For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

குட்டீஸ்கள் கல்வி கற்க புது ரூட் போட்டு ஜெயித்த மரியா மான்டிசோரி!

06:44 AM May 06, 2024 IST | admin
குட்டீஸ்கள் கல்வி கற்க புது ரூட் போட்டு ஜெயித்த மரியா மான்டிசோரி
Advertisement

ரியா மான்டிசோரி,. இத்தாலியில் உள்ள மார்ச்சே எனும் இடத்தில், 1870 ஆக., 31ம் தேதி பிறந்தவர், அந்நாட்டிலேயே மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண் இவர் தான்.ரோம் நகரில் இவர் நடத்திய சிறார் பள்ளியில் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க ஒரு புதிய கல்வி முறையை உருவாக்கினார். இதற்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. குட்டீஸை பெரிதும் கவர்ந்து விட்ட இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள், சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். இந்த கற்றல் முறையில், தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் குழந்தைகள் அதிகம் களைப்படையாமல் இருந்தனர். இதையடுத்து, மான்டிசோரி கல்வி முறையை ஐரோப்பா முழுதும் பயன்படுத்த துவக்கினர். பின், நெதர்லாந்தில் ஆசிரிய பயிற்சி பள்ளியை நிறுவினார். 1939 முதல், 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார். 1952 மே 6ம் தேதி தன் 82வது வயதில் இயற்கை எய்தினார். அந்த சாதனை கல்வியாளர் மரியா மான்டிசோரி காலமான தினம் இன்று! அதையொட்டிய சிறப்பு தொகுப்பு இதோ:

Advertisement

நான் ஒன்றும் புத்தம் புதிய கல்வி முறையைக் கண்டுபிடித்து விடவில்லை. சின்னச் சிறிய குழந்தைகளுக்கு வாழ்வதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தேன்.கற்பது என்பது இரு வழிப் பாதை. அந்த வகையில் குழந்தைகள் காட்டிய வழியை நான் தொகுத்தேன்” என்று தனது மாண்டிசோரிக் கல்வி முறை பற்றிப் பலமுறை கூறியவர் தான் மரியா மான்டிசோரி.

Advertisement

மிகக் குறுகிய காலத்தில் உலகமெங்கும் பயணித்து, குழந்தைகள் கல்வி போதனையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் இந்த அம்மையார்.உலக அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்காக மூன்று முறை முதல் நபராகப் பரிந்துரைக்கப்பட்டவர்.இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரது மான்டிசோரி கல்வியகங்கள் மூவாயிரத்துக்கும் மேலாக உலகமெங்கும் தோன்றியிருந்தன.இந்த அபார எண்ணிக்கையைக் கொண்டேஇக்கல்வியாளரின் தாக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். மரியா மான்டிசோரி, இத்தாலி நாட்டில், சியாராவல்லி என்று சிறுநகரில் 1870-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 31-ஆம் நாள் பிறந்தார். அப்பா அலெக்ஸாண்ட்ரோ மான்டிசோரி, அம்மாரெனில்டே ஸ்டாப்பனி.இருவரும் நன்கு படித்தவர்கள்.

அக்காலத்தில் பெண்கள் பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்க அனுமதிக்கப்படவில்லை.குறிப்பாகப் பெண் மருத்துவர்கள் இல்லாத காலம். ஆரம்பத்தில் பொறியியலாளர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் மரியா மாண்டிசோரி தன் கல்லூரிப் படிப்பை முடித்தார்.ஆனால், அவரது பெற்றோர்கள் அவரை ஆசிரியராக வேண்டும் என்று ஊக்கமூட்டினார்கள்.கல்லூரிப் படிப்பை முடிக்கும் நேரத்தில், தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று தன் தந்தையிடம் கூறினார். அக்காலத்தில் பெண்கள் மருத்துவம் படிக்க இயலாது என்பதாலும், பெண்கள் மருத்துவம் படிப்பது சரியாக இருக்காது என்று கருதியதாலும் மரியாவின் தந்தை அவரது வேண்டுகோளை எதிர்த்தார். மரியா பிடிவாதமாக நின்று மருத்துவத்திற்கு முன்னோடியான ‘டிப்ளமோ டி’ என்ற படிப்பை ரோம் பல்கலையில் படித்து முடித்தார்.தொடர்ந்து ரோம் பல்கலையில் மருத்துவம் படிக்கச் சேர்ந்தார்.அங்கிருந்த மாணவர்களில் இவர் மட்டுமே பெண் என்பதால், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களாலும் புறக்கணிக்கப்பட்டார்.நிர்வாணமான, இறந்த உடல்களை ஆய்வு செய்து படிக்கும்போது, இவர் மட்டும் தனியாகச் சென்று படிக்க வேண்டியிருந்தது.எல்லாவற்றையும் சவாலாக ஏற்றுக் கொண்டு, இத்தாலி நாடு மற்றும் ரோம் பல்கலைக்கழகத்தில் முதல் பெண் மருத்துவராக வெற்றிகரமாகப் படித்து முடித்துப் பட்டம் பெற்றார்.

