For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பிரதமர் மோடியும் மிமிக்ரி செஞ்சவர்தான் - எம்.பி.கல்யாண் பானர்ஜி விளக்கம்!

01:06 PM Dec 20, 2023 IST | admin
பிரதமர் மோடியும் மிமிக்ரி செஞ்சவர்தான்   எம் பி கல்யாண் பானர்ஜி விளக்கம்
Advertisement

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் போல மிமிக்ரி செய்து காண்பித்தார், இதை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது செல்போனில் வீடியோ எடுத்தார். உடன் இருந்த எம்பிக்கள் இதைப் பார்த்து சிரித்தனர். இது விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது. இதையடுத்து இன்ஸ்டாகிராமில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்ட நிலையில் "யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை... அவர் உண்மையிலேயே ராஜ்யசபாவில் இப்படித்தான் நடந்து கொள்வாரா? அதிலும் 2014-2019 க்கு இடையில் லோக்சபாவில் பிரதமரால் மிமிக்ரி செய்யப்பட்டதெல்லாம் எல்லோருக்கும் நினைவிருக்கிறது..." என்று கல்யாண் பானர்ஜி தெரிவித்திருக்கிறார்!

Advertisement

அதாவது மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்பு இதுவரை 141 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது திரிணமூல் காங்கிரஸின் எம்.பி கல்யாண பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின்போது செய்வதை போல நடித்துக் (மிமிக்ரி) காட்டினார். அப்போது, ராகுல் காந்தி, அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். ஜகதீப் தன்கரை போல திரிணமூல் காங்கிரஸ் எம்.பி நடித்துக் காட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

Advertisement

பாஜக இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தது. குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரும், “அரசியல் கட்சிகளுக்குள் பரிமாற்றங்கள் இருக்கலாம். ஆனால், மாநிலங்களவைத் தலைவரை கேலி (மிமிக்ரி) செய்யும் எம்.பி.,யை மற்றொரு கட்சியின் மூத்த தலைவர் வீடியோ எடுக்கிறார். இது முட்டாள்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தனது கண்டனத்தை தெரிவித்தார். இவை சர்ச்சையான நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஜக்தீப் தன்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தார்.

இது தொடர்பாக தன்கர் எக்ஸ் பக்கத்தில், “சில மாண்புமிகு உறுப்பினர்கள் அரங்கேற்றிய மோசமான நாடகம் குறித்தும், அது மாட்சிமை பொருந்திய நாடாளுமன்ற வளாகத்திலேயே அரங்கேற்றப்பட்டது குறித்தும் மிகுந்த வலியடைந்ததாக பிரதமர் மோடி என்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். இதுபோன்ற சிறுமைகளை 20 வருடங்களாக தான் அனுபவித்து வருவதாகக் கூறினார். ஆனால், அரசியலமைப்புப் பதவியில் உள்ளவருக்கு, அதுவும் குடியரசு துணைத் தலைவருக்கே, நாடாளுமன்ற வளாகத்திலேயே அத்தகைய சம்பவம் நடந்தது துரதிர்ஷடவசமானது என்று பிரதமர் கூறினார்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு,”குடியரசு துணைத் தலைவர் நாடாளுமன்ற வளாகத்தில் அவமரியாதை செய்யப்பட்டதை கண்டு மனம் நொந்து போனேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பி-க்களுக்கு கருத்துக்களை கூற உரிமை உள்ளது. ஆனால், அது நாகரிகமாகவும், மரியாதைக்குரியதாகவும் இருக்க வேண்டும். இதுவரை நாடாளுமன்றத்தில் அப்படிப்பட்ட பாரம்பரியம் தான் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதுவே எப்போதும் நடைமுறையில் இருக்க வேண்டும் என இந்திய மக்கள் எதிர்பார்க்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில்தான் ` "யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை... அவர் உண்மையிலேயே ராஜ்யசபாவில் இப்படித்தான் நடந்து கொள்வாரா? அதிலும் 2014-2019 க்கு இடையில் லோக்சபாவில் பிரதமரால் மிமிக்ரி செய்யப்பட்டதெல்லாம் எல்லோருக்கும் நினைவிருக்கிறது.தேவைப்பட்டால் அந்த வீடியோக்களை வெளியிடுகிறேன்.." என்று கல்யாண் பானர்ஜி தெரிவித்திருக்கிறார்!

Tags :
Advertisement