மின்மினி விமர்சனம்!
அப்போதெல்லாம் ஒவ்வொருவர் வாழ்வில் உருவாகும் நட்பை வசிக்கும் இருப்பிடமும், படிக்கும் பள்ளியுமே தீர்மானித்தன. ஒரே பகுதியில் குடியிருப்பவர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் படிப்பார்கள். அண்ணன்கள் இருவரும் ஒரே வகுப்பிலும், தம்பிகள் இருவரும் ஒரே வகுப்பிலும் படிக்க குடும்பங்கள் இரண்டும் நெருங்கிவிடும். அன்று பரீட்சை என்பது முதல்நாள் படிப்பு என்பதால் கூடிப் பேசவும், ஓடி ஆடவும் அவகாசம் இருந்தது.அப்பேர்பட்ட ஆரோக்கியமான ஆண் பெண் நட்பு என்பது இப்போத்தெல்லாம் சினிமாவில் கூட, மிக அரிதாக காட்டப்பட்டிருக்கிறது. இச் சூழ்நிலையில் பள்ளிகளில் இருக்கும் ஆண் பெண் நட்பின் தாக்கத்தை ப்ரண்ட்ஷிப்பை மையமாக வைத்து ஹலிதா ஷமீன் உருவாக்கிய மின்மினி இன்று வெளியாகி உள்ளது.2015ல் ஆரம்பிக்கப்பட்ட படம் அதன் பிறகு 2022 இல் தொடங்கி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட எட்டு வருட காத்திருப்பின் மூலம் ஏ ஐ இல்லாத டி ஏஜிங் முயற்சிதான் இப்படம் என்பதே ஸ்பெஷல் . எஸ்தர் அனில், கௌரவ் காளை, பிரவீன் கிஷோர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமானின் மகள் கதீஜா இசையமைத்துள்ளார். சிறு வயதில் தொடங்கி இளம் வயதினராக மாறும் கதாபாத்திரங்களுக்காக காத்திருந்து இப்படத்தை படமாக்கி இருக்கிறார் டைரக்ட்ர் என்பதால் பொறுமை கொண்ட மனசுடன் பார்க்க வேண்டும் என்பது கட்டாயம் .
கதை என்னவென்றால் ஒரு கான்வென்ட் ஸ்கூலில் ஏகப்பட்ட மாணவ மாணவிகள் இணைந்து படிக்கிறார்கள்.அதில் பாரி என்ற ஸ்டூடண்ட் குதிரை ஏற்றம், கால் பந்து போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குகிறார். இதனால் பொறாமை கொள்ளும் மாணவர் சபரி, பாரியை எதிரியாக பார்க்கிறார். அனைவரும் சுற்றுலா செல்லும் வழியில் விபத்தில் சிக்குகிறார்கள். அச்சூழலில்பாரி, சபரி உட்பட அனைவரையும் காப்பாற்றி விட்டு இறந்து விடுகிறார். அப்படி இறந்த பாரியின் இதயம் பிரவீனா என்ற மாணவிக்கு பொருத்தப்படுகிறது. பாரியின் உடல் உறுப்பு தானத்தால் உயிர் பிழைத்து புதிய வாழ்க்கையை தொடங்கும் பிரவீனா, பாரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவரது எதிர்கால ஆசைகளை அறிந்துக்கொண்டு அதை நிறைவேற்றும் நோக்கில் அவர் படித்த ஊட்டி பள்ளியில் சேருகிறார். அங்கு குற்ற உணர்ச்சியால் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பாரியின் நிலையை கண்டு அதிர்ச்சியடையும் பிரவீனா, அதில் இருந்து அவரை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதற்காக அவர் பள்ளி பருவத்தையும் தாண்டிய ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அந்த பயணம் வெற்றி பயணமாக அமைந்ததா? என்பதே ‘மின்மினி’.
இந்த படத்தில் பாரி கேரக்டரில் கெளரவ் காளை, சபரி கேரக்ட ரில் பிரவீன், பிரவீனா கேரக்டரில் எஸ்தர் அனில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால், இந்த மூவரின் மாணவ பருவ பகுதிகளும் இவர்கள் உண்மையான டீன் ஏஜர்களாக இருந்த போது அதாவது எட்டு ஆண்டுகளுக்கு முன்பே 2016ல் எடுத்து விட்டார் . இந்த சம கால பகுதியை எடுக்க மாணவர்களாக நடித்தவர்கள் இளைஞர்களாக மாறும் வரை பொறுமையாக இருந்து அவககளையே வைத்து 2023 ல் படமாக்கி உள்ளார்.இப்படி எட்டு ஆண்டுகள் வரை காத்திருந்து அதே நடிகர்களை வைத்து படம் எடுப்பது யாரும் செய்யாத சாதனை. இதற்காக ஹலிதாவை பாராட்டலாம். இந்த அம்சம் படத்திற்கு ஒரு பல மாக இருந்தாலும் மெதுவாக நகரும் திரைக்கதை கொட்டாவியை வரவழைத்து விடுகிறது.
வாழ்க்கையில் இப்படி ஒரு தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வுடன் கால் போன போக்கில் மனம் போகும் கேரகடரில் பிரவீன் கிஷோர் நன்றாக நடித்துள்ளார். இப்படி ஒரு சிறந்த தோழி நமக்கு இல்லையே என்று எண்ணும் அளவிற்கு எஸ்தரின் நடிப்பு உள்ளது. கொஞ்சம் கோபம், துள்ளல் என நடித்திருக்கிறார் கௌரவ் காளை.
குறிப்பாக இளம் வயது பருவத்தில் இடம்பெறும் பிரவீன் கிஷோர் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோரது பயணத்தின் வேகம் குறைவாக இருந்தாலும், இருவருடைய தேடல் காட்சிகளை ரசிக்க வைக்கிறது.
வித்தியாசம் காட்ட வேண்டும் என்று என்பதற்காகவே கதை சொல்லும் முறை, தொழில்நுட்ப ரீதியாக படத்தை உருவாக்கிய விதம் ஆகியவற்றுக்காக இயக்குநர் ஹலிதா சமீம் மற்றும் அவரது குழுவினர் கடுமையாக உழைத்திருப்பது காட்சிகளில் தெரிகிறது. குறிப்பாக இமாலய பயணத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா காட்சிப்படுத்திய விதம் வியக்க வைக்கிறது. அங்கிருக்கும் ஆச்சரியமான விசயங்கள் அனைத்தையும் ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வந்து சேர்த்திருப்பதோடு, அது குறித்தும் விளக்கியிருப்பது பயண விரும்பிகளை நிச்சயம் கொண்டாட வைக்கும்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மான் இதில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி உள்ளார். அறிமுக படத்திலேயே பின்னணி இசையில் முன்னணி இடம் பிடித்து விட்டார் கதீஜா.
மொத்தத்தில் கமர்ஷியல் சினிமா என்று நினைக்காமல் போவோரை திருப்திப்படுத்தலாம்
மார்க் 2.75/5