மருத்துவம் படித்தபோது மிகச் சிறப்பாகப் படித்ததால், ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவியைப் பெற்றார்.எனவே, கட்டணம் இன்றியே தன் கல்வியை முடித்துச் சாதனை படைத்தார்.1896-ஆம் ஆண்டு ரோம் நகரில் இருந்த சாண்டோ ஸ்பிரிட்டோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை உதவியாளராகச் சேர்ந்தார்.தொடர்ந்து குழந்தைகள் மருத்துவத்துக்காகப் படித்து குழந்தைகள் மற்றும் மனநல மருத்துவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். குழந்தை மருத்துவராக இருந்தபோது, குழந்தைகளின் செயல்கள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார்.அப்போது அவர்கள் சுயமாக சில செயல்களைச் செய்ய விரும்புவதையும், பெற்றோர்கள் மற்றும் கற்றுத் தருபவர்கள் அதைத் தடுப்பதையும் உற்று நோக்கினார்.இந்த ஆர்வம் அவரை மேலும், மேலும் குழந்தைகள் மனநலம், உணர்ச்சி வெளிப்பாடு, செயல்கள், கற்றல் சார்ந்து அதிகரிக்கவும் செய்தது.

மேலும் குழந்தைகள் உளவியல் மற்றும் கற்பித்தல் சார்ந்தும், கற்றுக்கொள்ளக் கடினப்படும் குழந்தைகளின் மனநலம் சார்ந்தும் அதிகம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை மரியாவுக்கு ஏற்படுத்தியது. பிரான்ஸ் நாட்டுக் கல்வியாளர்களான ஜீன் மார்க் இடார்டின் மற்றும் அவரது மாணவர் சேகுயின் ஆகியோரது படைப்புகளைத் தேடிக் கண்டுபிடித்துப் படித்தார் மரியா. 1897-ஆம் ஆண்டில் தனது 28-வது வயதில், டூரின் நகரில் நடந்த தேசிய மருத்துவக் காங்கிரஸ் மாநாட்டில் “போதுமான வசதிகள் மற்றும் கற்பித்தல் முறை இல்லாததே மனவளர்ச்சி குன்றிய மற்றும் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளின் துன்பங்களுக்குக் காரணம்” என்பதை வலுவாக எடுத்துச் சொன்னார். சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்குக் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கான முறையான பயிற்சி மற்றும் மருத்துவக் கல்லூரிகள் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றின் பாதிப்புகள் பற்றியெல்லாம் விரிவாகப் பேசினார்.இளம் வயதில், துடிப்போடு பலவற்றை ஆய்வு செய்து, எடுத்துரைத்த மரியா மாண்டிசோரி இந்த மாநாடு மூலம் நாடு அறியும் நபராக மாறினார்.

இடார்டு மற்றும் சேகுயின் இருவரும் அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் மற்றும் உடலியக்கத் திறன்களை வளர்க்க உதவும் கருவிகள் மற்றும் உபகரணங்களைக் கண்டறிந்திருந்தனர்.மான்டிசோரி இவற்றைப் பரிசோதித்துப் பார்த்ததுடன், தனது அனுபவ அடிப்படையிலும் சிலவற்றை உருவாக்கினார்.இவையே பின்பு மான்டிசோரிக் கல்வி முறைக்கு அடிப்படையாக அமைந்தது.

முதல் வெற்றி

1906-ஆம் ஆண்டில் அறுபது குழந்தைகள் கொண்ட ஒரு விடுதியில் சேவை செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.இந்தக் குழந்தைகள் எல்லோரும் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் என்று அந்த விடுதிக்கு வந்திருந்தவர்கள்.மாண்டிசோரி தான் உருவாக்கிய புதிய கல்விமுறையை இந்தக் குழந்தைகளுக்கு வழங்கினார்.அக்கல்வி முறை சிறப்பாக அமைந்தது.செயற்பட முடியாத நிலையில் இருந்த பல குழந்தைகள், மிகச் சிறப்பாகச் செயல்படத் தொடங்கினர்.குறைபாடில்லாத சாதாரண குழந்தைகளைப் போலவே, தேர்வெழுதி அனைவரும் வெற்றி பெற்றனர்.இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்ததன் மூலம் உலகமெங்கும் அறியப்பட்டவராக மரியா மான்டிசோரி புகழ்பெற்றார்.

இந்த விடுதிக்கு வருவதற்கு முன்பு தன்னை அவர் மிகச் சிறப்பாகத் தயாரித்துக் கொண்டதே இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது.மருத்துவராகப் பணி தொடங்கிய போது இவரது அணுகுமுறை பலரையும் கவர்ந்தது.மருத்துவம் சார்ந்த ஆய்வைத் தொடர்ந்ததோடு, சமையல் மற்றும் கைவேலைப்பாடுகளையும் ஆர்வமாகச் செய்துவந்தார் மரியா.இவரது அன்பால் ஈர்க்கப்பட்ட ஒருவர், இவரை ஒரு அனாதை இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த அனாதை இல்லத்துப் பிள்ளைகள் மனநலம் குன்றியவர்களாகவும், சிலரால் கற்க முடியும் என்றாலும் உதவி செய்ய ஆட்கள் இன்றி இருப்பதையும் கண்டார் மரியா.இந்த இல்லத்தில் அவர் கண்ட காட்சிகள் அவரை மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் சிறப்புக் கவனம் தேடும் குழந்தைகள் பக்கம் ஆய்வு செய்ய, உதவி செய்ய அழைத்தது.

