மணிப்பூர் முதலமைச்சர் (பாஜக) ராஜினாமா!
மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து அம்மாநில முதல் அமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை ஆளுநர் அஜய் குமாரிடம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக வன்முறை நிலவி வருகிறது. குக்கி மற்றும் மைத்தேயி ஆகிய இன மக்கள் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். மேலும் பலர் மாயமாகிவிட்டனர். இந்த வன்முறையால் மணிப்பூர் மாநிலமே தீப்பற்றி எரிகிறது. இதனை தடுக்க பாஜக அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.இந்த நிலையில் மணிப்பூர் மாநில பாரதீய ஜனதா கட்சி முதல் அமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
மணிப்பூர் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருந்த நிலையில், மாநில முதல்வர் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று தொடங்க இருந்த மணிப்பூர் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது. மேலும் முதல்வர் பிரேன் சிங் தலைமையின் மீது ஆளும் பாஜக கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலருக்கு அதிருப்தி நிலவி வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களே அதற்கு ஆதரித்து வாக்களிப்பார்கள் என்ற சூழல் ஏற்பட்ட நிலையில் பிரேன் சிங், தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் அஜய் குமாரிடம் கொடுத்துள்ளார். இவரது ராஜினாமா சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை அடுத்து பிரேன் சிங் கூறுகையில்,”ஒவ்வொரு மணிப்பூரியின் நலனைப் பாதுகாப்பதற்காக, சரியான நேரத்தில் நடவடிக்கைகள், தலையீடுகள், மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக ஒன்றிய அரசுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது முழு ஆண்டும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.கடந்த மே 3 (2023) முதல் நடந்து வரும் நிகழ்வுகளுக்கு நான் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் வருத்தப்படுகிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் இப்போது, கடந்த 3 முதல் 4 மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்ட பிறகு, 2025 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புகிறேன்” என்றார்.