For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கணித மேதை சகுந்தலா தேவி 👀 பிறந்தநாள்..! 💐

08:47 AM Nov 04, 2023 IST | admin
கணித மேதை சகுந்தலா தேவி 👀 பிறந்தநாள்    💐
Advertisement

ந்தக் குட்டிப் பெண்ணின் பெயர் தேவி. அவள் அப்பா வித்தியாசமானவர். அவரின் முன்னோர்கள் கோயில் அர்ச்சகராக இருந்தார்கள். அவரோ, சர்க்கஸ் பக்கம் போனார். எண்ணற்ற வித்தைகள், பலவித மேஜிக்குகள் என அசத்தினார். அப்பாவைப் பார்த்து அந்தச் சுட்டிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

Advertisement

''அப்பா, எனக்கும் ஏதாச்சும் சொல்லித்தா!' என்றாள். அட்டைகளில் மேஜிக் சொல்லித் தந்தார் அப்பா. கொஞ்ச நேரம்தான், எல்லா அட்டைகளையும் மனப்பாடமாக ஒப்பித்தாள் தேவி. அப்போது அவள் வயது 3.

Advertisement

'இனி சர்க்கஸ் வேண்டாம்’ என முடிவு செய்த அப்பா, மகளைப் பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அவளின் அதிவேகக் கணக்குப் போடும் ஆற்றலைக் காட்டினார். ''சின்னப் பெண்ணுக்கு இவ்வளவு அறிவா? கூப்பிடு செக் பண்ணிடலாம்'' எனப் பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் அழைத்தன.

வீட்டின் வறுமையைப் போக்க, ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்து, பின் அதுவே வாழ்க்கை ஆகிப்போனது. அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு. இப்போது தேவிக்கு வயது 46. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா?

91674867692003915809866092758538016248310668014430862240712651642793465704086709659 3279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305620821016129132845564805780158806771 என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்க மூலத்தைக் கேட்டார்கள்.

கணினி 13,000 கட்டளைகளுக்குப் பிறகு, ஒரு நிமிடத்தில் பதிலைச் சொல்லத் தயாரானபோது, 546372891 என 10 நொடிகள் முன்னமே தேவி சொல்லி விட்டார். அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் நீண்ட கரவொலி எழுப்பினர்.

லண்டன் மாநகரில் 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என இரு எண்களைப் பெருக்கச் சொன்னார்கள். 28 நொடிகளில் விடையைச் சொல்லி, கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார். அவர்தான் சகுந்தலா தேவி.

தான் பள்ளிக்கல்வி பெறாவிட்டாலும் சுட்டிகளுக்காக கணிதத்தை எளிமையாகக் கதை வடிவில் சொல்லும் வகையில் பல நூல்களை எழுதினார். ''கணிதம் என்பது பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு, பிறந்த நாள், விளையாட்டு என எல்லாவற்றிலும் கணிதம் இருக்கிறது. அதை சுட்டிகளுக்கு சொல்லித் தர வேண்டும். கணிதத்தைக் கதை போலச் சொல்லித் தர வேண்டும்'' என்றார் சகுந்தலா தேவி. இன்று அவரது பிறந்தநாள்..!

அதே சமயம் கணிதவியலாளர்கள் சகுந்தலா தேவி என்பவரை கணித மேதை என்று அழைக்கமாட்டார்கள். ஏனெனில் கணிதமும் (math) கணக்கீடும் (computation) ஒன்றல்ல. சகுந்தலா தேவி அவர்களே கூட எந்த இடத்திலும் தன்னை ஒரு கணிதவியலாளர் என்று சொல்லிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவர் கணிதவியலாளர் இல்லை என்பதற்காக அவரது திறமை/சாதனை சாதாரணமானதல்ல.

அவரது கணக்கீட்டுத் திறமை மிகவும் அபாரமாக இருந்தது. இத்தகைய திறனுக்கு hypercalculia என்று பெயர். இவரது இந்த திறமையினால் இவர் மனிதக் கணினி என்றே பரவலாக அழைக்கப்பட்டார். 1977ல் சௌத் மெதடிஸ்த பல்கலைக்கழகத்தில் சகுந்தலா தேவி 201 இலக்கங்கள் கொண்ட ஒரு எண்ணின் 23வது வர்க்கமூலத்தை ஐம்பதே விநாடிகளில் கணக்கிட்டார். இவரது பதிலை ஒத்துப்பார்க்க கணினி பண்படுத்தப்பட்டது. இதைக் கணக்கிட தனியாக ஒரு நிரலாக்கம் எழுப்பட்டு கணக்கீடு நடைபெற்றது. பதிலைச் சொல்ல கணினி சகுந்தலா தேவியை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது போல் அவரது கணிக்கீட்டுத் திறமையை எடுத்துரைக்கும் பல சம்பவங்கள் உண்டு.

சகுந்தலா தேவி அவரது கணக்கீட்டு முறைகளைப் பற்றி நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார். இதைத்தவிர அவர் எந்த கணித உரைகளோ அல்லது ஆய்வுக் கட்டுரைகளோ இயற்றியதில்லை. எனவே அவர் கணித மேதை என்பதை விட அதீத கணக்கீட்டு திறமை படைத்தவர் என்பதே சரி. இதையும் தாண்டி அவர் ஒரு எழுத்தாளர் என்பது பலரும் அறியாதது. அதிலும் ஒரு சமூக விழிப்புணர்வுப் பணியை மேற்கொண்ட எழுத்தாளர். அவரது வாழ்வில் அவர் முக்கியமாக ஈடுபட்டிருந்தது ஓரினச்சேர்க்கை (homosexuality) பற்றிய விழிப்புணர்வை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் தான். இந்தியாவில் ஓரினச்சேர்க்கை பற்றிய முதல் ஆய்வுகளை இவர் தான் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் அதிவேக மனிதக் கணினியை அன்போடு நினைவுகூர்வோம்

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement