்தாற்போல என்.டி.ராமராவ் சிவாஜிக்கு இணையான காட்சிகளில் நடித்தார். இவர்களை தவிர துரியோதனனாக எஸ்.ஏ. அசோகன், சுபாங்கியாக தேவிகா, பானுமதியாக சாவித்திரி, குந்தியாக எம்.வி. ராஜம்பா, அர்ஜுனனாக முத்துராமன், சகுனியாக முத்தையா, பீஷ்மராக ஜாவர் சீதாராமன், இந்திரனாக எஸ்.வி. ராம்தாஸ், கனகனாக ஓ.ஏ.கே. தேவர், கனகனின் மனைவியாக சந்தியா (ஜெயலலிதாவின் தாயார்), திரெளபதியாக ஜெயந்தி முதலான மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து 'கர்ணன்' என்கிற காவியத்தை தாங்கி நிறுத்தினர்.
இப்படத்துக்கான திரைக்கதையை ஏ.எஸ்.நாகராஜன் எழுத, வசனங்களை சக்தி கிருஷ்ணஸ்வாமி வரித்திருக்கிறார். அதைவிட படத்தின் பிரம்மாண்டத்துக்கு சிறப்பம்சமாக விளங்குவது தத்துவங்களும் தேனும் கலந்தது போன்ற பாடல்களும், கதையோடு கதைமாந்தர்களையும் ஆத்மார்த்தமாக உணர்த்துகிற இசையுமே.
கவியரசு கண்ணதாசனின் அருந்தமிழ் வரிகளில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணையின் தெய்வாதீனமான இசையில் டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி எஸ். கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா, 'சூலமங்கலம்' ராஜேஷ்வரி ஆகியோரின் மனம் மயக்கும் குரலில் 10க்கு மேற்பட்ட பாடல்கள் உருவாக்கப்பட்டு, இன்று வரை பேசப்படுகின்றன.
கால சூழ்நிலையால் இருளுக்குள் சிக்கிக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனின் மனவெளிகளிலும் 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...' ஒலிக்கிறபோது கண்ணீர் சிந்தாத விழிகளே இருக்க முடியாது. சீர்காழி கோவிந்தராஜனின் குரலில், என்.டி.ஆரின் விவேகமும் நடிகர் திலகத்தின் சிகரம் தொட்டுவிட்ட துடிப்புமான இருவரின் நடிப்பில், விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையில், கண்ணதாசனின் வரிகளில் உருவான இந்த பாடல் காலங்கள் கடந்தும் வாழும். இதை தவிர, 'மழை கொடுக்கும் கொடை...', 'ஆயிரம் கரங்கள் நீட்டி...', 'கண்ணுக்கு குலமேது...', 'போய் வா மகளே....', 'என்னுயிர் தோழி கேளொரு சேதி...', 'இரவும் நிலவும் மலரட்டுமே...', 'மஞ்சள் முகம்...', 'மரணத்தை எண்ணி கலங்கிடும்....' என அடுத்தடுத்து ஒலிக்கும் பாடல்களும் முத்தானவை; திகட்டாதவை.
இப்படத்தின் நீளம் கருதி 'மகாராஜன் உலகை ஆளுவார்...' என்றொரு பாடல் நீக்கப்பட்ட போதும், இசைத்தட்டுகளில் இந்த பாடலை கேட்க முடியும்.பாரத கதையில் துரியோதனனை கொடியவனாக காட்ட எத்தனையோ காட்சிகள் இருந்தாலும், இந்த படத்தில் துரியோதனன் கதாபாத்திரம் தன்னலம் கருதாத தோழனாகவே அமைக்கப்பட்டுள்ளது. கண்களை சுருக்கி விரிக்கும் வில்லன் அசோகன், துரியோதனனாகி, நேசத்தையும் நண்பனை விட்டுக்கொடுக்காத உயர்ந்த அன்பினையும் உணர்த்தும்படி நடித்திருப்பது படத்துக்கு மேலதிக பலம். காதல் ரசம் ததும்பிய பாடல்களில் நடிகையர் திலகம் சாவித்திரி, தேவிகாவின் நயமான நடிப்பும் போற்றத்தக்கது. அத்தோடு படத்தின் காட்சியமைப்புகளை பார்த்தால், அரச பரம்பரை படங்களுக்கெல்லாம் இதுவொரு மணிமுடி.
அன்றைய காலத்திலேயே 40 லட்ச ரூபா செலவில் எடுக்கப்பட்ட படம் கர்ணன் என்றால், நம்ப முடிகிறதா?!
1964களில் இன்றைய காலங்களில் இருக்கும் கணினி தொழில்நுட்பங்கள் போல் நவீன வசதிகளற்ற அக்காலகட்டத்தில் 'கர்ணன்' எனும் இதிகாச சரித்திர படத்தை எவ்வளவு கடின உழைப்புக்கு மத்தியில் உருவாக்கியிருப்பர் என்பதை தற்காலத்தவர்கள் உணரவேண்டியது அவசியமாகிறது.
இன்றைய நவீன டிஜிட்டல் வசதிகள் அந்த காலத்தில் இருந்திருந்தால் 'கர்ணன்' திரைப்படம் ஹொலிவுட் படங்களுக்கும் மேலாக சர்வதேச அளவில் பேசப்பட்டிருக்கும்.
தாய்ப்பாசம், தோல்வி, ஏமாற்றம், வீரம், விவேகம், ராஜ தந்திரம் மொத்தத்தையும் தாங்கிய கர்ணன் திரைப்படம், படக்குழுவினரின் ஒன்றுதிரட்டிய முயற்சியில் மாபெரும் சாதனை படைத்து, இன்றைக்கு டிஜிட்டல் சினிமா தளத்திலும் ஆண்டுகள் கடந்து நதி வேகத்தில் ஓடுகிறது என்றால், இது வெறும் கதையல்ல, வரலாற்று சரித்திரம்!
அப்பேர்பட்ட படத்தை நம் புதுயுகம் தொலைக்காட்சியில் நமது பாரத தேசத்தின் பொக்கிஷமான நடிகர் திலகம் நடித்த கர்ணன் காவியம் பொங்கல் அன்று 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு கர்ணன் 60 எனும் நடிகர் திலகத்தின் சிறப்பு நிகழ்ச்சியினை ரசிகர்கள் ஒன்று திரண்டு பங்கேற்று வழங்கி உள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் பொங்கல் ஜனவரி 15 மற்றும் மாட்டுப் பொங்கல் 16 - ம் தேதி காலை10.30 மணிக்கு இரண்டு பாகங்களாக புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஒய் ஜி மகேந்திரா, முனைவர் டாக்டர் மருதுமோகன், அண்ணாதுரை கண்ணதாசன், எஸ்.என். சுரேந்தர், எழுத்தாளர் ஜகாதா, கலைப்புலி சேகரன், நடிகர் சுரேஷ், தென்காசி கணேசன் பி .எச். டி, சிவாஜி ரவி, முரளி ஸ்ரீநிவாஸ், ராகவேந்திரா ஆகியோர் கர்ணன் படத்தின் பெருமைகளை பற்றியும் டிஜிட்டல் மறு வெளியீட்டில் மாபெரும் வெற்றி பெற்றதைப் பற்றியும் இடையிடையே படத்தின் காட்சி மற்றும் பாடல்கள் உடன் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை பாடகர் முகேஷ் பாட திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து தொகுப்பாளர் ஆர்த்தி தொகுத்து வழங்கினார்.