அமெரிக்காவின் மனிதாபிமானமற்றப் போக்கை மோடி அரசு உணர வேண்டும்!
அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய 15,756 இந்தியர்களில் 104 பேரை, முதல் கட்டமாக தனது இராணுவ விமானத்தின் மூலம் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறது அமெரிக்கா. திருப்பியனுப்பியதில் தவறில்லை. ஆனால், அவர்கள் கை விலங்கிடப்பட்டும் கால்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டும் அனுப்பியதுதான் பிரச்னையாகியிருக்கிறது.ஐரோப்பியர்களின் குடியேற்ற நாடுதான் அமெரிக்கா. அப்படி அவர்கள் குடியேறியபோது, அந்தக் கண்டத்தின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்களை எப்படி நடத்தினார்கள், ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து அடிமை வியாபாரிகளால் பிடித்துவரப்பட்டு விற்கப்பட்ட கறுப்பின மக்களை விலைக்கு வாங்கி, எப்படியெல்லாம் நடத்தினார்கள் -உழைப்பைச் சுரண்டினார்கள் என்பனவெல்லாம் உலகறிந்த சரித்திரம்.அவர்கள் அப்படித்தான்! எனவே, அதை விட்டுவிட்டு நம் விஷயத்திற்கு வருவோம்.
இராணுவ விமானம் எப்படியிருக்கும்? அனைவரும் நமது குடியரசு தின விழாவின்போது, நமது இராணுவத்தினர் விமான சாகசங்கள் செய்யும்போதெல்லாம் குழந்தைகளின் உற்சாகத்தோடு கண்டு வியந்து பாராட்டியிருக்கிறோம். அந்த விமானங்களின் உள்பகுதி எப்படியிருக்கும்? நமது குடியரசுத் தலைவரும் பிரதமரும் இராணுவ விமானங்களில்தானே பயணிக்கிறார்கள், நன்றாகத்தானே இருக்குமென்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தால் அது முற்றிலும் தவறு. அவர்கள் பயணிக்கும் விமானம், பயணிகளின் விமானங்களை விடவும் பலமடங்கு வசதியானவை. அவை, இராணுவத்தின் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் உள்ள பயணிகள் விமானங்களே தவிர, இராணுவ விமானங்கள் அல்ல.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் நடந்த யுத்தத்தின் போது, அங்கே அமைதியைக் கொண்டுவரும் நோக்கத்தில், 1987- 1990 வரையில், இந்திய அமைதி காக்கும் படை ( IPKF ) அங்கே இருந்தது. அப்போது நான் நமது இராணுவ விமானத்தில், சென்னையிலிருந்து திருகோணமலைக்கு இரண்டு முறை சென்று வந்திருக்கிறேன். விமானத்திற்குள் ஒன்றுமே இருக்காது. காலியாகத்தான் இருக்கும். அதில், இராணுவத் தளவாடங்களையும் வீரர்களுக்குத் தேவையான பொருள்களையும்தான் ஏற்றிச் செல்வார்கள். விமானத்தின் இருபுறங்களிலும் உள்ள உள்புறச் சுவரோரங்களில் ஆங்காங்கே சில பலகைகள் ஒட்டிக் கொண்டிருக்கும். பயணிக்கும் வீரர்கள், அவற்றை இழுத்து அழுத்தி உட்கார வேண்டியதுதான். நான் பத்திரிகையாளனாக இருந்ததால், எனக்கும் உடன் வந்த இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கும் ஸ்பெஷலாக பிளாஸ்டிக் நாற்காலிகள் கிடைத்தன. சென்னையிலிருந்து திருகோணமலைக்கு ஒன்றேகால் மணி நேர விமான தூரம்தான் என்பதால் அதுவொன்றும் பெரிய கஷ்டமாகத் தெரியவில்லை.
மேலும் எங்களுடன் இலங்கையிலிருந்த நமது வீரர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, கோதுமை மாவு, கொத்தமல்லி, கறிவேப்பிலையிலிருந்து அத்தனை காய்கறிகளும் பழங்களும் கூடவே ‘கேகே’ என முனகியபடி கறிக் கோழிகளும் பயணித்ததால் நேரம் போனதும் தெரியவில்லை. ஆக, சீட்பெல்ட், பணிப் பெண்களின் உபசரிப்பு, ஹாய்யாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு பயணிப்பது போன்ற ‘தொந்தரவு’களெல்லாம் இல்லாமல் பயணித்தேன்! இப்படித்தான் நம் நாட்டுக்கு 104 பேரை அமெரிக்கா நம்மிடம் திருப்பியனுப்பியிருக்கிறது.
அதாவது, சரக்கு விமானத்தில் சரக்குகளைக் கட்டியனுப்புவதுபோல, அவர்களையும் சங்கிலிகளால் பிணைத்து அனுப்பியிருக்கிறது. அந்த நிலையில்தான் அவர்கள் இருபது மணி நேரத்திற்கும் மேலாகப் பயணித்திருக்கிறார்கள் என்பதைக் கேட்கும் நமக்கே கஷ்டமாக இருக்கும்போது, அனுபவித்த அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறிய குற்றவாளிகள்தான். அதற்காக இப்படியா? தூக்குத் தண்டனைக் குற்றவாளியைத் தூக்கில்தானே போடப்போகிறோம் என்பதற்காக, அந்தக் குற்றவாளியைச் சித்திரவதை செய்ய முடியுமா என்ன? இதை நமது அரசாவது மனிதாபிமானத்தோடு யோசிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.