‘ஆசியாவிலேயே மும்பையில் தான் அதிக கோடீஸ்வரர்கள்’ - ஹூருன் ஆராய்ச்சி நிறுவன அறிக்கை தகவல்.
‘2024-ம் ஆண்டின் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஆசியாவிலேயே மும்பையில் தான் அதிக கோடீஸ்வரர்கள் (அதாவது 92 கோடீஸ்வரர்கள்) இருக்கிறார்கள். இது சீனாவில் உள்ள பீஜிங்கை (91 கோடீஸ்வரர்கள்) விட அதிகமாகும். இந்த இடத்தை மும்பை பிடிப்பது இதுவே முதல்முறையாகும். மேலும் உலக அளவில் மும்பை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
மும்பையில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பை ஒட்டுமொத்தமாக சேர்க்கும்போது, அதன் மதிப்பு 445 பில்லியன் டாலர்கள் (44,500 கோடி டாலர்கள்) ஆகும். இது கடந்த ஆண்டை விட, 47 சதவீதம் அதிகம். இந்த அறிக்கையில் அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை (271 கோடீஸ்வரர்கள்) பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களை முறையே சீனா (814 கோடீஸ்வரர்கள்) மற்றும் அமெரிக்கா (800 கோடீஸ்வரர்கள்) பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இடம்பிடித்த சீனாவை சேர்ந்த 208 கோடீஸ்வரர்கள் இந்த ஆண்டு பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.
இந்த ஆண்டு கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதியதாக 480 பேர் இணைந்துள்ளனர். அவர்களில் 132 பேர் அமெரிக்கவை சேர்ந்தவர்கள். 94 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். 55 சீனாவை சேர்ந்தவர்கள் ஆவர். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலாவது இடத்தை பிடித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில், இவர் மூன்று முறை முதலாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ், நான்காவது இடத்தை மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க், ஆறாவது இடத்தை வாரன் பபெட், எட்டாவது இடத்தை பில் கேட்ஸ் மற்றும் பத்தாவது இடத்தை ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்கள்.