மணிப்பூரில் பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி!
மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வெடித்த மோதல், 16 மாதங்களை கடந்தும் இன்னும் ஓயாமல் உள்ளது. இருதரப்பு மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதுடன், லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு மணிப்பூரில் இயல்புநிலை திரும்பியதாக தெரிவித்தாலும், தினசரி உயிரிழப்பு நிகழ்ந்து கொண்டே தான் உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழலே நிலவுகிறது.
தற்போது இருதரப்பு மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் டிரோன்களை கொண்டு தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதோடு, பொதுமக்களிடையே அச்சமும் அதிகரித்துள்ளது. மணிப்பூரில் நிலவும் மோதலைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும், அம்மாநில பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி சென்றனர்.
நூற்றுக்கணக்கான பெண்கள் சேர்ந்து தாவூ மைதானத்தில் கூடி சுமார் 10 கிமீ தூரம் அணிவகுத்துச் சென்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் ராஜ் பவன் மற்றும் முதலமைச்சர் இல்லம் போன்ற முக்கியமான பகுதிகளைத் தவிர்த்தனர். இதேபோன்று மணிப்பூரின் பல்வேறு பகுதிகளிலும், பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். மணிப்பூரின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தும், அமைதியை மீட்டெடுக்க ஒன்றிய அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதன்படி, ‘மணிப்பூரைச் சிதைக்காதீர்கள்’, ‘எங்களுக்கு அமைதி வேண்டும்’ மற்றும் ‘மணிப்பூர் வாழ்க’ என்பன உள்ளிட்ட முக்கிய முழக்கங்கள் பேரணியில் இடம்பெற்றன. கிராம தன்னார்வலர்களை விடுவிக்கவும், காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை நீக்கவும் வலியுறுத்தினர்.