மோடி விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறார்?!
ஜனவரி 22, ராமர் கோவில் திறப்பு விழா ஓர் அரசியல் நிகழ்வாக, இந்திய அரசியலின் எதிர்காலத்திற்கான பரிசோதனைக் கட்டமாக மாற்றப்பட்டுள்ளது - பேரா. அபூர்வானந்த்
‘அந்தக் கோவிலில் கடவுள் இல்லை ’ என்றார் துறவி ஒருவர்.
'அரசன் கடுங்கோபமடைந்து கேட்டான், "என்ன சொல்கிறீர்?
கடவுள் இல்லையா? துறவி, நீங்கள் ஆத்திகர் போல் பேசவில்லையே? விலை மதிப்பற்ற மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க விக்கிரகத்தின் சிம்மாசனத்திலிருந்து ஒளி வீசுகிறது பாரீர். அப்படியிருக்க, கோவில் வெறுமையாக இருக்கிறது என்கிறீர்களே?'
'கோவில் வெறுமையாக இல்லை. அது முழுவதும் அரச குலத்தின் பெருமிதங்களால் மட்டுமே நிரம்பி வழிகிறது. அரசே! நீங்கள் அங்கே வைத்திருப்பது உங்களின் பெருமிதங்களின் பிரதிபலிப்பைத் தானே தவிர, இவ்வுலகைக் காக்கும் ரட்சகரை அல்ல' என்றார் துறவி.
(123 ஆண்டுகளுக்கு முன்பு ‘தீனோ தான்’ என்ற தலைப்பில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதியதை சந்திப்தோ தாஸ் குப்தா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வரிகள் இவை)இன்னும் முழுமை பெறாத ராமர் கோவில் திறப்புவிழாவில் கலந்து கொள்ள இன்று தாகூரை விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அழைத்திருந்தால் இவ்வாறுதான் பதிலளித்திருப்பார் அவர், நிகழ்வு ராமரைப் பற்றிய புகழ் பாடுவது அல்ல என்பதால் அழைப்பை ஏற்கக்கூட மறுத்திருப்பார்.
முஸ்லிம்களை இழிவுபடுத்துவதன் மூலமும், அவர்களின் உரிமைகளை நசுக்குவதன் மூலமும் மட்டுமே, இந்துக்களுக்குச் சிறப்பான சேவை செய்ய முடியும் என்று இந்து மக்களின் மனங்களைக் குழப்பி, ராமருக்கும், இந்து மக்களுக்குமான நலன்களைக் காக்கும் புரவலராகவும், பாதுகாவலராகவும் தன்னைக் காட்டிக் கொள்ளும் பாரதீய ஜனதா கட்சியின் வஞ்சக மற்றும் வன்முறைப் பிரச்சாரத்தின் வெற்றியின் கொண்டாட்டம் மட்டுமே இந்நிகழ்வு.ஆகவே, ராமர் கோவில் அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு தாகூர் தனது கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தப் புதிய கடிந்துரைகளைக் கண்டிருப்பார்.
அரசன் பெருமையை நிலைநிறுத்த இந்து மதச் சடங்கு சம்பிரதாயங்களையும் புனிதங்களையும் மீறுவது, புறந்தள்ளுவது மட்டுமல்ல. மற்றொருவரிடமிருந்து திருடப்பட்ட நிலத்தைத் தரிசிப்பதன் மூலம் புண்ணியம் கிடைக்குமா? முந்தைய காலங்களில் தாகூரின் நெருங்கிய நண்பராக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு, அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழாவில் கலந்து கொள்வதா, வேண்டாமா என்று ஒரு பெரும் குழப்பத்தில் இருப்பதாகத் தோன்றியது. ஆனால், ஜனவரி 10 அன்று, "இது தெளிவாக ஆர்.எஸ்.எஸ்/பாஜக விழா" என்று ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. பாபர் மசூதியை கிரிமினல் நடவடிக்கையால் இடித்து, பின்னர் நீதித்துறை மோசடியில் நிலத்தை அபகரித்து, அதே நிலத்தில் கட்டப்படுவதுதான் இந்த ராமர் கோவில்.
