மோடியின் காலம் முடிந்து விட்டது!?
கடந்த சில நாட்களாக ஒன்றியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெயர் அதிக ஊடக வெளிச்சத்திற்கு வந்திருப்பதை பாரதீய ஜனதாவில் நிகழும் ஒரு புதிய மாற்றமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.கடந்த 10 ஆண்டுகளில் பெரியவர் மோடியைத் தவிர பாரதீய ஜனதாவின் பிற தலைவர்கள் யாரும் முன்னிறுத்தப்பட்டதில்லை, அமீத் ஷா அவ்வப்போது சலனத்தை ஏற்படுத்துவார், ஆனால் பெரும்பாலும் அது பெரியவர் மோடியின் சிந்தனைகளை செயலாக்கம் செய்யும் சலனமாகத்தான் இருக்கும்.நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் செல்லப் பிள்ளைகள், இதில் நிதின் கட்கரி நேரடிப் பிராமணர் என்பதால் ஆர்.எஸ்.எஸ் கொஞ்சம் யோசிக்கும், யோகி ஆதித்யநாத்தின் பழைய முகம் அகிலேஷ் யாதவின் பிற்படுத்தப்பட்ட மக்களின் எழுச்சியால் சிதைந்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் அடிப்படைவாத இயக்கமானது நவீன இந்தியாவில் வர்ணாசிரம தர்மத்தை நிலைநாட்டி இந்தியாவில் ஒரு இந்துத்துவ அரசை நிர்மாணிக்க வேண்டும் என்பதில் எப்போதும் தீவிர ஆர்வம் கொண்டது. இந்துத்துவ அடிப்படைவாதக் கோட்டையான நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தின் உள்ளார்ந்த நோக்கம் பழைய வர்ணாஸ்ரம இந்தியாவை அழியாமல் பாதுகாப்பது.இந்துத்துவ அடிப்படைவாதத்தில் பிராமணர்களுக்குக் கிடைக்கிற பிறப்பின் அடிப்படையிலான தகுதிகளைப் பாதுகாப்பது, அதனூடாக இந்திய அரசியலில் தங்களது அதிகார மையங்களை தக்க வைப்பது, இந்திய வளங்களையும், உழைப்பையும் சுரண்டுவது...இவைதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நீண்டகால இலக்கு.இந்த இலக்கை முழுமையாக அடைவதற்கு நிறுவனமயமாக்கப்பட்ட இந்துமதத்தை இந்தியாவின் ஒற்றை அடையாளமாக மாற்றுவது ஒன்றுதான் எளிய வழிமுறை. கொள்கை அடிப்படையிலான இஸ்லாமிய எதிர்ப்பு, தலித்துகளுக்கு எதிரான பல அரசியல் நகர்வுகளை பாரதீய ஜனதா முன்னெடுப்பதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.
இதற்கு பிற சாதி இந்துக்களை அவர்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவார்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான, தலித்துகளுக்கு எதிரான பல்வேறு வன்கொடுமைகளில் ஆர்.எஸ்.எஸ் இயக்கமோ, பிராமணர்களோ நேரடியாக களத்தில் இறங்க மாட்டார்கள். சாதி இந்துக்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி ஒரு கருவியாகத்தான் அவர்கள் மோடியையும் களமிறக்கினார்கள்.பிராண்ட் மோடியை அவர்கள் வெற்றிகரமாக நிறுவி இந்திய அரசியலில் பல்வேறு வர்ணாசிரமக் கோட்பாடுகளை சட்டங்களாக்கி நிறைவேற்றிக் கொண்டார்கள். அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கம், CAA, EWS இட ஒதுக்கீடு போன்றவையும், இந்திய ஆட்சியதிகாரத்தில், நீதி மற்றும் தேர்தல் கமிஷன் போன்றவற்றில் அவர்கள் உள்ளீடு செய்த பல நுட்பமான நியமனங்களும், சட்ட திருத்தங்களுடன் ஆர்.எஸ்.எஸ் கடந்த பத்தாண்டுகளில் மோடியின் வழியாக நிகழ்த்திய மிகப்பெரிய மாற்றங்கள்.
மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட முகம், அந்த முகத்தின் பின்னிருந்து இயங்கும்போது பெரிய அளவில் எதிர்ப்புகளை தற்காத்துக் கொள்ள முடியும். இந்த முக்கியமான மாற்றங்களை உருவாக்க நாடாளுமன்றத்தில் அசுர பலம் தேவைப்பட்டது, நல்வாய்ப்பாக அந்த அதிகார பலம் கடந்த பத்தாண்டுகளாக பாரதீய ஜனதாவுக்கு இருந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்களின் நல்வாய்ப்பாக பாரதீய ஜனதா 240 தொகுதிகளில் சுருக்கப்பட்டது, பெரும்பான்மைக்குத் தேவையான எஞ்சிய எண்ணிக்கையை கூட்டணிக் கட்சிகள் வழங்க மோடி பலவீனமான பிரதமராக மாறினார். எதிர்க்கட்சிகளும், இந்திய மக்களும் கடந்த தேர்தலில் அரசியல் சாசனத்தையும், இட ஒதுக்கீட்டையும் உயர்த்திப் பிடித்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு ஒருவிதமான பதட்டத்தையும் உருவாக்கினார்கள்.இடையில் மோடியும், அமீத் ஷாவும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தாண்டி தங்களை குஜராத்திகளின் புதிய பனியா லாபியாக உருவகம் செய்து கொண்டார்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்குப் போக்குக் காட்டி அவர்கள் ஒரு புதிய வழியை உருவாக்கினார்கள்.
இந்துத்துவ அடிப்படைவாதம், பிராமணர்களுக்கான அரசியல் செல்வாக்கு இவற்றைத் தாண்டி பாரதீய ஜனதாவும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி முந்தைய காலங்களில் பயணிக்க முடியாது. இரண்டு கட்சிகளிலும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஆக்டோபஸ் கரங்கள் இறுக்கமாகப் படர்ந்திருக்கும். ஆனால், திடீரென்று காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி உருவாக்கிய சமூக நீதி அடிப்படையிலான மாற்றங்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பிற மாநிலக் கட்சிகளின் எழுச்சியும், அரசியல் சாசனப் பாதுகாப்பு மாழக்கங்களும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது. கடந்த பத்தாண்டுகளாக பாரதீய ஜனதா உருவாக்கிய நிறுவனமயமாக்கப்பட்ட அடிப்படை இந்துத்துவ மந்திரமான ராமர் கோவில் அரசியல் கடந்த தேர்தலில் பிசுபிசுத்துப் போனது.
உத்திரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான தோல்வி, சித்தாந்த அடிப்படையிலான பாரதீய ஜனதாவின் நீண்டகாலக் கனவுகளை உடைத்துப் போட்டது. மோடியிடம் இருந்து இயன்றவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தனக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக் கொண்டுவிட்டது. இந்திய அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த லால் கிருஷ்ண அத்வானியே திடீரென்று அரசியல் வானில் இருந்து மறக்கடிக்கப்பட்டார்.இப்போது மோடியின் கவர்ச்சிகரமான முகம் நீர்த்துப் போய் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கும் சூழலில் தான், ராஜ்நாத் சிங், இந்திய ஊடகங்களில் எப்போதும் இல்லாத வகையில் முன்னிறுத்தப்படுகிறார்.
தவிர பிரதமர் மோடியின் மிக முக்கியமான அரசு முறைப் பயணமான உக்ரைன் பயணத்தின் போதே, எப்போதும் இல்லாத வண்ணம் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கின் அமெரிக்கப் பயணமும் நிகழ்ந்திருக்கிறது. இது மோடியின் பழைய காலமாக இருந்திருந்தால் குறைந்த பட்சம் இந்த அமெரிக்கப் பயணத்தை தள்ளி வைத்திருப்பார்கள். இப்போது மோடியின் காலம் முடிந்து விட்டது, ஆர்.எஸ்.எஸ் தனது புதிய அரசியல் முகத்தைத் தேடத் துவங்கி இருப்பதாகவே தோன்றுகிறது. அது மீண்டும் ஒரு பிராமணரல்லாத, அனைவரும் இணக்கமாக இருக்கக்கூடிய முகமாக இருக்க வேண்டும். செப்டம்பர் 17 அன்று பிரதமர் மோடி தனது 75 ஆண்டுகளைத் தொடுகிறார். ஆர்.எஸ்.எஸ் தனது இலக்குகளை அடைய புதிய இணக்கமான முகம் ஒன்று தேவை, கூட்டிக் கழித்துப் பார்த்தால் பாரதீய ஜனதாவின் அடுத்த தேர்வு, உடனடியாக இல்லையென்றாலும் வரும் காலங்களில் ராஜ்நாத் சிங்காக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.