ஜப்பானில் 20க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்! - சுனாமி எச்சரிக்கை!!
ஜப்பானில் நிலநடுக்கங்கள், சுனாமி ஆகியன ஏற்படுவது அந்நாட்டு மக்களுக்கு பழக்கப்பட்டதுதான் என்றாலும் கூட இன்று ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று பிற்பகல் 12 மணிக்கு மேல் 5.5 ரிக்டர் அளவு முதல் 7.6 ரிக்டர் அளவு வரை பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து 20க்கும் அதிகமான பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து, கடற்கரையோர நகரங்களுக்கு மிக அதிக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.ஆங்காங்கே சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள் திகைப்புக்கு உள்ளாகினர். சாலைகளில் பெரிய பெரிய விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. ஜப்பான் நாடு நிலநடுக்கம், சுனாமி இயற்கைப் பேரிடரை கருத்தில் கொண்டே கட்டுமானங்களை மரத்தால் வடிவமைப்பதால் கட்டிட இடிபாடுகள் பெருமளவில் ஏற்படாது. மேலும், இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததால், அதன் தாக்கம் நிலத்தில் பெரியளவில் இல்லை. ஒருவேளை பூமிக்கு அடியில் மையம் கொண்டிருந்தால் நிச்சயமாக கட்டிட சேதம் போன்றவை அதிகமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்களில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஹோன்ஷு அருகே சுமார் 15 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமகட்டா பகுதியில் கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது.
இருப்பினும், அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து, ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கி வருவதாக பல்வேறு வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஜப்பானை தொடர்ந்து வடகொரியா மற்றும் ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை!
சுனாமி அலைகள் தொடங்கியுள்ளதால் ஜப்பானிய மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், மத்திய ஜப்பானில் 3 மணி நேரத்தில் சுமார் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 30 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5க்கும் மேல் பதிவானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் என்றும் அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானில் தற்போது தாக்கியதை விட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் அடுத்த வாரம் ஏற்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கி வரும் நிலையில், வடகொரியா, ரஷ்யா நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் அவசர கால கட்டுப்பாட்டு அறையை அமைத்து ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது. நிலநடுக்கம், சுனாமி தொடர்பாக அந்த எண்ணில் தொடர்பு கொண்டு இந்தியர்கள் தகவல்களைப் பெறலாம். வழிகாட்டுதல்களைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளது. அவசர கால எண்கள் விவரம்:
+81-80-3930-1715 (யாகூப் டோப்னோ)
+81-70-1492-0049 (அஜய் சேத்தி)
+81-80-3214-4734 (டி.என்.பார்ன்வால்)
+81-80-6229-5382 (எஸ்.பட்டாச்சார்யா)
+81-80-3214-4722 (விவேக் ரதி) ஆகிய எண்களை அறிவித்துள்ளது. sscons.tokyo@mea.gov.in offfseco.tokyo@mea.gov.in இமெயில் முகவரியையும் அறிவித்துள்ளது.