காங்கிரஸ் கட்சியின் இக்கட்டான நிலையைப் பலரும் ரசித்து வருகின்றனர். இது பாஜகவின் மாஸ்டர் ஸ்ட்ரோக், காங்கிரஸுக்கு, பிஜேபி எப்படி பொறி வைத்திருக்கிறது பாருங்கள் என்று சிலர் கைதட்டி ரசித்துக் கொண்டிருந்தபோது: காங்கிரஸ் கட்சியின் தெளிவான அறிவிப்பால், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இது வெறும் அரசியல் கட்சிகளின் பிரச்சனையா அல்லது ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சனையா என்று நாம் அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டும்? நாடு என்று சொல்லும்போது, இது அனைத்து இந்துக்களின் பிரச்சனையா என்பதை நேர்மையாக எதிர் கொள்வோம்.
ராமர் கோவிலின் கட்டுமானம் எப்படி அமைந்துள்ளது? எந்தத் தேதியில் திறக்கப்படுகிறது? இதில் யார் கலந்துகொள்கிறார்கள்? யார் கலந்து கொள்ளவில்லை என்பது பற்றி முஸ்லிம்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை, ஏனெனில், இந்த ராமர் கோவிலின் கட்டுமானத்திற்கான விலையை ஏற்கெனவே அவர்கள் கொடுத்துவிட்டனர். பாபர் மசூதி இடிக்கப்படாமல் ராமர் கோவில் கட்டப்பட்டிருக்க முடியாதா? ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற பிரச்சாரத்தின் அடிநாதம் முஸ்லிம்களைஇழிவு படுத்தும் நோக்கத்தில்தான் இருந்தது. அந்தப் பிரச்சாரத்தின் முழக்கங்களை நாம் நினைவில் வைத்துள்ளோம், அவை ராமரைப் போற்றுவதைவிட முஸ்லிம்களுக்கு எதிரானவையாகவே அமைந்திருந்ததை நாம் உணரலாம்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளையும், இரத்தக் களரிகளையும் இந்த ஆலயம் தொடர்ந்து நினைவுபடுத்தும். உச்ச நீதி மன்றத்தின் அநீதியை முஸ்லிம்களால் என்றென்றும் உறுதியாக மறக்கவே முடியாது. இந்தக் கோவில் ராமருக்கு மரியாதை செலுத்தும் நினைவுச் சின்னம் அல்ல என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள். ஏனெனில் இது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பின் சின்னமாகவும், இந்துக்கள் - முஸ்லிம்களுக்கு மேலானவர்கள் என்ற கற்பிதத்தின் வெற்றியாகவும் நிலை கொள்கிறது. இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்துக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். பெரும்பகுதி இந்துக்களைக் கொண்ட நாட்டில், இந்த விஷயத்தில் பாஜக அல்லாத சில கட்சிகள் திறப்பு விழாவில் பங்கேற்பது குறித்து ஒரு தெரிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
கோவில் திறப்பு விழா அழைப்பைக் கட்சிகள் ஏற்கவில்லை என்றால், அந்தக் கட்சி இந்துக்களின் அனுதாபத்தை இழக்கும் அபாயம் உள்ளது, அதை ஏற்றுக்கொண்டால், அரசியலில் தார்மீக அறத்தைச் சமரசம் செய்ய நேரிடுகிறது. இந்த ஊசலாட்டமே, அரசியலில் தார்மீக அற உணர்வு இந்நாட்டில் இன்றும் நீடிக்கிறது என்பதையும் வெளிக்காட்டுகிறது. இதை மேலோட்டமாகப் பார்த்தால், மதச்சார்பின்மை பற்றியது என்பது மட்டும் அல்ல, அதுவும் அறத்தின் அதன் ஒரு பகுதியே. ஒரு பெரிய பருந்துப் பார்வையில் பார்த்தால் நீதியின் அறத்தைப் பற்றியது. இந்த ஆலயம் ஒரு மாபெரும் அநீதியின் சின்னம் என்பதை நாம் அறிவோம், அநியாயத்தைக் கொண்டாடுவது நமக்கு ஏற்புடையதல்ல. ஆனால் இந்த அம்சங்களைக் கருத்தில் கொள்வதற்கு முன், மேலும் சில கேள்விகள் எழுகின்றன. கோவில் திறப்பு விழாவில் எந்தக் குறையும் தெரியாதவர்களுக்கும், அது புனிதமான இடம் தான் என்று நினைப்பவர்களிடமும் தான் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது.
