தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மோனலிசா ஓவியமும் அதை வரைந்த லியொனார்டோ டாவின்சி நினைவுகளும்!

06:14 AM May 02, 2024 IST | admin
Advertisement

பாரிஸின் புகழ் பெற்ற லூவர் அரும்பொருளகத்திலிருந்து 1911-ஆம் ஆண்டு ஓர் ஓவியம் களவு போனது. ஓவியத்தைக் கூடவா திருடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவல்ல ஆச்சர்யம் அந்த ஓவியம் களவு போன பிறகு அது மாட்டப்பட்டிருந்த வெற்று இடத்தைப் பார்க்கவே அரும்பொருளகத்தில் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. ஓவியம் இருந்த இடத்தைப் பார்க்கவே உலகம் ஆசைப்பட்டது என்றால் அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் இருந்தது என்று யோசிக்கிறீர்களா? அந்த ஓவியத்தின் பெயரை சொன்னாலே உங்கள் உதடுகள் புன்னகை பூக்கும். சில காலங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அந்த 'மகா ஓவியம்' இப்போது மீண்டும் அதே லூவர் அரும்பொருளகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது என்பது வேறு விசயம். மாபெரும் ஓவியர், தேர்ந்த சிற்பி, சிறந்த கவிஞர், இசை விற்பன்னர், தத்துவ மேதை, விளையாட்டு வீரர், பொருளியல் வல்லுநர், கட்டடக்கலை நிபுனர், கடல் ஆராய்ச்சியாளர், வானியல் விஞ்ஞானி, நீர்ப்பாசன நிபுனர், இராணுவ ஆலோசகர் என பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் பிரகாசித்த ஒருவரை எப்படி அறிமுகபடுத்துவது? என்ன சொல்லி கெளரவப்படுத்துவது? அந்தக் கலைஞன் தீட்டிய அந்த அதிசய ஓவியம் மோனலிசா, அந்த தெய்வீக புன்னகையை தன் தூரிகையால் வடித்துத் தந்த மாபெரும் கலைஞன் லியொனார்டோ டாவின்சி.

Advertisement

அப்பேர்ப்பட்ட ஓவியம் உள்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்று விளங்கிய லியானர்டோ டாவின்சி, 1452-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி ‘ஆன்கியானோ’ என்ற நகரத்தில் பிறந்தார். தந்தை பெயர் பியரோ டாவின்சி. தாயார், காத்தரினா. அவரது பிறப்பில் கொஞ்சம் களங்கம் உண்டு.  வழக்கறிஞரான தந்தைக்கும், விவசாயக் கூலி வேலை பார்த்த தாய்க்கும் திருமணம் ஆகாமலேயே பிறந்தவர்தான் டாவின்சி. அவர் பிறந்ததும் தாயார் வேறு ஒருவரை மணந்து கொண்டு சென்று விட தாய்ப்பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் அவர் வளர்ந்தார்

Advertisement

டாவின்சி இடக்கையால் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். பொதுவாக அனைவரும் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக எழுதுவது வழக்கம். ஆனால் டாவின்சி வலப்பக்கமாக ஆரம்பித்து இடது பக்கமாக எழுதுவார். அவரது எழுத்துக்களை முகம் பார்க்கும் கண்ணாடியின் மூலம்தான் படிக்க முடியும். டாவின்சியின் அப்பாவும் அம்மாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். இதனால் தாயின் அன்பும், அரவணைப்பும் இல்லாமல் தந்தையுடன் வளர்ந்து வந்தார் டாவின்சி.

சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் திறமையானவராக விளங்கினார் டாவின்சி. தன்னைக் கவர்ந்த இயற்கைக் காட்சிகளை ஓவியமாக வரையத் தொடங்கினார். மகனுக்கு ஓவியத்தில் இருக்கும் ஆர்வத்தைக் கண்ட அப்பா, வெர்ரோச்சியோ என்பவர் நடத்தி வந்த ஓவியக்கூடத்தில் டாவின்சியை சேர்த்தார். ஓவியக்கூடத்தில் சேர்ந்த டாவின்சி, ஓவியம் மட்டுமில்லாமல் சிற்பம், இசை போன்ற பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். இதனால் அந்த ஓவியப்பள்ளி வாழ்க்கை டாவின்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார். டாவின்சிக்கு குதிரைச் சவாரி மிகவும் பிடித்த விளையாட்டு.

