சென்னையில் 55 முக்கிய சந்திப்புகளில் நவீன சிக்னல்!
தமிழக தலைநகரான சிங்காரச் சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகி வரும் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது.மெட்ரோ ரெயில், புதிய மேம்பாலம் போன்றவற்றின் மூலம் இதனை தீர்க்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.ஆனாலும் போக்குவரத்து நெரிசல் என்பது சென்னை மக்களோடு இணைந்த ஒரு செயலாகவே மாறிவிட்டது. போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்தி நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நகரின் முக்கியமான சாலைகளில் தினமும் சிக்னலில் வாகன ஓட்டிகள் காத்து நிற்பதன் மூலமும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சிக்னல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதற்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் முக்கிய சாலைகளில் உள்ள 55 சந்திப்புகளில் “அடாப்டிவ்” சிக்னல்களை நிறுவி வருகிறார்கள். இது பழைய பாரம்பரிய சிக்னல்களை போல் அல்லாமல் தற்போதைய போக்குவரத்து நிலையின் அடிப்படையில் காத்திருப்பு நேரம் மாறும் வகையில் சரி செய்யும். நிலையான சிக்னல்களுடன், வாகன ஓட்டிகள் பெரும்பாலும் 60 முதல் 90 வினாடிகள் வரை அனைத்து பக்கங்களிலும் காத்திருக்க வேண்டும். ஆனால் புதிய ‘அடாப்டிவ்’ சிக்னல்கள் பரபரப்பான சாலைகளுக்கு பச்சை விளக்கை 120 வினாடிகள் வரை நீட்டிக்கலாம் மற்றும் குறைவான நெரிசல் உள்ள சந்திப்புகளுக்கு அதை 30 வினாடிகளாக குறைக்கலாம்.பழைய மகாபலிபுரம், மவுண்ட்-பூந்தமல்லி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, கிராண்ட் டிரங்க் சாலை போன்ற முக்கிய வழித்தடங்களில் 30 சிக்னல்கலை நிறுவவும், காலாவதியான 25 சிக்னல்களை மாற்றவும் டெண்டர் விடப்பட்டுள்ளது.
தரமணி லிங்க் ரோடு-எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சந்திப்பு, நொளம்பூர் மெயின் ரோடு- பாரதி சாலை சந்திப்பு ஆகிய சாலைகளில் நவீன சிக்னல்கள் அமைக்கப்படுகிறது. சென்னை போக்குவரத்து காவல் துறையின் இந்த திட்டத் திற்கு ரூ.11 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சிக்னல்கள் போக்கு வரத்து தேவையை மதிப்பிடு வதற்கும் காத்திருப்பு நேரத்தை கண்டறிந்து தானாகவே மாற்றுவதற்கும் வாகனத்தை கண்டறியும் சென்சார்களை பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.