மிஸ் யூ - விமர்சனம்!
அண்மைக் காலமாக சர்வ சாதாரணமாக வீடுகளில், `யாரையாச்சும் மனசுல நெனைச்சுக்கிட்டிருந்தியானா சொல்லுப்பா' என மகனையும் மகளையும் கேட்கும் அளவு தமிழ்க்குடும்பங்களில் பெற்றோர் மாறி வருவதற்கு நம் தமிழ் சினிமாவும் காரணம். நிறைவேறாமல் போன அவர்களின் காதலும் ஒரு காரணம் என்பதும் தனிக் கதை.அதே சமயம் காதல் மணம் புரிந்த ஜோடிகள் ஈகோவால் டைவோர்ஸ் வாங்குவதும் சகஜமாகிவிட்டது. இச்சூழலில் மேற்படி சப்ஜெக்ட்களை மிக்ஸ் பண்ணி ஒரு மாசாலா படம் கொடுக்க நினைத்தவர்கள் தாங்கள் சொல்ல வந்ததையே மறந்து படு திராபையான திரைக் கதையால் மிஸ் செய்ய வேண்டிய படப் பட்டியலில் மிஸ் யூ சினிமா சேர்ந்து விட்டது.
அதாவது சினிமாவில் டைரக்டராக வேண்டும் என முயற்சி செய்யும் சித்தார்த், தந்தையின் வற்புறுத்துதலால் ஆஷிகாவை திருமணம் செய்கிறார். இருவரும் மனம் ஒத்து வராமல் குடும்பம் நடத்துகிறார்கள். சாலையில் ஆஷிகா ஒரு கொலையைப் பார்த்து விட, சித்தார்த் காவல் நிலையத்தில் ஆஷிகாவை புகார் அளிக்கச் சொல்கிறார். ஆஷிகா மறுத்து விட, இருவருக்கும் இடையே மோதல் வருகிறது. இருவரும் பிரிந்து விடுகிறார்கள். அதன் பிறகு சில நாட்கள் சென்ற பிறகு சித்தார்த்துக்கு விபத்து ஒன்று நடக்க, விபத்தில் அவர் தனது சில நினைவுகளை இழந்து விடுகிறார். திருமணம் ஆனதையும் மறந்து விடுகிறது. திருமணமான விஷயத்தை மறைத்து இவரது பெற்றோர்களும், நண்பர்களும் மீண்டும் ஒரு திருமணத்தை சித்தார்த்துக்கு செய்து வைக்க முயற்சி செய்கிறார்கள். இந்த சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக பிரிந்துபோன மனைவியை மீண்டும் சந்திக்கிறார் சித்தார்த். ‘மிஸ்’ ஆன ‘மிஸஸ்’ என்ன செய்தார் என்பதுதான் 'மிஸ் யூ' படத்தின் கதை.
நாயகன் சித்தார்த்துக்கு இந்த காதல் கதை ஓரளவு பொருந்தமாகவே இருக்கிறது. காதல் கதையாக இருந்தாலும், ஹீரோயினை துரத்தி துரத்தி லவ் செய்யாமல் ல் மிக நாகரீகமாக காதல் காட்சிகளை கையாண்டிருக்கும் சித்தார்த், வசனங்களை நன்றாக பேசுகிறார் ஆனால் அதற்கேற்ற உடல் மொழி முகபாவம் தருவதில் வழக்கம் போல் கோட்டை விட்டு விடுறார். மேலும் தன்னை சாக்லெட் பாய் இல்லை என்பதை நிரூபிக்க ஆக்ஷனிலும் அசத்த முயல்கிறார்.ஆனால் சோபிக்க வில்லை. அதே சமயம் ஹீரோயினாக வரும் ஆஷிகா ரங்கநாத் க்யூட்டாக வந்து ப்ச்செக்ன்று மனதை அள்ளுகிறார். எளிதில் வசீகரிக்கும் கண்கள் தமிழ் சினிமாவுக்கு ஏற்ற கொழுக் முகம் என்று படம் முழுவதும் கனத்த இதயம் கவ்வும் மௌனத்துடன் வருகிறார். அதுதாம் இப் படத்தின் சீரியஸ் தன்மையை அதிகப்படுத்கி ஈர்க்கிறது. இனி முட்டை கண்கள் கண்ணீர் ததும்ப கவிதை பேசும் ஆஷிகாவை கோலிவுட்டில் அடிக்கடிப் பார்க்கலாம்.
ஹீரோவின் ப்ரண்ட்ஸ்களாக வரும் பாலசரவணன், லொள்ளு சபா மாறன், கருணாகரன் ஆகியோர் காமெடி தங்கள் காமெடி மூலம் அட்ராக்ட் செய்வதில் ஜெயித்து விட்டார்கள். ஆனாலும் இவர்களில் கருணாகரன் ஸ்கோர் செய்கிறார். அவரது மாடுலேசனும், டைமிங்கும் பலே சொல்ல வைக்கிறது. இவருக்கான போர்சனை கொஞ்சம் எக்ஸ்டன் பண்ணியிருக்கலாமே என்று புலம்ப வைத்து விட்டார். அதிலும் ரயில் நிலையத்தில் காதல் தோல்வியில் அமர்ந்திருக்கும் கருணாகரன் அருகே சென்று அவருக்கு சில ஐடியாக்கள் கொடுத்து உடனடி நண்பனாக சித்தார்த் மாறுவது உண்மையிலேயே இப்படிக் கூட நண்பர்கள் கிடைப்பார்களா என்ற ஏக்கத்தை கிளப்பி விடுகிறார்கள்.கீப் இட் அப் கருணா!சஷ்திகா, பொன்வண்ணன், ஜெயப்பிரகஷ், ரமா, அனுபமா குமார், சரத் லோகிதஸ்வா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் சொன்னதை செய்து விட்டு போகிறார்கள்.
மியூசிக் டைரக்ட ஜிப்ரான் இசையில் மெலோடி, குத்துப்பாட்டு என அனைத்து பாடல்களும் மோசமில்லை. பின்னணி இசையும் குட். ஆனால், படம் முடிந்த பிறகு ஒரு ஹம்மிங்கும் நினைவில் இல்லாமல் போவது ஒரு லவ் கதைக்கு படு வீக். கேமராமேன் கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவும், எடிட்டர் தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பும் காதல் கதையை கமர்ஷியல் படமாக்கி விடுவதில் பாடு பட்டிருக்கிறது.
அதே சமயம் ஸ்கீரின் பிளே அமைத்திருக்கும் ரைட்டர் டான் அசோக் என்பவர் காதலை விட கமர்ஷியல் அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தின் கனத்தை மெலிய வைத்து விட்டார். அவரது கேஷூவலான டயலாக்குகள் கூட யாதோரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் சாதாரணமாக பயணிக்க வைக்கிறது.
மொத்தத்தில் டைட்டிலுக்கான கதையை மிஸ் பண்ணி விட்டார்கள்
மார்க் 2.25.5