எனவே, 1901-ஆம் ஆண்டு மீண்டும் பல்கலைக்கழகம் சென்று மனோதத்துவம் பற்றிப் படித்தார்.அக்காலத்தில் தத்துவவியலில் தான் உளவியலும் இருந்தது.இதன் மூலம் குழந்தைகள் மனநல மருத்துவரானார்.இதனால், ரோம் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியர் பதவியும் இவருக்குக் கிடைத்தது.இவ்வாறு பல்கலைக்கழகத்தில் பணி செய்த போது தான் “மானிடவியல் கற்பிக்கும் கலை” (Pedagogical Anthropology) என்ற நூலை எழுதினார். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்தப் பல்கலைக்கழகத்தோடு இணைந்த மனநல மருத்துவ விடுதியில் விரும்பிப் பணியை ஏற்றார்.அங்குதான் தனது கல்வி முறையை அறிமுகம் செய்து வெற்றி பெற்றார்.

மரியா மான்டிசோரி மிகச் சிறந்த கல்வியாளர்.தனது ஆரம்பக் கல்வி முதல் நாற்பது வயது வரை படித்துக் கொண்டே இருந்தார். குழந்தைகள் சமூகத்துக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிய இருநூறு ஆண்டுகள் கல்வி வளர்ச்சி பற்றிய தரவுகள், கட்டுரைகள், பயிற்சி ஏடுகள், கல்வியாளர்களின் நூல்கள் என்று தேடித்தேடிப் படித்தார். இந்த அகன்ற அறிவின் மூலம் குழந்தைகளுக்குத் தேவையான ஒரு சிறந்த கல்வி முறையை அவர் உருவாக்கினார். சான்லோரென்ஸா என்ற இடத்தில் நிறையத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வசித்து வந்தார்கள்.இவர்களது குழந்தைகள் வீடுகளில் கண்ணாடிகளை உடைப்பது, அடிதடிகளில் ஈடுபடுவது என்று மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள்.இந்தத் தொழிலாளிகளுக்கு வீடுகளைக் கொடுத்த முதலாளிகள்,இக்குழந்தைகளுக்கு வழிகாட்டுமாறு மரியா மான்டிசோரியை அணுகினார்கள்.

குழந்தைகள் மனநல மருத்துவராக இருந்த மரியாவுக்கு இந்த வேண்டுதல் அடுத்த கட்ட தேவையை உணர்த்தியது.அதாவது, சாதாரண குழந்தைகளும், சரியான கற்பித்தல், வழிநடத்துதல் இல்லாமல் முறைதவறிச் செல்வது ஏன்? என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டார்.இந்தக் குழந்தைகளுக்கான ஒரு பள்ளியைத் தொடங்கினார். இந்தத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான பள்ளியில், சுதந்திரமாகக் குழந்தைகள் செயல்படும் வகையில் ஒரு சூழலை அமைத்தார்.சில செயல்பாடுகளைக் கொடுத்து, அவற்றைச் செய்யும் முறைகளைச் சொல்லியதோடு, குழந்தைகள் விரும்பியபடியெல்லாம் அவைகளைச் செய்யுமாறு சுதந்திரம் கொடுத்தார்.இது மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.  புத்தகமில்லா பள்ளி’ என்ற கோணத்தில் இப்பள்ளி அமைந்தது.இந்தச் சம்பவத்துக்கு பின்பு தன் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு முழு நேரக் கல்வியாளராக மாறிவிட்டார் மரியா மான்டிசோரி. மேற்கண்ட பள்ளியில் பயின்ற குழந்தைகளுக்கு ஒழுக்கத்தில் முன்னேற்றம் தென்பட்டது.அப்போது அவர்களுக்கு எழுத்தறிவினைக் கற்பிக்கத் தொடங்கினார்.இந்தச் செய்தி நாடெங்கும், உலகெங்கும் பரவியபோது மான்டிசோரிக் கல்வியைக் கற்க, கற்பிக்கப் பலரும் முன் வந்தார்கள்.

மான்டிசோரிக் கல்வி

அந்த வகையில் மழலையர் கல்விக்கு அடித்தளமிட்டவர்களில் மரியா மான்டிசோரி மற்றும் புரொபல் ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களாக உள்ளனர்.குழந்தைகளின் மனவளர்ச்சிக்கு ஏற்றவாறு வெவ்வேறு படிநிலைகளில் அதாவது வயதுக்கு ஏற்ப, விளையாட்டுப் பொருள்கள் உதவியுடன் கற்றலை வழங்குவதே மாண்டிசோரிக் கல்வியின் அடிப்படையாக உள்ளது. குழந்தைகள் கற்கும் போது, இடையூறு இன்றியும், வற்புறுத்தல் இன்றியும், தானாகவே சுதந்திரமாகக் கற்றுக்கொள்ள வாய்ப்பும் சூழலும் தரப்பட வேண்டும் என்பது மான்டிசோரிக் கல்வியின் நோக்கமாக அமைந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் அமைந்தால் தான் குழந்தைகளின் உள்ளத்தில் புைதந்து கிடைக்கும் ஆற்றல்களும்,திறமைகளும் ஊக்கம் பெற்று வளர்ச்சி பெறும் மற்றும் வெளிப்படுத்தப்படும் என்பதையும் இக்கல்வி முறை உணர்த்தியது.

