முப்படைகளில் பணியாற்றும் அனைத்து பெண்களுக்கும் பேறுகால விடுமுறை 180 நாட்கள் முழுச் சம்பளம் - ராணுவ அமைச்சகம் அறிவிப்பு.
இந்திய ராணுவ முப்படைகளில் தற்போது பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு மட்டும்தான், பேறுகால சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, குழந்தை பேறுகால விடுமுறை, 180 நாட்கள் முழு சம்பளத்துடன் வழங்கப்படும். அதிகபட்சம், இரண்டு குழந்தைகளுக்கு இந்த சலுகையைப் பெறலாம். இதைத் தவிர, குழந்தையின் 18 வயது வரை, பணிக்காலத்தில், 360 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை சலுகை வழங்கப்படும்.
அதேபோல் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுக்கும் பெண் அதிகாரிகளுக்கு, 180 நாட்கள் தத்தெடுப்பு விடுமுறை சலுகை வழங்கப்படுகிறது. அதிகாரிகள் அளவில் உள்ள பெண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இந்த சலுகைகளை, முப்படைகளிலும் பணியாற்றும் அனைத்து நிலை பெண்களுக்கும் விரிவுபடுத்தி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து பதவிக்கும் பொருந்தும்
இதுகுறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் ,``பாலின பேதத்தை குறைக்கும் வகையில் முப்படைகளில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அத ன் தொடர்ச்சியாக, அனைவரின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், எந்த பதவி, நிலையில் இருந்தாலும், அனைவருக்கும் ஒரே மாதிரியான சலுகைகள் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, முப்படைகளில் எந்த நிலையில் இருந்தாலும், பெண்களுக்கு பேறுகால விடுமுறை உள்ளிட்ட சலுகைகள் வழங்கும் திட்டத்துக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.இது முப்படைகளில் பணியாற்றும் பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்`` என கூறப்பட்டுள்ளது.