ஓலாவை கதறவிட போகும் முவி 125 5ஜி இ-ஸ்கூட்டர்!.
பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான இ-பைக்-கோ (eBikeGo), தனது சமீபத்திய தயாரிப்பான முவி 125 5ஜி (Muvi 125 5G) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் வெளியீடு செய்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள 'ஆர்ட் ஆஃப் லிவிங் இன்டர்நேஷனல் சென்டர்' (Art of Living International Center)-இல் வைத்தே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அது வெளியிட்டது. இந்தியர்களின் மின்சார வாகனத்தை தீர்க்கும் பொருட்டே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைப்பு செய்து இருப்பதாக இ-பைக்-கோ தெரிவித்து இருக்கின்றது.
இது பலவகைகளில் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்றும் அது தெரிவித்து இருக்கின்றது. நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் இந்த இரண்டிலும் கவனம் செலுத்தப்பட்டே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஸ்கூட்டரில் சக்திவாய்ந்த 5 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருப்பதாக இ-பைக்-கோ தெரிவித்து உள்ளது.
இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீட்டருக்கும் மேல் பயணிக்க முடியும் என நிறுவனம் சான்றளித்துள்ளது. கூடுதலாக, இது வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தையும் கொண்டிருப்பதாக் கூறப்பட்டுள்ளது. மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே பூஜ்ஜியம் சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிவிட முடியுமாம்.இதேபோல் தொழில்நுட்ப அம்சங்களை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இ-பைக்-கோ வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், முவி 125 5ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்மார்ட் எல்இடி டிஜிட்டல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, மொபைல் ஆப் இணைப்பு வசதியையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இ-பைக்-கோ வழங்கி இருக்கின்றது.
இதை இணைப்பதன் வாயிலாக செல்போனுக்கு வரும் முக்கிய தகவல்களை இ-ஸ்கூட்டரின் திரையிலும், ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்களை செல்போனிலும் அறிந்துக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. முவி 125 5ஜி ஸ்கூட்டரின் அறிமுகத்தின் வாயிலாக ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டி இருப்பதை நிறுவனம் வெளிக்காட்டி இருக்கின்றது.