ஆசிரியர்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதை விட, ஒவ்வொரு குழந்தையும் தானாகவே கல்வி கற்க வேண்டும் என்பது மாண்டிசோரிக் கல்வியின் கோட்பாடாக அமைந்திருந்தது.‘குழந்தை தானாகக் கற்கும் கல்வியே சிறந்த கல்வி’ என்று கூறினார் மான்டிசோரி. அதன்படி மான்டிசோரி தனது கற்பித்தல் முறையில் குழந்தைகளை சுதந்திரமாக இருக்க, செயல்பட பயிற்சி தந்தார். அவர்களது தொடு உணர்ச்சி நல்ல வளர்ச்சியைத் தருகின்றது என்றும் இதனைப் புறக்கணிக்கும்போது உணர்ச்சி சார்ந்த பயிற்சியே இல்லாமல் போய்விடும் என்பதையும் எடுத்துரைத்தார். மான்டிசோரி போதனா முறையில் பரிசுகள், தண்டனைகள் இல்லை.மாறாக, குழந்தைகளின் மனவளர்ச்சியும், அதனை அவர்கள் உணர்வதுமே மிகப் பெரிய பரிசு என்று கருதப்பட்டது.

மான்டிசோரிக் கல்வி முறையில் அறிமுகம் செய்த செயல்முறைக் கற்றல் கருவிகள் எல்லாவற்றையும் நன்கு பரிசோதித்த பின்பே மான்டிசோரி அவற்றைப் பயன்படுத்தினார். குழந்தைகளும் அந்தக் கருவிகளை பலமுறை பயன்படுத்திக் கற்றுக் கொண்டனர்.அவர்கள் தவறு செய்யும் போது, அந்தக் கருவிகளே அதைச் சுட்டிக்காட்டி விடும்.எனவே, மீண்டும் முயற்சித்து சரிவரச் செய்தனர்.இந்த அமைதியான, ஆக்கப்பூர்வமான அணுகுமுறை குழந்தைகளை நன்கு ஈர்த்தது.இந்தக் கருவிகள் பிறர் உதவியின்றிக் குழந்தைகளாலேயே பயன்படுத்தப்படும்படி அமைந்திருந்தது இதன் சிறப்பு.இக்கருவிகள் எழுதுவது, படிப்பது, கணக்குகள் போடுவது ஆகியவற்றைக் குழந்தைகள் ஆர்வமாகக் கற்றுக் கொள்ள உதவியது.

மான்டிசோரிக் கல்வியில் வழங்கப்பட்ட கருவிகள் குழந்தைகளின் மனக்கதவுகளைத் திறக்கும் திறவுகோல்களாக இருந்தன.இக்கல்விமுறையில் உண்மையும், மனித இயற்கையும் கற்றுத் தரப்பட்டது.1912-ஆம் ஆண்டு தனது அனுபவங்களைச் சேகரித்து, எழுதி “மாண்டிசோரி முறை” என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டார் மாண்டிசோரி.மேலும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் 6 முதல் 10- வயது உள்ள மாணவர்களுக்கும் கல்வி முறையைத் தந்தார். இது மான்டிசோரி உயர்கல்வி முறை (Advanced Montessori Method) என்றழைக்கப்பட்டது. ‘மான்டிசோரி உயர் கல்வி முறை’ என்ற புத்தகமாகவும் எழுதி வெளியிட்டார் மரியா.இந்த நூலில் உள்ள பல குறிப்பிட்ட முறைகள் இன்று பல்வேறு பாடத்திட்டங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.

கல்வியின் வழியாக குழந்தையின் உள்ளார்ந்த பண்புகள் ஒன்றன்பின் ஒன்றாக தாமாகவே வெளிப்பட வேண்டும் என்று மாண்டிசோரி வலியுறுத்தினார். இங்கு குழந்தையின் தனித்தன்மை மதிக்கப்பட வேண்டும். இதற்கு சுதந்திரம் மிகவும் அவசியம் என்று கூறினார். புலன்களுக்கான பயிற்சி மிக மிக அவசியம் என்றும் இவைகளே அறிவின் தொடக்க வாயில்கள் என்றும் எடுத்துரைத்தார். மான்டிசோரி ‘சுதந்திரம்’ என்ற வார்த்தையை அதிக பயன்படுத்தக் காரணம், அக்காலத்தில் கட்டுப்பாடுகள் மூலம் மட்டுமே ஒழுக்கத்தை மாணவர்களிடம் கொண்டுவர முடியும் என்ற எண்ணம் இருந்ததே ஆகும். அக்காலக் கல்வி முறையில் தவறு செய்யும் மாணவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். பயம் மூலம் ஒழுக்கம் வரும் என்பது அப்போதைய சிந்தனையாக இருந்தது.