கலைக்கூடத்தில் பயிற்சி முடித்த பின் மனித வாழ்க்கையின் யதார்த்த நிலையை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தார். மருத்துவமனைக்குச் சென்று நோய்வாய்ப்பட்டிருக்கும் மனிதர்களைக் கண்டு அவர்களின் நிலையை ஓவியமாகத் தீட்டினார். மிலன் நகரத்தில் ஆட்சி செய்து வந்த லுடோவிகோ ஸ்பார்ஸாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார் டாவின்சி. ஸ்பார்ஸா கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தான். ஆல்பஸ் மலையில் பாதுகாப்பு அரண்களை அமைக்கும் பணிகளைக் கவனிக்க சென்றார் டாவின்சி. மலையின் இயற்கை அழகு அவரை மிகவும் கவர்ந்தது. அங்கே கண்ட காட்சிகளை வரைந்தார். அந்த ஓவியம் மதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், அதை ஃபிரான்ஸ் நாட்டு மன்னர் அதிக விலை கொடுத்து வாங்கி தன் அரண்மனையில் காட்சிக்கு வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஏசுநாதர் வாழ்க்கையில் முக்கிய நிகழ்ச்சியான ‘கடைசி இரவு விருந்து’ எனும் நிகழ்ச்சியை கன்னிமாடத்தின் சுவரில் வரைந்தார். சுவரின் உறுதியற்ற தன்மையின் காரணமாக அந்த ஓவியம் பழுதடைந்தது.டாவின்சி இயற்கையை மட்டுமல்லாமல், விலங்குகளையும் பறவைகளையும் மிகவும் நேசித்தார். சந்தைக்குச் சென்று கூண்டில் அடைத்து விற்கப்படும் பறவைகளை விலைக்கு வாங்குவார். கூண்டைத் திறந்து உற்சாகமாக பறவைகளை எல்லாம் வெளியே பறக்க விடுவார். இதை வழக்கமாகவே செய்து வந்தார். இதை சந்தையில் இருப்பவர்கள் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். பின்னர் அந்தக் காட்சியை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு ஓவியமாக வரைவார். அந்தளவுக்கு அவருக்கு ஞாபக சக்தி இருந்தது

மிலன் நகர் மீது ஃபிரெஞ்சுக்காரர்கள் படையெடுத்தபோது ஸ்பார்ஸாவையும் அவரது ஆட்களையும் நகரத்தை விட்டு விரட்டினார்கள். டாவின்சியும் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.வெனிஸ் மற்றும் ரோம் நகரில் சில காலம் தங்கி இருந்தார். மிலனில் மீண்டும் ஸ்பார்ஸாவின் ஆட்சி வந்ததால் டாவின்சியும் திரும்பினார். டாவின்சிக்கு சம்பளமாகக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுக்காமல் நாட்களைக் கடத்தி வந்தான் ஸ்பார்ஸா. இதனால் அன்றாட செலவுக்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார் டாவின்சி.தன் செலவுகளுக்காக பல விதமான ஓவியங்களை வரைந்து விற்பனை செய்தார்.

எந்த அறிவியல் கருவிகளும் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலகட்டத்திலேயே ஒரு தாயின் கருப்பையில் குழந்தை எப்படி இருக்கிறது என்பதை கற்பனை செய்து வரைந்திருக்கிறார். அந்த ஓவியத்துக்கும், உண்மை நிலைக்கும் வேறுபாட்டை கான்பது அரிது. ஒளி அலைகளைப் பற்றி அவர் செய்த ஆய்வுதான் பிற்காலத்தில் புகைப்பட கருவிக்கு அடிப்படையாக அமைந்தது. மனிதர்களை ஓவியமாக வரைந்த போது மனிதனின் உடற்கூறியலை ஆராய்ச்சி செய்தார். செடிகளையும், மரங்களையும் வரைந்தபோது தாவரவியலை ஆராய்ந்தார். அந்தக் காலகட்டத்திலேயே விமானத்தின் மாதிரியை வடிவமைத்தார். நீராவி பற்றியும், பீரங்கிகள் பற்றியும், கப்பல் வடிவமைப்பு பற்றியும் சிந்தித்து வரைந்தார்.

பல நூற்றாண்டுகள் கழித்து உருவானவற்றையும், அந்த ஓவியங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது விஞ்ஞானிகள் மலைத்தனர். ஏனெனில் எதிர்காலத்தை தத்ரூபமாக சித்தரிந்திருந்தார் டாவின்சி. இவ்வுளவு சிறப்புகள் இருந்தும் டாவின்சியின் பெயரை நமக்கு நினைவு படுத்துவது ’மோனலிசா’ என்ற அந்த மந்திரப் புன்னகை ஓவியம்தான். இந்த காலகட்டங்களில் அவர் வரைந்த பல ஓவியங்களில், ‘மோனாலிசா’ குறிப்பிடத்தக்க வகையில் அற்புதமான படைப்பாக அமைந்தது. இது உலகப் புகழ் பெற்றது. மோனாலிசா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது. அற்புதமாகக் காட்சியளித்த அந்த ஓவியத்தை ஃபிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் 12 ஆயிரம் பிராங்குகள் கொடுத்து வாங்கினார்.

இன்று வரை இந்த உலகத்த்தில் எத்தனையோ ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இன்றும் மிகச் சிறந்த திறனாய்வுக்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்ற ஒரு ஓவியம் என்றால் அது மோனாலிசாவின் ஓவியம் தான். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் என்பதால், இதனை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சொல்லப்போனால், இன்றும் இந்த ஓவியத்தின் மீது பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில், தற்போது இந்த ஓவியம் உள்ளது. இந்த புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தவர் பெயர் தான் லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci). இந்த ஓவியத்தின் இரகசியமானது பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஓவியம் லியொனார்டோ டா வின்சி இறந்த பின்பும் 500 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது.

