மனிதனின் மூளைக்குள்ளும் நுண் நெகிழிகள்! எச்சரிக்கை!
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹூ, சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஒரு ஸ்டேட்மெண்டில், பிளாஸ்டிக் என்ற நுண் நெகிழிகள், சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, மனித ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இவற்றின் வாயிலாக 'டிமென்ஷியா' என்ற மறதி நோய் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
இப்பரந்த உலகமெங்கும் மைக்ரோபிளாஸ்டிக் பெருகிவிட்டன. நாம் உண்ணும் உணவில் இருந்து தண்ணீர் பாட்டில்கள் வரை, மைக்ரோபிளாஸ்டிக் எல்லா இடங்களிலும் உள்ளது. வளர்ந்து வரும் நாகரிகத்தில், உலகம் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. பிளாஸ்டிக் பிரச்சனையை குறிப்பிடுவது மிகையாகாது. ஏனென்றால் பிளாஸ்டிக் நம் அனைவரின் வாழ்க்கையிலும் பின்னிப்பிணைந்துள்ளது.30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கடைகளுக்குச் செல்லும்போது, மஞ்சள் பைகளை எடுத்துச் சென்றோம். அப்போதிருந்து, வெறும் கைகளுடன் கடைகளுக்குச் சென்று பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை வாங்கி வருகிறோம். அதன் பிறகு, அந்த பிளாஸ்டிக் கவர்களை குப்பையாக சாக்கடையில் வீசுகிறார்கள்.
பிளாஸ்டிக் மெல்லியதாகவும் அழகாகவும் தோன்றினாலும், நம்மில் பலருக்கு அதன் அசிங்கமான முகம் தெரியாது. இதன் முக்கிய தாக்கம் என்னவென்றால், மழைநீர் நிலத்தடியில் செல்வதைத் தடுக்கிறது. பிளாஸ்டிக் நிலத்தடி நீர் மட்டம் உயருவதைத் தடுக்கிறது. இது எதிர்காலத்தில் கடுமையான குடிநீர் பிரச்சினைக்கு வழிவகுக்கும்.மனித இரத்தம், மூளை, ஆண் விந்தணுக்கள் மற்றும் கடலுக்கு அடியில் கூட பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. சில மாதக் குழந்தைகளின் மலத்தில் பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி சர்வதேச அளவில் மருத்துவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இருப்பினும், நியூ மெக்ஸிகோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், மனித மூளையில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் ஒரு ஸ்பூன் அளவுக்கு இருக்கும் என்று தெரியவந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் இது 50% அதிகரித்துள்ளது. மூளையில் பிளாஸ்டிக்கின் செறிவு கல்லீரல் அல்லது சிறுநீரகங்களை விட அதிகமாக உள்ளது, மேலும் நஞ்சுக்கொடி மற்றும் விந்தணுக்களுக்கான முந்தைய அறிக்கைகளை விட அதிகமாக உள்ளது. இதற்கான காரணம் பூமியில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவை பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. “இது உண்மையில் நிலப்பரப்பை மாற்றுகிறது. நானோமீட்டர் அளவில், இந்த அளவு வைரஸ்களின் அளவை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். டிமென்ஷியா நோயால் கண்டறியப்பட்டவர்களின் மூளை திசுக்களில் மற்ற அனைவரையும் விட 10 மடங்கு அதிக பிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில்தான் சுப்ரியா சாஹூ,''மனிதனின் மூளைக்குள்ளும் நுண் நெகிழிகள் ஊடுருவி இருக்கின்றன. சர்வதேச ஆய்வு முடிவுகளில், அவை எச்சரிக்கப் பட்டுள்ளன. மேலும், மறதி நோயை நுண் நெகிழிகள் ஏற்படுத்துகின்றன. உணவு, நீர், காற்று என நமது அன்றாட வாழ்வின் அனைத்திலும், நுண் நெகிழிகள் நிறைந்துள்ளன. இவை நமது உடலுக்குள் எளிதில் சென்று விடுகின்றன.இதன் வாயிலாக, நெகிழி என்பது புறச்சூழலுக்கான அச்சுறுத்தல் மட்டுமல்லாமல், மக்களின் ஆரோக்கியத்தின் மீதான அச்சுறுத்தலாகவும் மாறி உள்ளது. எனவே, முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு, தனிமனித விழிப்புணர்வு அவசியம்'' என்று எச்சரித்துள்ளார்