ஆனால், மான்டிசோரி போன்ற பலகல்வியாளர்கள், பதினெட்டு, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் மாணவர்கள் மனதைப் பக்குவப்படுத்திட அன்பு மிகுந்த அணுகுமுறையே நல்லது என்று கண்டார்கள்.கல்வியின் நோக்கம் என்பது மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை மலரச் செய்வதே என்பதை மாண்டிசோரி உலகறியச் செய்தார்.பிறப்பு முதல் 6-வயது வரை பஞ்சானது தண்ணீரை உறிஞ்சுவதுபோல வெளிப்புறமிருந்து குழந்தை கற்றுக் கொள்கிறது.இது முதல் பருவம். 7 முதல் 16-வயது வரை எழுதுதல், வாசித்தல், கணக்குப் போடுதல் என்ற அடுத்த நிலைத் திறமைகளில் வளர்கின்றது என்பதே இரண்டாம் பருவம் என்று கூறியதோடு, இந்த இரண்டு பருவங்களும் ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் மிக மிக முக்கியமானது என்பதையும் தன் சொற்பொழிவுகள், கட்டுரைகள் மூலம் பலமுறை வலியுறுத்தினார் மாண்டிசோரி. ஐம்புலன்களுக்கும் சரியான பயிற்சியை குழந்தைகளின் மூன்று முதல் ஏழு வயதுக்குள் வழங்க வேண்டும் என்பது மான்டிசோரிக் கல்வியின் முக்கியக் கருத்தாகும். புலன்களுக்குப் பயிற்சி தர எடை, வண்ணம், ஒலி, தொடு உணர்வு, வெப்ப உணர்வு ஆகியவற்றை உணர்த்தும் கருவிகளை மான்டிசோரி உருவாக்கினார்.

புலப்பயிற்சியின்போது இது ஊதா, வெள்ளை என்று நிறம் உணரப்படுகிறது.இது உயரம், குட்டை என்று அளவுகள் உணர்த்தப்படுகிறது. ஒரு ரோஜாவின் படத்தைக் காட்டுவதை விட, ரோஜாவைக் காட்டும்போது, அதனை நுகரும்போது, தொட்டு உணரும் போது, நேரடியாகப் பார்க்கின்ற போது பெறும் கற்றல் பெரிது என்பதை உணர்த்திக்காட்டினார் மான்டிசோரி. புலன்களுக்குச் சரியான பயிற்சியை அளித்தால் குழந்தைகள் பிற்காலத்தில் ஐம்பது அல்லதுஅறுபது ஆண்டுகளில் கற்கக் கூடிய திறன்களை குழந்தைப் பருவத்திலேயே பெற்று விடுகின்றார்கள். இதன் மூலம் தவறு செய்வதைக் குறைத்துக் கொள்கின்றார்கள். அறிவியல் வளர்ச்சியும் அவர்களுக்கு அதிகரிக்கின்றது. எனவே, ஒவ்வொரு புலனையும் செயல்படுத்திக் கற்க ஏராளமான வழிமுறைகளையும், உபகரணங்களையும், கருவிகளையும் உருவாக்கித் தந்தார் மாண்டிசோரி.

‘நல்ல உடல் மீது தான் நல்ல மனம் படைக்க முடியும்’ என்று அரிஸ்டாட்டில் கூறியதை ஏற்றுக் கொண்டார் மான்டிசோரி. ஆகவே, புலப்பயிற்சிகளுடன் தசைப்பயிற்சிகளும் கிடைக்குமாறு தன் கற்பித்தல் முறையை ஒழுங்கு செய்து வழங்கினார்.குழந்தைகள் செய்ய வேண்டிய அன்றாட வேலைகளை அவர்களை சிறப்பாகச் செய்திட பயிற்சி தரப்பட்டது. வகுப்பறை காற்றோட்டம் உள்ளதாக இருந்தது. மேஜை, நாற்காலிகள் எளிய எடையுள்ளதாக இருப்பதால், குழந்தைகளால் அதை நகர்த்திக்கொள்ள, மாற்றிக்கொள்ள முடியும். அலமாரி, கதவுகள் உயரம் குறைவாக குழந்தைகள் பயன்படுத்தும் வண்ணமே அமைக்கப்பட்டது.இப்படி ஒவ்வொன்றும் குழந்தைகள் தங்கள் தேவைகளே, தாங்களே நிறைவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது மான்டிசோரிக் கல்வியின் சிறப்பாகும்.

மான்டிச்சோரி கல்வியில் ஆசிரியர்கள் இயக்குநர்களாக உள்ளனர்.கற்றுத் தருவதற்குப் பதிலாக அவர்கள் குழந்தைகளை உற்று நோக்கிடப் பயிற்சி பெறுகின்றனர்.பேசுவதற்குப் பதிலாக அமைதியாக வழிகாட்டுகின்றனர்.குழந்தையின் வளர்ச்சியைப் பரிவுடன் நோக்கி, அவர்கள் செயல் திறன் அதிகரிக்க ஊக்கம் தருபவராக ஆசிரியர் விளங்கிடப் பயிற்சி பெறுகின்றனர். மான்டிசோரிக் கல்வியின் அடிப்படையில் இயக்குநராகத் திகழும் ஆசிரியர் பாதி அறிவியல் விஞ்ஞானியாக உற்று நோக்குபவராகவும், பாதி மருத்துவராகவும் செயல்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றார்கள்.

மான்டிசோரிக் கல்வி முறையில் குழந்தைகள் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்து கொள்ளும் பழக்கம் பெற்றார்கள். மேஜைகளை வரிசையாக அடுக்கி அமர்வது, விளையாடும் நேரங்களில் உடை மாற்றிக் கொள்வது, அலமாரிகளில் புத்தகங்களை அடுக்குவது, உபகரணங்களை வைப்பது, எடுப்பது என்ற எல்லாவற்றையும் அவர்களே முறையோடு செய்தார்கள்.இந்தப் பொறுப்பான வளர்ச்சி அவர்களது எதிர்காலக் கல்வியிலும் சிறப்பான வளர்ச்சியைக் கொண்டு வந்தது.எனவே, இந்தக் கல்வி முறை நிரூபிக்கப்பட்ட சிறந்த ஒரு கல்வி முறையாக இன்றளவும் தொடர்கின்றது.