ராமர் கோவில் இன்றும் முழுமை அடையாமல் இருப்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதன் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அப்படியென்றால் கோவில் கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கருவறையைத் திறந்து வைக்க என்ன அவசரம்? பல நேரங்களில், சில நடைமுறை நிர்பந்தங்கள் காரணமாக முழுமையடையாத ஒரு வீட்டின் கிரகப்பிரவேசச் சடங்குகள் செய்யப்படுவது யதார்த்தம். உதாரணமாக, குடும்பத்தில் இருக்கும் ஒரு முக்கியமான நபர் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளது, ஒருவரின் பெற்றோர்கள் மிகவும் வயோதிகமடைந்து விட்டனர், அவர்கள் வாழ்நாளில் தங்கள் குழந்தைகளின் சொந்த வீட்டில் குடியேறுவதை உயிரோடு இருக்கும்போது பார்க்க முடியுமா போன்ற சூழலில் நடைபெறும்.
ஆனால் முழுமைப்பெறாத கோவிலில் ராமரின் விக்கிரகத்தை நிறுவுவதற்கு ஏன் இவ்வளவு பதற்றம்? ராமர் வெளியில் இருந்தால் குளிரில் நடுங்குவார் என்ற காரணமா? அல்லது மழையிலிருந்து அவரைப் பாதுகாக்கச் செய்யப்படுகிறதா? இந்த அவசரத்துக்கு என்ன காரணம்? ராமரின் உண்மையான பக்தர்கள் யாரும் அவசரப்படவில்லை, அதாவது ராமரின் அரசியல் பக்தர்கள் அல்லாதவர்களுக்கு உடனடியாகக் கோவிலைத் திறந்து வைத்துவிட்டு அவசரமாக வேறு வேலைகளுக்குச் செல்ல வேண்டிய அவசர கதி எதுவும் கிடையாது.முழுமையடையாத கோவிலில் ராமரை நிறுவுவது அவரைச் சிறுமைப்படுத்தும் என்பதைத் தெரிந்தே பாஜகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இன்னொரு சுப காலம் வராது என்பதற்காகவா? இல்லை, இந்த அவசரத்திற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே உள்ளது என்று தங்களை உண்மையான ராம பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் உட்பட நாம் அனைவரும் அறிவோம்: மூன்று மாதங்களுக்குப் பிறகு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் மட்டுமே.
தேர்தலை முன்னிலைப்படுத்தி, ராமரைப் பின்னுக்குத் தள்ளி அவர் பெயரில் கோவில் எழுப்பியதைச் சாதனையாக பா.ஜ.க பெருமிதம் கொள்ளும் வகையில் அதை மக்களிடம் ஊதிப் பெரிய வகையில் தனது அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப் பார்க்கிறது. பாபர் மசூதி நிலத்தில் நரேந்திர மோடி பூமி பூஜை செய்யும் புகைப்படங்கள் இன்றும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அவை சற்று பழையதாகிவிட்டன. ஆனால், நரேந்திர மோடியை இந்தியாவின் ‘முதல் இந்து’வாக நிலை நிறுத்த, அவர் ஒரே நேரத்தில் புரோகிதராகவும், வழிபடுபவராகவும் இருக்கும் மேலும் நிறைய புகைப்படங்கள் தேவைப்படுகின்றன. மோடிக்கும் அவரது கட்சியினருக்கும் இதுபோன்ற புகைப்படங்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். அயோத்தியில் ‘ராமர் சிலையை’ பிரதிஷ்டை செய்யும் பிரதமரின் புகைப்படம், மோடியை இந்துக் கலாசாரத்தின் அடையாளமாக, ராமரை அவரது சொந்த வீட்டிற்கு அழைத்து வந்த ‘ராஜாவாக’ உயர்த்தும். ராமரைப் பிரதிஷ்டை செய்யும் புகைப்படம் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5, 2020 அன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்றார்.