’மதிமாறன்’ - விமர்சனம்!
மனிதராய் பிறத்தலே அரிது எனும் போது ஒருவரின் உயரம், நிறம், பருமன் போன்ற அங்க அமைப்புகள் பற்றிக் கேலி பேசுவது சரியில்லை என்பது பலருக்கு புரிபடுவதில்லை. உருவக் கேலியை வளர்த்தெடுத்ததில் கணிசமான பங்கு நம் திரைப் படங்களுக்கு உண்டு. பிறர் மனம் நோகுமே என்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் அவர்களை உருவ கேலி செய்து சிரிப்பது வன்முறைக்கு ஒப்பாகும் என்பதை சுட்டிக் காட்டுவதுடன் உடற்குறைபாடு கொண்டவர்கள் எதையாவது சாதித்தால் மட்டுமே கொண்டாடுகிற, இயல்பான வாழ்க்கை வாழும் போது கேவலப்படுத்துகிற சமூகத்தின் மீது கோபத்தைக் கொட்டி இருக்கிறது மதிமாறன் என்ற சினிமா.
வில்லேஜ் ஒன்றில் போஸ்ட்மேன் எம் எஸ் பாஸ்கர். இவருக்கு இரட்டைக் குழந்தைகள். அதில் ஒருவர் தான் வெங்கட் செங்குட்டுவன் (நெடுமாறன்), மற்றொருவர் இவானா (மதி). நெடுமாறன் உயரத்தில் வளர்ச்சி குறைவாக இருக்கிறார். இதனால், பலரும் அவரை கேலியும் கிண்டலும் செய்து வருவதை எதிர்த்துக் கேட்டு கோபபடுவர்.. அதே சமயம். தனது திறமையை படிப்பிலும், அறிவிலும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வருகிறார். இவருக்கும் கல்லூரி தோழியான ஆராத்யாவிற்கும் காதல். இந்நிலையில் ஹீரோவின் சிஸ்ட்ரான , இவானா தனது கல்லூரி பேராசிரியரோடு ஓடி போய்விட்டார் என்ற செய்தியறிந்து வீட்டில் அனைவரும் உறைந்து போகின்றனர். இதனால் அப்செட்டான எம் எஸ் பாஸ்கரும் அவரது மனைவியும் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விடுகிறார்கள். இதனால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார் நெடுமாறன். கோபத்தோடு தனது சகோதரியை காண சென்னை பயணப்படுகிறார். அதே சமயம், சென்னையில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் கற்பழித்து கொல்லப்படுகின்றனர். தன் தங்கையை கண்டு பிடிக்க முயல்பவர் தனது புத்திசாலித்தனத்தால் போலீசே கண்டுபிடிக்க முடியாத அந்த கற்பழிப்பு குற்ற பின்னணியையும், குற்றவாளியையும் கண்டுபிடிக்கிறார் என்பதே மதிமாறன்படத்தின் கதை.
நிஜமாகவே உயரம் குறைவாக உள்ள வெங்கட் செங்குட்டுவன், குட்டையன் கேரக்டருக்கு ஃபர்பெக்டாக செட் ஆகி விடுகிறார்.. உருவ கேலிக்கு ஆளாகும்போதெல்லாம் ஆவேசமாவது, அப்பா அம்மாவை காப்பாற்ற முடியாமல் போகும்போது கதறித் துடிப்பது, மதி நிறைந்த மாறனாகி நடக்கும் கொலைகளுக்கான காரணத்தை துப்பறிந்து கண்டுபிடிப்பது, காவல்துறைக்கு ஆலோசனை வழங்கி வழிநடத்துவது என சுற்றிச் சுழன்றிருக்கிறார். அப்ப்டி அவர் செய்யும் விஷயங்களில் லாஜிக், நம்பகத்தன்மை எல்லாம் இல்லை என்றாலும் ஒரு அனுபவ நடிகர் என்ன நடிப்பைக் கொடுப்பாரோ அந்த நடிப்பைக் கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.
’லவ் டுடே’ போன்ற ஒரு படத்தின் மூலம் இளசுகளை கவர்ந்த இவானா, இப்படி ஒரு வேடத்தில் நடித்தது ஆச்சரியம் தான். இளம் நடிகைகள் நிராகரிக்கும் ஒரு வேடத்தில் நடித்த அவரது தைரியத்தை பாராட்டினாலும், அவருடைய கதாபாத்திரத்திற்கு முதல் பாதியுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுவதால் அவரும் அவருடைய நடிப்பும் மனதில் நிற்கவில்லை. வெங்கட் செங்குட்டுவனின் கல்லூரி தோழியாகவும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் நடித்திருக்கும் ஆராத்யா அழகிலும், அளவான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். வெங்கட் செங்குட்டுவனின் அப்பாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஆடுகளம் நரேன், பவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த், பிரவீன் குமார்.இ என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
பர்வேஸின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் ஓகே சொல்ல வைக்கிறது.
உருவ வளர்ச்சி குறைபாடுள்ள ஒருவரின் மனநிலையை வைத்து கதை எழுதி இயக்கியிருக்கும் மந்த்ரா வீரபாண்டியன் தான் சொல்ல வந்ததை உறுதிப்படுத்த மர்ம கொலைகள், கற்பழிப்புகள்,அதை நாயகனே கண்டுபிடிப்பது என்று கொண்டு போயிருப்பது கொஞ்சமும் ஒட்டவில்லை.
மொத்தத்தில் இந்த மதிமாறன் - பிலோ ஆவரேஜ்
மார்க் 2.25/5,