உலகளவில் மான்டிசோரி

மான்டிசோரிக் கல்வி முறையின் சிறப்பும், பிறப்பும் உலகமெங்கும் வரவேற்பைப் பெற்றது. 1912- ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று இக்கல்விமுறையை அறிமுகம் செய்தார் மான்டிசோரி.பல இடங்களிலும் பல சிறந்த கல்வியாளர்களே மான்டிசோரிப் பள்ளிகளைத் திறந்து நடத்தினார்கள். 1916-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டுக்குச் சென்று பார்சிலோனாவில் தங்கி மான்டிசோரிப் பயிற்சி வகுப்புகளை நடத்தினார் மரியா.1917-ஆம் ஆண்டு நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாமில் வகுப்புகள் நடத்தினார். அப்போது “நெதர்லாந்து மாண்டிசோரிச் சங்கம்” தொடங்கப்பட்டது. 1930-களில் அங்கு 200-க்கும் மேற்பட்ட மான்டிசோரிப் பள்ளிகள் இயங்கின. 1919-ல் நேரடியாக இங்கிலாந்து வந்து வகுப்புகள் நடத்தினார் மரியா.அங்கு 1912-முதலே மான்டிசோரிப் பள்ளிகள் பல செயல்பட்டு வந்தன.தொடர்ந்து 20-ஆண்டுகள் மான்டிசோரி இங்கிலாந்து நாட்டில் பல பயிற்சிகளை வழங்கினார்.தனது சொந்த நாடான இத்தாலியிலும் பள்ளிகளைத் தொடங்க உதவினார்.1924-ல் முசோலினியைச் சந்தித்தார்.1936-வரை இத்தாலி அரசாங்கம் ஆதரவு அளித்தது.அதன் பிறகு அரசியல் நோக்கத்துக்காக கல்வியை எடுத்துச் செல்ல முசோலினி வற்புறுத்தியதால் மாம்டிசோரி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.எனவே,இத்தாலியில் இக்கல்விமுறை நிறுத்தப்பட்டது.ஜெர்மனியிலும் தடை வந்தது.ஆனாலும், சில ஆண்டுகளுக்குப் பின்பு தடை நீக்கப்பட்டு இன்றளவும் தொடர்கின்றது.

பிரான்ஸ் தேசத்திலும், சுவிட்சர்லாந்திலும் மாண்டிசோரி பயணித்து விரிவுரைகள் வழங்கினார்.ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையிலும் ‘கல்வி மற்றும் அமைதி’ என்ற தலைப்பில் பேசினார் மரியா.1937-ஆம் ஆண்டு, 6-வது சர்வதேச மான்டிசோரி காங்கிரஸ் ‘அமைதிக்கான கல்வி’ என்ற தலைப்பில் நடைபெற்றது.ஐரோப்பாவில் இராணுவப் பதட்டம் அதிகமான சூழலில்,‘அமைதி’ என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்பட்டது. 1929-ஆம் ஆண்டு சர்வதேச மான்டிசோரிக் கழகம் தொடங்கப்பட்டது.நெதர்லாந்தில் மான்டிசோரி பயிற்சி மையம் 1938-ல் ஆரம்பிக்கப்பட்டது.1947-ஆம் ஆண்டு லண்டனில் தொடங்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் நடத்த சமயத்தில் 1939-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார் மான்டிசோரி.சென்னை அடையாறு,தத்துவஞான சபையின் சார்பாக மான்டிசோரி அழைக்கப்பட்டார்.மான்டிசோரியும், அவரது மகன் மாண்டிசோரி ஜூனியரும் சேர்ந்து பதினாறு வகுப்புகளை இந்தியாவின் பல இடங்களிலும் நடத்தினார்கள்.இந்தியாவில் மாம்டிசோரிப் பள்ளிகள் தொடங்கிட இது மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது.

போர் நடந்து கொண்டிருந்ததால் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மான்டிசோரி அரசின் கட்டுப்பாட்டில் இருந்தார்.எனவே, நான்கு ஆண்டுகள் இந்தியா முழுவதும் பயணித்தார்.அவ்வப்போது கொடைக்கானல் மலையில் ஒய்வு எடுத்துக் கொண்டார். 1944- ஆம் ஆண்டு மழலையர் வகுப்புகளைத் தொடங்க இந்திய அரசு அனுமதியளித்தது.இதற்கு மான்டிசோரியின் கல்வி அறிமுகம் ஒரு காரணமாகும். இந்தியாவில் இயற்கையோடு இணைந்த கல்வித் திட்டத்தை உருவாக்கிட மான்டிசோரியும், அவரது மகனும் முயன்றார்கள்.இதற்கு ‘பிரபஞ்சக் கல்வி’(Cosmic Education) என்று பெயரிட்டனர்.தொடர்ந்து இலங்கை சென்று தன் கல்வித் திட்டத்தை செயல்படுத்தினார் மரியா.பின்பு பாகிஸ்தானிலும் இக்கல்விமுறை அறிமுகம் செய்யப்பட்டது.