இந்துத்துவ மனப்பான்மையிலிருந்து பார்த்தால், இந்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைவராக மோடியின் பிம்பத்தை உறுதிப்படுத்தும் பிரச்சாரத்தில் ‘ராமர் சிலையை’ பிரதிஷ்டை செய்யும் மோடியின் புகைப்படம் மிகவும் முக்கியமானது. ராமர் கோவில் அறக்கட்டளையின் செயலாளர், சம்பத் ராய் கூறியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ராஜா என்பவர் விஷ்ணுவின் அவதாரம் என்றும், அவரைப் பொறுத்தவரை மோடிதான் ராஜா என்றும் அவர் உறுதியாகக் கூறுகிறார்; எனவே, மோடி விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
தார்மீக சந்தேகங்கள்:
------
🛕 அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ராமர் கோவிலில் ‘ராமரின் சிலையை’ பிரதிஷ்டை செய்யப்பட்ட படங்கள் மற்ற எந்த முழக்கங்களை விடவும் அல்லது வாக்குறுதிகளைத் தாண்டியும் 'இந்து உளவியலில்' தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாஜக நம்புகிறது.
🛕 பிஜேபி அரசின் நிர்வாகத் தோல்விகளை மறைத்து அதைச் சாமானியரின் பார்வைகளிலிருந்து வெகுதொலைவிற்குக் கொண்டு செல்லும் என்பதை உணர நாம் ஆய்வாளராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
🛕 பிரதிஷ்டை செய்யும் புகைப்படம் ‘இந்து தேசம்’ உருவானதற்குச் சான்றாக இருக்கும்.
🛕ராமர் கோவில் நிறுவியதன் மூலம் அந்திய நாட்டினரான முகலாய காலத்தின் அனைத்துக் கறைகளையும் கழுவிய தூய்மை தேசமாக பாரதம் மாறி விடும் என்று நம்ப வைக்கப்படுவர்.நாம் இதை நன்கு உணர்ந்துள்ளோம், அதைப் போலவே, காங்கிரஸ் மற்றும் பிற பாஜக அல்லாத கட்சிகளும் உணர்ந்துள்ளனர்.
🛕 இது போன்ற நீதிக்குப் புறம்பான சமயங்களில், மகாத்மா காந்தி என்ன செய்திருப்பார் என்று திரும்பிப் பார்க்கும் இந்தியப் பாரம்பரிய மனநிலை இன்றும் தொடர்கிறது.
🛕தீமையான செயல்களை நியாயப்படுத்துவதற்குக் கூட, பெரிய மனிதர்கள் என்று அடையாளப்படுத்தப் பட்டவர்களும் காந்தியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்தியாவின் தலைமை நீதிபதி சமீபத்தில் குஜராத்தில் உள்ள கோவிலுக்குச் சென்றதை வெளிப்படையாக நியாயப்படுத்தினார்.
🛕 காந்தி இன்று இருந்தால் விஎச்பி அல்லது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தினரிடம் என்ன சொல்லி இருப்பார்?
’
🛕 காந்தி உயிருடன் இருந்திருந்தால், கோவில் அறக்கட்டளை அவரைக் கண்டிப்பாக அழைத்திருக்கும். காந்தியைப் படுகொலை செய்தவர்களே இந்த அறக்கட்டளையுடன் தொடர்புடைய அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்பது தான் நகைப்புக்குரியது.
