தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மோடியின் கேவலப் பேச்சை நியாயப்படுத்த முடியாது!

07:53 AM Apr 25, 2024 IST | admin
Advertisement

சாம் பிட்ரோடா பேசிய ஒரு பேச்சு பாஜகவுக்கு அல்வா கிடைத்தது போல ஆகி இருக்கிறது.

Advertisement

சாம் அமெரிக்காவில் வசிக்கிறார். காங்கிரஸின் அயலக அணித் தலைவராக இயங்கிக் கொண்டிருப்பவர். கட்சியின் கொள்கை வடிவமைப்புகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பரம்பரை சொத்து வரி பற்றி பேசி இருந்தார். அமெரிக்காவில் சில மாநிலங்களில் இந்த சொத்து வரி அமுலில் இருக்கிறது. அதாவது ஒரு பெறும் செல்வந்தர் இறந்து விட்டால் அவரது சொத்தில் பாதிதான் அவரது வாரிசுகளுக்குப் போகும். மீதியை வரியாக அரசாங்கம் எடுத்துக் கொண்டு விடும். இதற்கு Inheritance Tax என்று பெயர். இது குறித்துப் பேசும் போது சாம் பிட்ரோடா 'இது ஒரு சுவாரசியமான ஐடியா. இந்தியாவிலும் இது குறித்து யோசிக்கலாம்!' என்று சொல்லி இருந்தார்.

Advertisement

இதுதான் சர்ச்சையாகி விட்டது. அதாவது பிரதமர் மோடியின் பேச்சு 'உங்கள் சொத்தை எல்லாம் பிடுங்கி முஸ்லிம்களுக்கு கொடுத்துருவாங்க!' பேச்சுக்கு வலு சேர்ப்பது போல இந்தப் பேட்டி அமைந்து விட்டது . சாம் பிட்ரோடா பேசியது குறித்து மோடி பேசும் போது,"காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. இப்போது அது பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும் என்று சொல்கிறது. முன்பு ராகுலின் தந்தைக்கும், தற்போது ராகுலுக்கும் ஆலோசகராக இருக்கும் சாம் பிட்ரோடா, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கடினமாக உழைத்து சம்பாதிப்பவர்கள் மீது அதிக வரி திணிக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதை அவர் (சாம் பிட்ரோடா) பகிரங்கமாக கூறினார். இப்போது அவர்கள் (காங்கிரஸ்) ஒரு படி மேலே சென்று பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறோம் என்கிறார்கள். அப்படியானால், பெற்றோரிடமிருந்து அவர்களின் வாரிசுகள் பெரும் சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும். அப்படியானால், 'கை' (காங்கிரஸ் தேர்தல் சின்னம்) உங்கள் பிள்ளைகளிடம் இருந்து சொத்துகளை பறித்துவிடும்.

நீங்கள் உயிருடன் இருக்கும் வரை, காங்கிரஸ் அதிக வரி விதிக்கும். உங்கள் ஆயுள் முடிந்த பிறகு, அது உங்கள் மீது பரம்பரை சொத்து வரியைச் சுமத்தும். அவர்கள் (காங்கிரஸ்) உங்கள் சொத்துகளையும் உங்கள் குழந்தைகளின் உரிமைகளையும் பறிக்க விரும்புகிறார்கள். சாமானிய இந்தியர்கள் தங்கள் சொத்துகளை தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை. நுகர்வு கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டது அல்ல நம் நாடு. பொருளீட்டுதல், ஈட்டிய பொருளின் மதிப்பை அதிகரித்தல், பாதுகாத்தல் ஆகியவற்றில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

