உலக மழை நாள்!
உலக மக்கள் தொகையில் 15 சதவீதத்தினருக்கு மலையும் மலை சார்ந்த பகுதிகளும்தாம் வாழ்விடமாக இருந்து கொண்டிருக்கிறது. விலங்குகள், தாவரங்களில் கால்பகுதி மலைகளில் இருக்கின்றன. தூய்மையான நீர் உட்பட பல்வேறு வளங்களின் பெட்டகமாக மலைகள் திகழ்கின்றன. மலைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐநா 1992-ல் மலைகளைப் பாதுகாப்பதற்கான பிரகடனத்தை ஏற்றது. 2002-ம் ஆண்டை சர்வதேச மலைகள் ஆண்டாக அறிவித்தது. 2003 முதல் டிசம்பர் 11 சர்வதேச மலைகள் நாளாகக்கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த மலை என்றாலே சிலருக்கு ரம்மியமான காட்சியோடு மனதிற்கு ஓர் மகிழ்வான உணர்வு ஏற்படும். அதேபோல், வெகு சிலருக்கு மலையை பார்த்தால் பணமூட்டையாகத் தெரியும். இப்படி பல்வேறு கோணங்களில் பார்க்கப்படும் மலைகள் எப்படி உருவாகியிருக்கும்? மற்றும் அதை மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்ட ஆரம்பித்தால் வரப்போகும் விளைவு என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோமா?.
சில பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு நடந்த டெக்டோனிக் தட்டுகளின் (Tectonic Plates) முரண்பாடான இயக்கமே மலைகள் உருவாக்கத்திற்கு முதன்மையான காரணம். டெக்டோனிக் தட்டுகள், பூமிக்கு அடியில் அரை-திரவ நிலையில் இருக்கும் எரி கற்களின் மேலோடுகளில் அடுக்குகளாக காணப்படும். இந்த தட்டுகள் ஒன்றோடு ஒன்று இடைவிடாமல் மோதும் போது நிலப்பகுதியில் ஒரு வித அதிர்வு ஏற்பட்டு, பின் படிப்படியாக நிலப்பரப்புகள் ஒன்று சேர்ந்து, ஒரு செங்குத்தான உருவத்தில் நாம் இப்போது காணும் இமயமலை போன்ற பல மலைகள் உலகம் முழுக்க உருவாகி இருக்கின்றன. இது போன்ற டெக்டோனிக் தட்டு மற்றொரு தட்டின் மீது சில மணித்துளிகள் உரசுவதால் தான் நிலநடுக்கம் போன்றவற்றையும் உணர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த டெக்டானிக் தட்டு ஒன்றோடு ஒன்று மோதும் செயல்முறையை தான் சப் தக்ஷன்(Subduction) என்பர். சில சமயங்களில் மலைகளின் உருவாக்கம் எரிமலை செயல்பாட்டின் மூலமும் நடந்திருக்கின்றன, அதாவது பூமிக்கு அடியில் நிகழும் அதிர்வுகளால் எரிமலையின் உட்புறத்தில் இருந்து வரும் மாக்மா (Magma) எரிகுழம்பு வெடித்து மேற்பரப்பில் கொஞ்சம் கொஞ்சமாக கொட்டும்போது அதுவே சில நேரங்களில் மலைகளாக உருவாகுகின்றன.
மலைகளின் சிறப்பு என்னவென்றுப் பார்த்தோமானால், அதில் வாழும் பல்லுயிர்களும், மரங்களும், அவற்றினிடையே ஆரவாரத்தோடு ஓடும் சிற்றருவிகளும் கண்முன்னே வருகின்றன. மலைகளின் காடுகள்தான் மழையை வருவிக்கின்றன. அந்த மழைதான் நதியாகி மக்களையும் பயிர்களையும் வாழவைக்கின்றது. நமது பூமியிலுள்ள அனைத்து நன்னீர் வளங்களில், அறுபது முதல் எண்பது விழுக்காடு வரை மலைகள்தான் வழங்குகின்றன என்பது மலைகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. நன்னீர் தருவது மட்டுமல்ல, பல்லுயிர் பாதுகாப்பு, சுற்றுலா, உணவு உற்பத்தி, பூர்வக்குடிகள் நலம் என பல வகைகளில் மனித குலத்திற்கு தோழனாக தோள்கொடுக்கிறது மலை. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் மலைகளைத்தான் நம்பியிருக்கின்றனர். கோடைகாலத்தில் நீரை வழங்கும் ஒரு சேமிப்புக் கிடங்காகத்தான் மலையை அண்ணாந்துப் பார்க்கின்றனர் மக்கள்.