🛕காந்தி இவர்களது அழைப்பைப் பெற்றிருந்தால், அவர் அதை நிராகரிப்பதோடு மட்டும் நின்றிருக்க மாட்டார். ஏனென்றால் காந்தியின் வாழ்வில் அவர் கோவில்களுக்குச் செல்வது என்பது அரிதாகவே இருந்தது, மேலும் கோவில்களுக்குச் செல்வதன் மூலமோ, காவி உடை உடுத்துவதன் மூலமோ, நெற்றியில் சந்தனம் அல்லது திலகமிட்டுக்கொள்வதன் மூலமோ தனது ‘இந்துத்துவத்தை’ நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு என்றைக்கும் ஏற்பட்டது இல்லை. மாறாக, அவர் தனது 'இந்துத்துவத்தை' கடந்து புதிய நடைமுறைகள் மூலம் அதை வளப்படுத்தத் தனது வாழ்நாள் முழுவதும் முயன்றார்.அவருக்கு எந்த சங்கராச்சாரியாருடையவோ அல்லது எந்த மத குருவின் ஒப்புதலுமோ தேவைப்படவில்லை. நமது இன்றைய அரசியல்வாதிகளைப் போலல்லாமல், அவர்கள் பெரும்பாலும் மக்களுக்கு முன் வேடமிட்டு நடிக்கின்றனர். ஆனால் காந்தி ஒரு தீவிரமான இந்துவாகவே வாழ்ந்தார்.
🛕 ராமர் தனது இதயத்தில் குடிகொண்டிருப்பதால், எந்தக் கோவிலுக்கும் செல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று காந்தி கூறியிருக்கமாட்டார். அது அவரைக் கோழைத்தனமாகக் காட்சிப் படுத்துவதாக அமைந்துவிடும். காந்தி போன்ற துணிச்சலான மனிதருக்கு அது பொருத்தமானதும் அல்ல. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமருக்குக் கோவில் போன்ற தவறுகள் நடந்திருக்கக் கூடாது என்று உடலாலும், உள்ளத்தாலும் போராடியிருப்பார். இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்ட வேண்டும் என்று ஒரு மாபெரும் இயக்கத்தை ஆரம்பித்து அதில் வெற்றி பெற்று, முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுத்திருப்பார்.
🛕 1947 - 48 களில், டெல்லியில் உள்ள ஏராளமான மசூதிகள், கல்லறைகள் மற்றும் தர்காக்கள் யாவும், இந்துக்கள் மற்றும் சீக்கியர்களால் சேதப்படுத்தப்பட்டுக் கைப்பற்றப்பட்டன.
🛕 இன்றைய புது தில்லியிலுள்ள மிகப் பெரும் வணிக, அங்காடி வளாகமான ' கன்னாட் பிளேசும்' ஆக்கிரமிக்கப்பட்டது, அதன் உள்ளே இந்துக் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டன. இந்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மசூதிகளைக் காலி செய்ய வேண்டியதன் அவசியத்தை காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அகதிகளால் கையகப்படுத்தப்பட்ட இஸ்லாமியக் கட்டடங்களைக் காலி செய்ய அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்; ஆனால் இந்துக்கள் மத்தியில் இது சீற்றத்தை ஏற்படுத்தியது. காந்தியின் வலியுறுத்தல் அரசாங்கத்தில் உள்ள அவரது நண்பர்களுக்கும் சங்கடத்தை உருவாக்கியது, ஆனால் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
🛕 காந்தி வெளிப்படையாகத் தனது நிலைப்பாட்டை முன்வைத்ததன் காரணமாக, இந்துக்கள் மத்தியில் செல்வாக்கு அற்றவராகத் தோன்றினார். இருந்தாலும், அந்த பயம் அவரைத் தனது நிலைப்பாட்டை மாற்றவோ அல்லது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அவரால் அமைதியாகவோ இருக்க முடியவில்லை. காந்தி ஒரு குற்றத்தைக் "குற்றம்" என்றே தெளிவாக முன் வைத்தார், அதை எந்தச் சூழலிலும் வெளிப்படுத்தத் தவறியதில்லை.
🛕 பாபர் மசூதியைக் கோவிலாக மாற்ற இரண்டு குற்றங்கள் நடந்ததை உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது. அந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக, குற்றத்தைத் திட்டமிட்டவர்களுக்குக் கோவில் கட்ட மசூதியின் நிலம் வழங்கப்பட்டது. எந்த ஒரு நியாயமான மனிதனும் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சூழ்நிலைகள் விரோதமாக இருந்தாலும், ஒரு குற்றத்துடன் சமரசம் செய்துகொண்டு எப்படி சகஜமாக வாழ முடியும்?
🛕 ராமர் கோவில் திறப்பு விழா முழு நிகழ்ச்சியையும் பாஜக ஏற்பாடு செய்துள்ளது. மஞ்சள் தடவிய அரிசிகளை அட்சதையாகத் தூவுவதற்கு மூட்டைகளில் எடுத்துக்கொண்டு கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்களை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வீடு வீடாகக் கொண்டு செல்கிறார்கள்.
🛕ஜனவரி 22 அன்று, அயோத்தி ராமர் கோவிலின் 'கர்ப கிரஹம்' திறக்கப்படுவதைக் கொண்டாடும் நிகழ்வுகளை ஒவ்வொரு வட்டாரப் பகுதிகளிலும், தெருக்களில் உள்ள கோவில்களிலும் ஏன் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது?
🛕 கோவில் திறக்கப்படுவதைத் தீபாவளியைப் போன்று ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாட வேண்டும் என்று நரேந்திர மோடி இந்துக்களிடம் சொல்வது ஏன்?
🛕இந்தத் தருணத்திற்காக 500 வருடங்களாகக் காத்திருந்ததாக அவர் ஏன் மக்களிடம் கூறுகிறார்?
🛕இந்தத் தருணத்தை முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளை உருவாக்கும் ஒரு சந்தர்ப்பமாக தனது விஷமக் கருத்தை அவர் மீண்டும் வெளிப்படுத்தப் பயன்படுத்துகிறார் என்பது நமக்குத் தெரியாதா?
🛕 ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழாவை உலகின் 55 நாடுகளில் விஎச்பி ஏன் கொண்டாடுகிறது? இந்த நிகழ்வு ஏன் அரசாங்கச் செலவில் விளம்பரப்படுத்தப்படுகிறது?
🛕இந்நிகழ்ச்சியில் நான்கு சங்கராச்சாரியார்களும் பங்கேற்க மறுத்துவிட்டனர். ராமர் கோவில் திறப்பு இந்து சமயச் சடங்குகளை, ஆகமங்களை முறையாகப் பின்பற்றி நடப்பவை அல்ல, இது பாஜகவின் அரசியல் நிகழ்வு என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
🛕 நடக்கும் நிகழ்வுகளை பொதுமக்கள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள், ராமர் கோவில் கட்டுமானத்தின் ஒவ்வொரு அடியும் பாவத்தில் நனைந்துள்ளது என்பதையும் நாம் மறவாமல் சொல்ல வேண்டும்.
🛕சில விமர்சகர்களின் கூற்றுப்படி, பாஜக இந்துக்களின் மனம் மற்றும் மத அடிப்படைகளின் வழியே அவர்களிடம் செல்வாக்கு செலுத்துகிறது. இதற்கு எதிராக காங்கிரஸ் போராட வேண்டும். இந்திய வாக்காளர்களை மனித நேயம் மிக்கவராக்கும் அறப்பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
🛕ரவீந்திரநாத் தாகூர் இன்று உயிருடன் இருந்திருந்தால், அயோத்தியில் பாஜகவின் ராமர் கோவில் குறித்துத் தனது எதிர்வினையைக் கவிதையின் வாயிலாகக் கடுமையாகச் சாடியிருப்பார். இந்தக் குற்றத்தை எதிர்த்து அண்ணல் மகாத்மா காந்தி ஒரு மாபெரும் எதிர்ப்பு இயக்கத்தை முன்னின்று வழி நடத்தியிருப்பார் அல்லது உண்ணாவிரதம் இருந்து தடுத்திருப்பார் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நாம் கூறலாம்.
🛕 ஜனவரி 22, 2024, பல வழிகளில், இந்திய அரசியலின் ஆன்மாவிற்கு ஒரு பரிசோதனை என்று நாம் கூறலாம். யார் தேர்ச்சி பெறுகிறார்கள், யார் தோல்வி அடைகிறார்கள் என்று பார்ப்போம்.
The Wire இணைய இதழில் வெளியான இக்கட்டுரையைத் தமிழாக்கம் செய்தவர்: இரா. விஜயகுமார்.