அந்த மூன்று நாட்களுக்கு மென்சுரல் கப் நல்ல தீர்வு!
பொதுவாகவே நாப்கின் பயன்படுத்தும்போது மனதளவில் ஒருவித ஒவ்வாமையோ சலிப்போ எரிச்சலோ இருக்கும். இயல்புக்கு மாறாக ஒன்றைக் கூடவே ஒட்டிக்கொண்டு திரிதல் என்பது கடினமான ஒன்றுதான். மனதை விட்டுவிட்டாலும்கூட ஒரு சிலருக்கு உடலளவில் நாப்கினால் பிரச்சினைகள் வருவதுண்டு. எரிச்சல், அரிப்பு, சிறுசிறு கட்டிகள் தோன்றுதல் போன்றவை இருக்கக்கூடும். எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும் நடக்கும்போது அவை அங்குமிங்கும் நகர்ந்து விடத்தான் செய்யும்.
ஆயிரம்தான் அறிவியல் அறிவில் முன்னேற்றம் கண்டாலும் இன்னும் நம்மால் ஒரு நாப்கினை வெளிப்படையாக எடுத்துக்கொண்டு கழிவறைக்கோ குளியலறைக்கோ செல்ல முடிவதில்லை. அதுவும் குறிப்பாக வேலைக்குப்போகும் பெண்களுக்கு அதைச் சொல்லவே வேண்டாம். கைப்பையிலிருந்து நாப்கினை எடுத்து மறைத்தவாறுதான் கொண்டுசெல்கிறோம். அல்லது கைப்பையோடு தூக்கிக்கொண்டு போகிறோம். இம்மாதிரியான மன உளைச்சல்களுக்கு மென்சுரல் கப் நல்ல தீர்வு என்றுதான் நான் சொல்வேன்.
மேலும் நாப்கினை வைத்துக்கொண்டு நடக்கும்போது இரு தொடைகளிலும் உராய்ந்து உராய்ந்து ஏற்படுகின்ற வேதனை பெரும்பாலும் எல்லாப் பெண்களுமே அனுபவித்திருப்பர். மென்சுரல் கப் பயன்படுத்தும்போது இம்மாதிரியான வசதிக் குறைபாடுகள் எதுவுமே ஏற்படாது. இன்னும் சொல்லப்போனால் மாதவிடாய் என்பதைப்போலவே தோன்றாது. பயன்படுத்திய நாப்கினை குப்பைத்தொட்டியில் போடும்போது எதிர்கொள்கின்ற சிரமங்களும் இல்லை. மற்ற நாள்களைப் போலவே இயல்பாக நடக்கவோ ஓடவோ செய்யலாம் என்பதே பெருத்த நிம்மதி. அட இதென்னங்க.. இரவில் நிம்மதியாக மல்லாந்து படுக்கலாம் போங்க. மிகவும் வசதியாக இருக்கும். பயன்படுத்திப் பாருங்கள்.
* மென்சுரல் கப் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. சிறியது (S) , நடுத்தரம் (M), பெரியது(L). பள்ளிசெல்லும் மாணவியருக்கு மட்டுமே சிறியது சரியாகவரும். மற்றவர் அவரவர் குருதிப்போக்கின் அளவைப் பொறுத்து நடுத்தரமோ பெரியதோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
* முதன்முதலில் பயன்படுத்தும்போது எப்படி வைப்பது? சரியாகத்தான் வைத்திருக்கிறோமா? என்ற ஐயம் நாள் முழுவதும் இருந்துகொண்டேதான் இருக்கும். கவலைவேண்டாம்.
* நிறைய காணொளிகள் இருக்கின்றன. 7 வடிவத்தில் அல்லது C வடிவத்தில் மடித்து உள்ளே வைக்க வேண்டும். 7 வடிவமே மிகவும் எளிதாக இருக்கிறது. முதல்முறை நன்றாகக் கொதிக்கும் நீரில் ஒரு 5 நிமிடம் போட்டுவிடுங்கள். பின்னர் எடுத்துப் பயன்படுத்துங்கள்.
* உள்ளே வைத்ததும் அடிப்பகுதியைப் பிடித்து மெல்ல அமுக்கினால் அந்த மடிப்பு விட்டு கப் இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
* அதன் பின்னர் அதை மெதுவாகக் கீழ்நோக்கி இழுக்கவேண்டும். அப்போது கப்பிலிருக்கும் காற்று வெளியாகும் சிறு சத்தம் கேட்கும். அவ்வாறு கேட்ட பின்னர் மீண்டும் சரியாக உள்ளே தள்ளி வைக்க வேண்டும். அவ்வளவுதான்.
* 4 மணிநேரம் என்று போட்டிருப்பார்கள். ஆனாலும் உங்கள் உடல்நிலையின் தன்மைக்கேற்ப 3 மணிநேரத்திற்கு ஒருமுறை சோதனை செய்து பாருங்கள்.
* வெளியிலெடுத்து அதைக் கழுவிவிட்டு மீண்டும் பழையபடியே உள்ளே பொருத்திக்கொள்ளலாம். ஒருநாளைக்கு ஒருமுறை சோப்புப் போட்டுக் கழுவினால் போதும்.
* இறுதியாகவும் வெந்நீரில் போட்டு நன்றாகக் கழுவிவிட்டு எடுத்து வைத்துவிடுங்கள்.
* ஒரு கப்பினைக் குறைந்தது 5 ஆண்டுகள் பயன்படுத்தலாம் என்று சொல்கின்றனர். மாதந்தோறும் நாப்கின் வாங்கும் செலவு பெருமளவில் மிச்சமாகும்.
* நாப்கின் கழிவுகளால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதையும் தடுக்கலாம்.
* எவ்விதத் தயக்கமுமின்றி மிகத்துணிவாக மென்சுரல் கப்பினைப் பயன்படுத்தலாம். நீங்கள் நல்லதொரு மாற்றத்தை உணர்வீர்கள். நீங்களும் மற்றவர்க்குத் துணிந்து பரிந்துரை செய்யலாம்.
Meesho செயலியில் போய்ப் பாருங்கள். நிறைய இருக்கும். பிடித்ததைத் தேர்வுசெய்து வாங்கிப் பயன்படுத்துங்கள். மகிழ்ந்திருங்கள்.
ஶ்ரீவள்ளியம்மை ஶ்ரீவள்ளி (அ.பிரபா தேவி.)