தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கலைஞர் மகன் சாதித்தான் என்று பெயர் வாங்க வேண்டும்! - மு.க.ஸ்டாலின் ஆசை!

09:31 PM Sep 15, 2018 IST | admin
Advertisement

எடுபிடியாக, அடிமையாகச் செயல்படும் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். நான் ஓய்வெடுத்து விட்டால், இருளில் உள்ள தமிழகம் விடியவே விடியாது. என்று மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பேசியுள்ளார்.

Advertisement

விழுப்புரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா நடை பெற்று வருகிறது. இந்த விழாவில் தொடக்க நிகழ்வாக விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி பெரியார் விருது மும்பை வி.தேவதாசனுக்கும், அண்ணா விருது பொன்.இராமகிருஷ்ணனுக்கும், கலைஞர் விருது குத்தாலம் பி.கல்யாணம், பாவேந்தர் விருது புலவர் இந்திரகுமாரிக்கும், பேராசிரியர் விருது கவிக்கொண்டல் மா.செங்குட்டுவனுக்கும் வழங்கப்பட்டது.

Advertisement

இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், முத்தமிழ் கலைஞர் என்ற அறக்கட்டளையும் தொடங்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “உடன்பிறப்பே என்ற கலைஞரின் சொல்லுக்குக் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழகம் உருகி நின்றது. ஆட்சியில் இருந்தாலும் இல்லையென் றாலும் ஏழையின் கருத்துக்கு மதிப்பளிக்கும் நாகரிகத்தைப் பின்பற்றியவர் கலைஞர். அவரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம், விவாதிக்கலாம். அவருடைய வழியில் நானும் செயல்படுவேன். 15 ஆண்டுகளுக்கு முன்னால், இதே விழுப்புரத்தில் திமுகவின் மண்டல மாநாட்டில் தலைமை ஏற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தற்போது தலைவராக இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எடுபிடியாக, அடிமையாகச் செயல்படும் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். நான் ஓய்வெடுத்துவிட்டால், இருளில் உள்ள தமிழகம் விடியவே விடியாது. இந்திய ஜனநாயகத்துக்கு விரோதமான பாசிச ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதனால்தான், பாசிச ஆட்சி ஒழிக என்று கோஷமிட்ட மாணவியின் பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளனர். இந்துக்கள் மீது தூசு பட்டாலும் காவி புரட்சி வெடிக்கும் என்று கபட வார்த்தை பேசி தமிழகத்தைத் துண்டாட துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒன்பது பேர் இந்துக்கள் தானே. நீட்டால் இறந்த பிரதிபா இந்துதானே, கேரளாவுக்குத் தேர்வு எழுதச் சென்ற அலைக்கழிக்கப்பட்டதால் இறந்துபோன மாணவனின் தந்தை கிருஷ்ணசாமி ஸ்ரீனிவாசன் இந்துதானே, கடன் தள்ளுபடிக்காக டெல்லியில் போராடிய விவசாயிகள் இந்துக்கள் தானே?

தமிழ்நாடு மக்கள் எப்போதும் உங்களிடம் ஏமாற மாட்டார்கள். பாடம் புகட்டுவதற்கான நேரம் நெருங்கி வருகிறது. மத்திய அரசால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் முதலிடம் தமிழகத் துக்குத்தான். காரணம், ஆட்சியாளர்கள் அடிமைகளாக உள்ளனர். ஊழல் செய்வதுதான் அவர்களின் பணி. தமிழகத்தை ஆட்சி செய்ய தகுதியில்லாத ஜோக்கர்கள் ஆட்சியில் உள்ளனர். விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி உருவாகும். அப்போது, கரன்சி நோட்டுகளை எண்ணிக்கொண்டு இருப்பவர்கள், கம்பியை எண்ணுவார்கள். கலைஞர் இருந்து சாதிக்க வேண்டியதை கலைஞர் மகன் சாதித்தான் என்று பெயர் வாங்கக்கூடிய பிள்ளையாக நான் மாற வேண்டும். அதற்கு உங்களின் துணை வேண்டும்” என்று பேசினார்.

Advertisement
Next Article