அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் AI ஹனூமான் உருவாகிறது!
சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ), வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும், திறம்படவும் செய்து முடிக்கிறது. அமெரிக்காவில் இருந்து உருவாக்கப்பட்ட ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக பல்வேறு நாடுகளில் பல்வேறு நிறுவனங்கள் ஏஐ -ஐ வைத்து அப்டேட் ஆகி வருகிறார்கள். அந்த வகையில் ‘சாட் ஜிபிடி’, கூகுளின் ஜெமினி போன்ற ஓபன் AI-களுக்கு போட்டியாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஹனூமான் என்ற ‘ஏ.ஐ’ மாடலை உருவாக்கி வருகிறது.
தொழில்நுட்பதின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவை சேர்ந்த ‘ஓபன் ஏ.ஐ’ என்ற நிறுவனம் ‘சாட் ஜிபிடி’ என்ற செயற்கை நுண்ணறிவு, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனை போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். இதனையடுத்து, பல வகையான செயற்கை தொழில்நுட்பங்கள் இணையத்தில் பயன்பாட்டில் இருந்ததால் கூகுள் நிறுவனம் சரிவைக் கண்டது.
இதனையடுத்து, ‘சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் ‘பார்ட்’ என்ற செயற்கை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், ‘பார்ட்’ தொழில்நுட்பம் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை என்றே கூறப்படுகிறது. அதனால், அனைத்து தொழில்நுட்பங்களையும் மிஞ்சும் வகையில், ‘ஜெமினி’ என்ற செயற்கை நுண்ணறிவை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக அமைந்தது. இந்த செயற்கை நுண்ணறிவின் மூலம் தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பலரும் தங்களின் பணியை இழக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் இவ்விரண்டுக்கும் போட்டியாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஹனூமான் என்ற ‘ஏ.ஐ’ மாடலை உருவாக்கி வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி என்ற சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாட்பாட் (chat bot) இதுவரையில் செயற்கை நுண்ணறிவு எட்டாத உயரத்துக்கு அதை கொண்டு சேர்த்தது என்றே சொல்ல வேண்டும். கணினி, அறிவியல், கணிதம், கலை சார்ந்த எந்த கேள்வியை கேட்டாலும், அதி நுணுக்கமான பதில்களை அதுகொடுக்கிறது. அதேபோல், கூகுள் நிறுவனம் ஜெமினி என்ற பெயரிலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்ங் ஏஐ என்ற பெயரிலும் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் தற்போது இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பாரத் ஜிபிடி என்னும் பெயரில் இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐஐடி பாம்பே உடன் கைக்கோர்த்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், இதற்காக ‘ஹனூமான்’ என்ற மாடலை புகுத்தியுள்ளது. 11 இந்திய மொழிகள் அடங்கிய ஹனூமான் மாடலை மார்ச் மாதத்தில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.