சுற்றுச்சூழல் மற்றும் மனித சமுதாயத்தில் மலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பெரும்பாலும் உலகின் "நீர் கோபுரங்கள்" என்று குறிப்பிடப்படுகின்றன. ஏனெனில், அவைதான் நாம் பருகும் குடிநீர், நம் வாழ்வாதாரத்தை காக்கும் விவசாயம் என்று பல தேவைகளுக்கு உறுதுணையாக இருக்கின்றன. இதுபோக, மலைகள் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆதரித்து பல வகையான தாவர மற்றும் விலங்கு இனங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன, சில அபூர்வமான மரங்களில் இருந்து வரும் தாதுக்கள்(Minerals) மற்றும் மருத்துவ தாவரங்கள் என்று மலைகள் மனிதகுலத்திற்கு பல வகைகளில் நன்மை அளிக்கின்றன. நம் முதுகெலும்பான விவசாயம், வனவியல்(Forestry) மற்றும் சுற்றுலா போன்றவற்றின் மூலம் உள்ளூர் பொருளாதாரங்களுக்கு பெரிதும் பயனளிக்கின்றன. மேலும், மலைகள் நமக்கு ஒரு பொழுதுபோக்கு இடமாகவும், ஆன்மீக கலாச்சார ரீதியாகயாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
இந்நிலையில் மலைகளின் அழிவு என்பது அவ்வளவு எளிதில் வெளிவர முடியாத, ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். காரணம், மலைகளை சேதப்படுத்துவது எண்ணற்ற உயிரினங்களின் வாழ்விடங்களை இழக்க வழிவகுக்கும் மற்றும் பல்லுயிர்(Biodiversity) சார்ந்த சுற்றுச்சூழல் சமநிலையை முற்றிலும் சீர்குலைத்து படிப்படியாக அனைத்து உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். மலைகளின் இழப்பால் நீர் சுழற்சி முற்றிலுமாக பாதிப்படையும். முக்கியமாக மனிதர்களை பொறுத்தவரை, பொருளாதார ரீதியாக கைகொடுக்கும் இயற்கை வளங்களுக்காகவும் சுற்றுலாவிற்காகவும் மலைகளை நம்பியிருக்கும் சமூகங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர். பின் கொஞ்சம் கொஞ்சமாக மலைகளின் அளவு நம் கண்முன்னே குறைக்கப்பட்டு, பருவமழை படிப்படியாக தடைபட்டு இயற்கையாக வரும் குடிநீரை எல்லோரும் மறக்க நேரிட்டு, முற்றிலுமாக செயற்கையான குடிநீர் மற்றும் பொருட்களை நம்பியே வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இவ்வுலகில் நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மலைகளில் வாழ்ந்துவரும் நிலையில், மலைகளின் முக்கியத்துவத்தை, உன்னதத்தை, மேன்மையை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயலாற்றவேண்டும். இதை உணர்ந்துள்ள தமிழன் மலைகளுக்குத்தான் எத்தனையோ பெயர்களைச் சூட்டி பெருமைப்படுத்தியிருக்கின்றான். கிரி, மிசை, விண்டு, விலங்கல், அடுக்கல், வரை, நெடுவரை, இறும்பு, குன்று, பிறங்கல், பனிமலை, சிந்துமலை, இமமலை, கூபிகை, தேரி, எரிமலை, கன்மலை, அதன் கனிம வளங்களின் அடிப்படையில் கடுமலை, நாகமலை என்று மலைக்கு எத்தனையோ பெயர்கள். தமிழகத்தில் மலைகளை, தாயாக, அரசியாகப் பார்க்கின்றோம். ஊட்டியை மலை வாழிடங்களின் ராணி என்றும், கொடைக்கானலை மலை வாழிடங்களின் இளவரசி என்றும், வால்பாறையை மலைகளின் இளவரசி என்றும், ஏற்காட்டை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைத்து பெருமைப்படுத்துகின்றோம். மலைகளைக் காப்பதன் வழியாக மனித குலத்தை வாழவைப்போம்.
நிலவளம் ரெங்கராஜன்