தமிழ்நாட்டின் சுவிட்சர்லாந்து -மன்னவனூர் கிராமம்!
கொடைக்கானல் பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மன்னவனூர் மலை கிராமம். இந்த கிராமமானது நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து நமக்கு அமைதி கொடுக்கும் இடமாக உள்ளது. தினம் தினம் பணியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நமக்கு விடுமுறை நாளில் நிம்மதியாக பொழுதை கழிக்க சிறந்த இடம் என கூறலாம்.மன்னவனூர் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கொடைக்கானலில் இருந்து பேருந்து வசதி உள்ளது. ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தான். கொடைக்கானலில் இருந்து மன்னவனூர் கிராமத்திற்கு பேருந்து இயக்கப்படும். பேருந்தை விரும்பாதவர்களுக்கு வனத்துறை சார்பில் வாகன வசதியும் ஏற்படுத்தி தருகின்றனர்.
மன்னவனூர் மலை கிராமத்திற்கு செல்ல வேண்டுமென்றால் முதலில் கொடைக்கானல் வருகை புரிந்து அங்கிருந்தும் செல்லலாம். நீங்கள் செல்லும் வழி எல்லாம் இயற்கை அழகு நிறைந்து காணப்படும். வழி முழுவதும் நீங்கள் பார்த்து ரசிக்கும் வகையில் அழகிய மரங்கள் காணப்படும். அதுமட்டுமின்றி விதவிதமான பறவைகளின் சத்தத்துடன் நீங்கள் பயணம் செய்யலாம். நீங்கள் கொடைக்கானலில் இருந்து மன்னவனூர் மலை கிராமத்திற்கு செல்லும் பொழுதே பழனி மலையின் வியூ பாயிண்டை காண முடியும். இயற்கை எழில் கொஞ்சும் மலை முழுவதும் பச்சை போர்வை விரித்தது போல காட்சியளிக்கும்.அங்கிருந்து சிறிது தூரம் பயணித்தால் பூம்பாறை கிராமம். அந்த கிராமத்தில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காணப்படும். மேலும் மலைகளின் மீது மேகங்கள் கொஞ்சி விளையாடும் அழகை காணலாம். அதை ரசித்துக்கொண்டே பயணித்தால் மன்னவனூர் கிராமத்தை சென்றடையலாம். மன்னவனூர் கிராமதிற்கு செல்வதே சொர்க்கத்திற்கு சென்றது போல மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.
மன்னவனூர் கிராமம் பார்க்க தமிழ்நாடு போலவே இருக்காது. தமிழ்நாட்டின் சாயல் சுத்தமாக இல்லாமல் சுவிட்சர்லாந்து போல் இருக்கும். அங்குள்ள சாலைகள் மிக அமைதியான சாலைகள் ஆகும். கொடைக்கானலில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மன்னவனூரில் உள்ள ஆட்டுப்பண்ணை உலகப் புகழ் பெற்றது. மேலும் மன்னவனூர் ஏரி, அங்கு உள்ள சாகச பயணம், புல்வெளிகள், தட்ப வெப்பநிலை வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வை தரும்.
மன்னவனூர் ஏரிக்கு மேல் சுமார் 250 மீட்டர் உயரத்தில் கம்பி வடத்தில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்யும் வகையில் ஜீப் லைன் சாகசம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.மலைப்பாதைகளில் அடுக்கடுக்காக காணப்படும் விவசாய நிலங்கள், மேகம் தவழும் ரம்மியமான சூழல் பலருக்கும் பிடிக்கும்.
கொடைக்கானல் மற்ற சுற்றுலா தலங்களை போல் இல்லை. முழுமையாக இயற்கை அப்படியே இருக்கும் சுற்றுலா தலம் ஆகும். மூணாறு, ஊட்டி போல் இங்கு தேயிலை தோட்டங்களை காண முடியாது. அதேபோல் கழுகு பார்வை மூலம் அடுக்கு சாலைகளை முடியாது. ட்ரோன் வியூ எடுத்தாலும் எல்லா சாலைகளையும் மரங்கள் மறைத்துக் கொள்ளும்.
ஊட்டி, மூணாறு, போடி மெட்டு போல்,எந்த இடத்திலும் கொடைக்கானல் மலைச்சாலையை முழுமையாக காண முடியாது. அவ்வளவு அழகாக மலையில் சாலைகளை மரங்கள் மறைத்திருக்கும். சாலையின் இருபுறமும் அடர் வனமாக இருக்கும்.கொடைக்கானல் போகும் போது இப்படி என்றால், கொடைக்கானல் மலை மேல், நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ் வாக், பூங்கா, பூம்பாறை கிராமம், குழந்தை வேலப்பர் கோயில், பசுமை பள்ளத்தாக்கு, மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர் ராக், குணா பாறை, சர்ச், கோயில், வெள்ளி நீர் வீழ்ச்சி, பேரிஜம் ஏரி, மன்னவனூர், கூக்கால் என ஏராளமான இடங்கள் சுற்றுலா பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கும்.
தமிழ்செல்வி