1946-ஆம் ஆண்டு மீண்டும் நெதர்லாந்து சென்றார்.திரும்பவும் உலக நாடுகள் முழுவதும் பயணம் செய்தார்.அவ்வப்போது இந்தியாவுக்கும் வந்து சென்றார்.1951-ஆம் ஆண்டு யுனெஸ்கோ கல்வி நிறுவனம் தொடங்குவதில், நிறுவுவதில் முழுமையாக ஈடுபட்டார்.குழந்தைகளின் கல்வி உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார்.இதன் முதல் மாநாடு 1951, ஜூன் மாதம் 19- அன்று ஜெர்மனியின் வைஸ்மேடனில் நடந்தது.இந்த மாநாட்டில் பள்ளிக்கு முன் கல்வியின் தேவையை மரியா எடுத்துரைத்தார்.

“உலகளவில் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிக்கும் போது, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என்ற மிகப்பரந்த மக்கள் தொகையை நினைவில் கொள்ளுங்கள்.உரிமைகள் இல்லாத எல்லா இடங்களிலும், பள்ளிகளிலும் அதன் பெஞ்சுகளிலும் குழந்தைகள் சிலுவையில் அறையப்படுகின்றார்கள்.ஜனநாயகம், சுதந்திரம் பற்றிப் பேசுகிறோம்; ஆனால், பள்ளி விதிமுறைகளால், ஆணைகளால் குழந்தைகளின் உரிமைகளை நசுக்குகிறோம்.அவர்கள் எதைக் கற்க வேண்டும் என்று நாம் திணிக்கிறோம்.இது தவறு.குழந்தைகள் மட்டுமே உரிமைகள் இல்லாத மக்கள் தொகையாக, புறக்கணிக்கப்பட்ட குடிமக்களாக உள்ளார்கள்.அவர்களது உயிரோட்டமான சக்திகளை நாம் ஒடுக்கிவிடுகின்றோம்” என்று அந்த மாநாட்டில் விரிவுரை தந்தார் மரியா மான்டிசேரி.இதன் விளைவாகத்தான் பின்னாளில், குழந்தைகளின் உரிமைகள்UNESCO-வால் வரையறுக்கப்பட்டன.

தனது கல்வி முறையாலும், எழுத்துக்களாலும் மிகப்பெரிய தாக்கத்தை உலகில் உருவாக்கியவர் மரியா மான்டிசோரி.தொடர்ந்து இன்று வரை மிகச்சிறந்த கல்வி முறைகளில் ஒன்றாகத் திகழ்ந்துவரும் இக்கல்விமுறையே இதன் வெற்றிக்குச் சான்றாகும்.தன் இறுதி நாள் வரை உலகெங்கும் ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு செல்ல உழைத்தவர் மரியா மான்டிசோரி. குடும்பங்களில் இன்று தாயும், தந்தையும் பணிக்குச் செல்ல வேண்டிய சூழலில், குழந்தைகள் பள்ளி செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.அந்த முன்பருவப் பள்ளிக்கல்வி இயற்கையாக அமைந்திட வழிகாட்டியவர்தான் மான்டிசோரி.இன்றைய அதிவேக உலகில், அமைதியை, அன்பை வழங்கும் கல்வியாக இக்கல்வி முறை விளங்குவது உலகிற்கு, மரியா மான்டிசோரி வழங்கிய அன்பளிப்பாக உள்ளது.

மரியா மான்டிசோரி பொன்மொழிகள்

🚸குழந்தையைப் பற்றிய நமது கவனிப்பு, விஷயங்களைக் கற்றுக் கொள்ள வைக்கும் ஆசையால் அல்ல, மாறாக,‘அறிவு’ என்று அழைக்கப்படும் அந்த ஒளியை,அக்குழந்தைக்குள் எப்போதும் எரிய வைக்கும் முயற்சியால் செயல்படுத்தப்பட வேண்டும்.

🚸ஆசிரியர் குழந்தையிடம் அன்பாக இருந்தால் மட்டும் போதாது.அக்குழந்தை பிரபஞ்சத்தை நேசிக்கவும், புரிந்து கொள்ளவும், அதற்குத் தன்னைத் தயார் செய்யவும் வேண்டும்.அதற்கான பயிற்சியைஅக்குழந்தை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

🚸ஒரு குழந்தை தன் வாழ்க்கையைத் திறந்து காண உதவாதவரை கல்வி பயனற்றதாகும்.

🚸ஒரு ஆசிரியரின் மிகப்பெரிய வெற்றி என்பது “நான் இல்லாமலும் என் குழந்தைகள் செயல் புரிகிறார்கள்” என்று சொல்ல முடிவதே ஆகும்.

🚸எதிர்காலத்தின் தலைவிதி குழந்தைகளுக்குள் உள்ளது.எனவே, குழந்தை ஈடுபடும் எல்லா நியாயமான செயல்பாடுகளையும் மதித்து, அவற்றைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

🚸குழந்தைகள் பார்க்கும் பொருட்கள் மற்றும் விஷயங்கள் வெறும் நினைவுக்கானது மட்டுமல்ல, அவை அவர்களின் ஆன்மாவில் ஒரு பகுதியை உருவாக்க உதவுகின்றன.