ஆனால் இந்த ஓவியத்தின் பின் இருக்கும் இரகசியம் மற்றும் சதிக் கோட்பாடானது, டான் பிரவுனின் நாவலான 'டா வின்சி கோட்' வெளியான பின்பு தான் தெரிந்தது. மேலும் அதிகம் விற்பனையாகியுள்ள, இந்த வரலாற்று சிறப்புமிக்க நாவல் மோனாலிசாவின் அடையாளம் மற்றும் அவரது புன்னகையின் இரகசியம் மீது நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியது. அவற்றில் எழுந்த சிலவற்றைப் பார்ப்போமா!!!

மோனாலிசா யார்?

வரலாற்று சிறப்புமிக்க மோனாலிசா, ப்னோரென்டைன் எனப்வரின் மனைவி. இவரது உண்மையான பெயர் லிசா டெல் ஜியோண்டா. ஆனால் இந்த ஓவியத்தில் இருப்பது தான் உண்மையான மோனாலிசா என்பதற்கு வேறு எந்த ஒரு ஆதாரமும் இல்லை

புன்னகையின் இரகசியம்

நிறைய மக்கள் மோனாலிசாவின் புன்னகையில் நிறைய மர்மங்களை கண்டறிந்துள்ளனர். ஏனெனில் உதட்டில் புன்னகை இருந்தாலும், அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது. எனவே தான், இவரது இந்த புன்னகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில புரியாத கேள்விகள்

மோனாலிசா கர்ப்பிணியா?

மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு, உட்கார்ந்து இருக்கிறார் என்று நினைக்கின்றனர். உண்மையிலேயே லிசா டெல் ஜியோண்டா, இந்த ஓவியம் வரையும் போது தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார்.

மோனாலிசா ஒரு ஆணா?

சில ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு ஆண் என்று நிரூபித்துள்ளனர். ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது என்பதாலேயே தான்.

மோனாலிசா லியொனார்டோவின் அம்மா?

மேலும் சில ஆய்வாளர்கள் மோனாலிசாவின் ஓவியத்தை ஆராய்ந்ததில், இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது என்று சொல்கிறது.

டா வின்சி தான் மோனாலிசாவா ?

ஒரு சில ஆராய்ச்சியாளர்கள், மோனாலிசா ஓவியமானது, டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் இந்த ஓவியத்தை நன்கு ஆராய்ந்ததில், டா வின்சிக்கும், ஓவியத்திற்கும் உள்ள ஒற்றுமை நன்கு புலப்படுவதாகவும் கூறுகின்றனர்.

ஆமோன் மற்றும் எலிசா: ஆண் மற்றும் பெண்

சில வரலாற்று ஆசிரியர்கள், மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை என்று கூறியுள்ளனர். ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது என்று கூறுகின்றனர்.

ஏன் புருவமில்லை?

மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது. எனவே இது ஒரு பெரும் சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

கோல்டன் டிரையாங்கிள்

சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு சிறந்த சமச்சீர் என்ற அடிப்படையில் இருப்பதாக நம்புகின்றனர். ஏனெனில் இந்த ஓவியத்தின் முன் நின்று அதனைப் பார்த்தால், அந்த ஓவியம் நம்மைப் பார்ப்பது போன்றே இருக்கும். இதனைப் பற்றி விரிவாக டான் ப்ரௌன் அவரது நாவலில் தெளிவாக கூறியுள்ளார்.

கணினி உலகில் ஏறக்குறைய எல்லோருக்கும் பிடித்தவர் “பில்கேட்ஸ்”. உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர். மைக்ரோசாப்ட் என்ற மாபெரும் நிறுவனத்தின் முதலாளி. இத்தனை சிறப்புகளை சொல்லிக் கொண்டாலும், இன்று டாவின்சியின் கிடைத்தற்கரிய பல பொக்கிசங்களை பாதுகாத்து வருபவர் என்ற முறையில் எல்லோரின் மதிப்பையும் பெற்றிருக்கின்றார்.

அறிவியல் துறையிலும் ஆர்வம் காட்டிய டாவின்சி, நூல் நூற்கும் இயந்திரம், திருகாணி செய்யப்பயன்படும் கருவி, மண் தூக்கும் கருவி போன்றவற்றுக்கான வரைபடங்களை வரைந்தார். மேலும் விண்மீன்களைப் பற்றி முதன்முதலில் கண்டுபிடித்த பெருமையும் அவரையே சேரும். பறக்கும் எந்திரங்கள், பாராசூட், ராணுவ டாங்கிகள் போன்றவற்றுக்கான மாதிரிப் படங்களையும் முதலில் வரைந்தார். பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொருட்களை பல வருடங்களுக்கு முன்பே வரைபடமாக டாவின்சி வரைந்து இருப்பது வியப்புக்கு உரியது. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய டாவின்சி 1519-ஆம் ஆண்டு இதே மே மாதம் 2-ஆம் தேதி இறந்தார்

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
anatomyArchitectastronomybotanycartographydraughtsmanengineerLeonardo da Vinci.Mona LisapainterPaintingpaleontology.portrait paintingScientistsculptortheorist
Advertisement
Next Article