திருமணத்தின்போது பேரக்குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டும் என்று நினைத்து வயதான தாத்தா, பாட்டி ஆகியோர் தங்கள் சிறிய ஆபரணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். நாட்டு மக்கள் கடினமாக உழைக்கிறார்கள். அவர்களின் தேவைக்கேற்ப செலவு செய்கிறார்கள். அதேநேரத்தில், சொத்து சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இந்தியாவின் இந்த அடிப்படை மதிப்பீடு மற்றும் கலாச்சாரத்தின் மீது காங்கிரஸ் கடுமையாகத் தாக்க திட்டமிடுகிறது. காங்கிரஸை நகர்ப்புற நக்சல்கள் மற்றும் நகர்ப்புற மாவோயிஸ்டுகள் கைப்பற்றியுள்ளனர் என்று நான் சொன்னபோது, ​​அமெரிக்காவை சமாதானப்படுத்த ஏதாவது சொல்ல வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். நான் குற்றச்சாட்டுகளை கூறியபோது, அவர்கள் திரும்பி வருவது போல் நடித்தனர். ஆனால், அவர்கள் உங்கள் சொத்துகளை சூறையாடி உங்கள் குழந்தைகளின் உரிமைகளை பறிக்க நினைக்கிறார்கள். இதை நீங்கள் அனுமதிப்பீர்களா? நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பாஜக ஆட்சி அமைந்த பிறகு மக்களின் பணம் அவர்களுக்காக செலவிடப்படுகிறது. காங்கிரஸின் கண்கள் உங்கள் இடஒதுக்கீட்டின் மீது மட்டுமல்ல, உங்கள் வருமானம், உங்கள் வீடுகள், கடைகள் மற்றும் பண்ணைகள் மீதும் உள்ளன.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் சொத்துக்களையும் எக்ஸ்ரே எடுக்கப் போவதாக ராகுல் காந்தி கூறுகிறார். நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வைத்திருக்கும் சிறிய சொத்துகளையும் காங்கிரஸ் பரிசோதிக்கும். சுர்குஜாவில் உள்ள நமது பழங்குடியினர் பழங்குடியினரின் ஆபரணங்களையும் தாலியையும் அணிந்து கொள்வார்கள். இவை அனைத்தையும் காங்கிரஸ் பறித்துக்கொள்ளும். அவற்றை சமமாக பிரித்துக்கொடுக்கும். உங்களிடம் இருந்து கொள்ளையடித்து யாருக்கு விநியோகிப்பார்கள் தெரியுமா? இந்த பாவத்தைச் செய்ய நீங்கள் என்னை அனுமதிப்பீர்களா?" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஆனால் வழக்கம் போல பாஜகவின் பிரச்சாரங்களுக்கும் உண்மைக்கும் கொஞ்ச தூரம் இருக்கும் அல்லவா? அதைப் பார்ப்போம். இந்த பரம்பரை சொத்து வரி என்பது மிக மிக மோசமான ஐடியா. இந்தியாவிலும் முன்பு இந்த மாதிரி வரி அமுலில் இருந்தது. சோஷலிச சோகம் இந்தியாவைக் கவ்விக் கிடந்த கால கட்டத்தில் Estate Duty Tax என்று இருந்தது. இது சில நேரங்களில் 85% வரை கூடப் போனது. அதாவது ஒரு செல்வந்தர் இறந்து போனால் அவரது சொத்தில் சுமார் 85% வரை அரசுக்குப் போய் விடும். வாரிசுகளுக்கு வெறும் 15%தான் மிஞ்சும், என்பது கேவலமான கொள்கை. இதனை 1985ல் நீக்கியவர் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசுதான். அதற்குப் பிறகு தொண்ணூறுகளில் பல்வேறு கொள்கை வடிவங்களில், சட்டத்திருத்தங்களின் மூலம் சோஷலிச சோகத்தை முழுமையாக இந்தியாவில் இருந்து தூக்கி வீசும் அனைத்து முயற்சிகளையும் எடுத்தது நரசிம்ம ராவ் - மன்மோகன் இருவரின் காங்கிரஸ் அரசுதான். அதற்குப் பின் அதீத பொருளாதார வளர்ச்சி உருவாகி தனியார் செல்வங்கள் கூடிப் போய் பல்வேறு புதிய செல்வந்தர்கள் உருவான பின்னர் கடும் பொருளாதார சமநிலையின்மை உருவானது. அப்போது அதை சரி செய்ய இந்த வரியை ஒரு தீர்வாக பலரும் முன்வைத்திருக்கிறார்கள். பாஜகவிலும் சிலர் இந்த Inheritance Taxஐக் கொண்டு வரலாமா என்று யோசித்திருக்கிறார்கள். 2014ல் பாஜக மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா இதனைப் பரிந்துரைத்திருக்கிறார். இவர் இது குறித்துப் பேசிய ஒரு வீடியோ துணுக்கையும் காங்கிரஸ் வெளியிட்டிருக்கிறது. அதில் தெளிவாகவே அமெரிக்காவின் inheritance taxஐ மேற்கோள் காட்டி ஜெயந்த் சின்ஹா சிலாகித்திருக்கிறார்.

பாஜகவின் அமித் மால்வியா சின்ஹாவின் இந்தப் பரிந்துரையை ஆதரித்து ட்வீட்டுகள் பதிந்திருக்கிறார். அதையெல்லாம் இரண்டு நாட்களில் அவசர அவசரமாக டெலீட் செய்திருக்கிறார்கள். ஆனால் இடையில் சிலவற்றை காங்கிரஸ் ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்து விட்டிருக்கிறார்கள்.

இவற்றின் மூலம், சொத்துகளைப் பிடுங்கி பொருளாதார சமநிலையின்மையை சரி செய்வதை பாஜகவிலும் சிலர் யோசித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே இந்த விஷயத்தில் சாம் பிட்ரோடாவை வைத்து காங்கிரஸை கார்னர் செய்யும் வேலை பலிக்காது. அதை வைத்து மோடியின் கேவலப் பேச்சை நியாயப்படுத்தவும் முடியாது.

அடிசினல் ரிப்போர்ட்:

மோடி தன் பேச்சைத் திரித்து பேசியுள்ள நிலையில் , சாம் பிட்ரோடா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "55% எடுத்துக்கொள்ளப்படும் என்று யார் சொன்னது? இந்தியாவிலும் இது நடக்கும் என்று யார் சொன்னது? பாஜகவும், ஊடகங்களும் ஏன் பதற்றமடைகின்றன? தொலைக்காட்சியில் பேசும்போது, அமெரிக்காவில் உள்ள பரம்பரரை சொத்து வரிச் சட்டம் குறித்து சாதாரணமாகத் தெரிவித்தேன். இதுபோன்ற விஷயங்கள் குறித்து மக்கள் ஆலோசிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும் என்றுதான் நான் சொன்னேன். இது காங்கிரஸ் உள்பட எந்த ஒரு கட்சியின் கொள்கையாக இருக்கவில்லை" என தெரிவித்துள்ளார். அதேபோல், சாம் பிட்ரோடாவின் கருத்து கட்சியின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று காங்கிரஸ் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

Tags :
BjpcongresscontroversialModiSam bitrodaகாங்கிரஸ்சாம் பிட்ரோடாபாஜக்மோடி
Advertisement
Next Article