🚸மூன்று வயதுக்கு மேல் தன் சொந்த முயற்சியால் சுற்றுப்புறத்திலிருந்து, ஏராளமான கருத்துகளைப் பெற்று, குழந்தைகள் தங்கள் மனதில் ஒருங்கிணைக்கின்றார்கள்.

🚸குழந்தைகள் தனக்காகச் செயல்படவும், தனக்காகச் சிந்திக்கவும் நாம் உதவ வேண்டும்.இது அவர்களின் உயிர் வாழ்வுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய பணியாகும்.

🚸மனித குலத்தைக் காப்பாற்றும் திறன் கொண்ட கல்வி சிறிய முயற்சி அல்ல.

🚸கல்வி என்பது ஒரு மனிதனின் ஆன்மிக வளர்ச்சியாகும்.தனிநபராக ஒரு குழந்தையின் மதிப்பை மேம்படுத்துதல் மற்றும் இளைஞர்கள் தங்கள் வாழும் காலத்தைப் புரிந்து கொள்ளத் தயார்படுத்தல் ஆகியவற்றைக் கல்வி வழங்குகிறது.

🚸குழந்தைப் பருவக் கல்வியே சமூகத்தின் முன்னேற்றத்துக்கு முக்கியமானதாகும்.

🚸மொழியின் வளர்ச்சி என்பது, ஆளுமை வளர்ச்சியின் ஒரு பகுதியாகும்.ஏனென்றால் வார்த்தைகள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், மக்களிடையே புரிதலைத் தரவும் ‘மொழி’ இயற்கையான வழிமுறையாகும்.

🚸குழந்தையின் திறமையை வெளிக்காட்டும் சுதந்திரம் தருகின்றபோது அவனது வாழ்க்கை உலகையே நீங்கள் மாற்றுகிறீர்கள்.

🚸மகிழ்ச்சி என்பது, ஒருவரின் சொந்த மதிப்பை உணர்தல், மற்றவர்களால் பாராட்டப்படுதல் மற்றும் நேசிக்கப்படுதல், பயனுள்ள மற்றும் செயலாக்கும் திறனைக் கொண்டுவருதல் மூலம் அடையப் பெறுகின்றது.

‘🚸கவனியுங்கள்’ என்பதன் மூலம் நாம் கற்றுத்தர முடியாது, ஆனால், கவனிப்பதற்கான சக்தியையும், வழிமுறைகளையும் குழந்தைகளுக்கு வழங்கிடப் புலன்களின் வழி கல்வி தருவதன் மூலம் மிகச் சிறப்பாகக் கற்றுத் தரலாம்.

🚸‘கல்வி’ என்பது ஆசிரியர் செய்யும் செயல் அல்ல. அது மனிதனுக்குள் தன்னிச்சையாக உருவாகும் இயற்கையான செயல் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.

🚸தனிப்பட்ட ஆரோக்கியம் என்பது தன்னடக்கம், சுயகட்டுப்பாடு, மகிழ்ச்சி, புதுப்பிக்கப்பட்ட இளமை மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்டு வருகின்றது.இது வாழ்க்கையை அதன் அனைத்து இயற்கை அழகுடனும் வழிபடுகின்றது.

🚸நிலையான அமைதியை நிலைநாட்டுவது கல்வியின் வேலையாகும். அரசியல் என்பது போரிலிருந்து நம்மை விலக்கி வைப்பது தான்.

🚸கல்வி நடைமுறையின் சரியான சோதனை’ குழந்தையின் மகிழ்ச்சியாகும்.

🚸கவனம் செலுத்தும் குழந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

🚸ஓவியம் வரைவதற்கான பரிசை வழங்கிட, நாம் பார்க்கும் கண்ணையும், கீழ்ப்படியும் கையையும், உணரும் உள்ளத்தையும் உருவாக்கிட வேண்டும்.

🚸குழந்தை என்பது நமக்குக் கடன்பட்ட வெறுமை அல்ல. அது மனிதனைக் கட்டி எழுப்புகின்றது.குழந்தையாக இல்லாமல் யாரும் மனிதரானது இல்லை.

🚸பயணக் கதைகள் புவியியல் கற்பிக்கின்றன.பூச்சிக் கதைகள் குழந்தையை இயற்கை அறிவியலுக்கு இட்டுச் செல்கின்றன.எனவே, ஆசிரியர் மாணவர்களுக்கு மாறுபட்ட பாடங்களை அறிமுகப்படுத்த நிறைய வாசிக்கும் வாய்ப்புகளைக் குழந்தைகளுக்குத் தர வேண்டும்.

🚸குழந்தை பெற வேண்டிய முதல் தெளிவு நன்மைக்கும், தீமைக்கும் உள்ள வித்தியாசமேயாகும்.

🚸எல்லா வேலையும் உன்னதமானது, உழைக்காமல் உயர்வது மட்டுமே இழிவானதாகும்.

🚸குழந்தையின் கவனத்தைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சிக்கலை நீங்கள் தீர்த்து விட்டால், அதன் கல்வியின் முழுச் சிக்கலையும் நீங்கள் தீர்த்து விட்டீர்கள்.

🚸பொதுவான கலைக் கல்வியை மட்டுமல்ல, வாசிப்புக் கலையில் சிறப்புக் கவனம் செலுத்துவதை ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement