புதிய வருமான வரி மசோதாவுக்கு மோடி அமைச்சரவை ஒப்புதல்!
நம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதில் முக்கியமாக புதிய வருமான வரி மசோதாவை மத்திய அமைச்சரவை ஆய்வு செய்தது. 60 ஆண்டுகள் பழமையான வருமான வரிச்சட்டத்துக்கு பதிலாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த மசோதாவுக்கு அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியது.
நேரடி வரிச்சட்டத்தை எளிதாக புரிந்து கொள்ள இந்த மசோதா உதவும் எனவும், இதில் விதிகள் மற்றும் விளக்கங்கள் அல்லது நீண்ட வாக்கியங்கள் எதுவும் இருக்காது என்றும் நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனையடுத்து, இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதைத்தவிர துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய கமிஷனை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியது.
தற்போதைய கமிஷனின் பதவிக்காலம் அடுத்த மாதம் (மார்ச்) 31-ந்தேதியுடன் நிறைவடையும் நிலையில், 2028-ம் ஆண்டு மார்ச் வரை இது நீட்டிக்கப்படுகிறது. இதற்காக ரூ.50.91கோடி செலவிடப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதைப்போல மத்திய அரசின் திறன் இந்தியா திட்டத்தை மறுசீரமைத்து 2026-ம் ஆண்டு வரை நீட்டிக்கவும் மந்திரிசபையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்காக ரூ.8,800 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டது என அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
மேலும் ஆந்திராவில் புதிய ரெயில்வே கோட்டங்கள் உருவாக்கத்துக்கும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அதன்படி தென் கடற்கரை ரெயில்வே மண்டலத்தின் கீழ் வால்டர் கோட்டத்தில் இருந்த ஆந்திர பகுதிகளை 2 தனி கோட்டங்களாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.