மாஞ்சோலை மக்கள் வெளியேற்றத்தில் தொடரும் மர்மங்கள்!
மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில், ஆங்கிலேயர் காலம் முதலே `தொரை' என்று அழைக்கப்படும் எஸ்டேட் மேலாளர்கள் வசிக்க, சகல வசதிகளும் கொண்ட தனி பங்களாக்கள் உள்ளன. அந்தப் பங்களாக்களை அப்படியே விட்டுச்செல்ல வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியேறினாலும் பங்களாக்கள் அப்படியே இருக்கும் என்று பிபிடிசி நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அந்த பங்களாக்கள் யாருக்காக? எதற்காக?
மாஞ்சோலை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் BBTC நிறுவனம் 2018 ஆம் ஆண்டிலேயே குத்தகை நிலுவைத் தொகை 300 கோடி ரூபாய், அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.700 கோடி என்று சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பாக்கி வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசின் வனத்துறை 2017இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்களே. இப்போதுவரை அந்த ஆயிரம் கோடிகள் BBTC நிறுவனத்திடம் ஏன் வசூல் செய்யப்படவில்லை?யார் தடுத்தது?
மாஞ்சோலை மக்களை வெளியேற்றிவிட்டு சுற்றுலா அறிமுகம் செய்திட முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். வாகனங்கள், கடைகள், மக்கள் நடமாட்டம் இருந்தால் புலிகளை, யானைகளை, சுற்றுச்சூழலைப் பாதிக்காதா?சுற்றுலா திட்டத்தில் வேலை செய்பவர்கள் யாராக இருப்பார்கள்? ரயத்துவாரி சட்டத்தின்படி 1948இல் பட்டா இல்லாத பிபிடிசி காடுகள் அரசுக்கு சொந்தமான பிறகும்,ஒதுக்கப்பட்டகாடு அல்லது காப்புக்காடு என்று 1978இல் அறிவித்த பிறகும்,1988 புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்ட பிறகும்,06.01.2010 தமிழ்நாடு அரசு வனத்துறையால் BBTC கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகும், 01.09.2015 திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் (CMA 4/2010) தீர்ப்பு வழங்கிய பிறகும், 01.09.2017 சென்னை உயர்நீதிமன்றம் (WP 41358, 41359, 41360 /2005) தீர்ப்பு வழங்கிய பிறகும்,19.01.2018 உச்ச நீதிமன்றம் (37294/2017) தீர்ப்பு வழங்கிய பிறகும்,BBTC என்ற தனியார் நிறுவனம் 2024 ஜூன் மாதம் வரை காப்புக்காடு பகுதியில் தேயிலை உற்பத்தி செய்ய முடிகிறது என்றால், உச்சநீதிமன்ற உத்தரவிலேயே 11.02.2028 வரை உரிமையுள்ள மாஞ்சோலை மக்களை 2024இல் ஏன் வெளியேற சொல்கிறார்கள்?மக்களுக்காக அரசா? தனியார் நிறுவனத்திற்கான அரசா?
மாஞ்சோலை மக்கள் மலையை விட்டு வெளியேறி வந்த பிறகு வீடு கட்டிக் கொடுப்பார்கள், தொழில் செய்திட பயிற்சியும் கடனும் கொடுப்பார்கள் என்று தமிழ்நாடு அரசு சொல்கிறது. அதுவரை மக்கள் எங்கே தங்குவார்கள்? தேயிலை எடுப்பது தவிர வேறு எந்த வேலையும் தெரியாத மக்கள், அரசின் பயிற்சி எடுத்த உடனே ஏதாவது தொழில் செய்து முன்னேறிவிட முடியுமா? 25% மானியக் கடன் திட்டங்களுக்கு மீதம் 75% மக்கள் பங்களிப்பு பணத்திற்கு என்ன செய்வது? விருப்ப ஒய்வு வழங்கும் தனியார் பிபிடிசி நிறுவனம் 2028 ஆண்டு வரை வேலை உள்ளவர்களுக்கு, உரிய பணப்பலன்கள், 2028 வரைக்குமான கூடுதல் இழப்பீடு வழங்க வலியுறுத்தி, மத்திய பாஜக அரசும், மாநில திமுக அரசும் பிபிடிசி தனியார் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லையே எதனால்?
மாஞ்சோலை மக்களுக்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்காமல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களைக் காட்டி உறுதி மட்டும் கொடுத்து வருவது தேர்தல் கால வாக்குறுதி போல ஆகிவிடாதா? எல்லாவற்றுக்கும் மேலாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP), DSP, இன்ஸ்பெக்டர், காவல் அதிகாரிகள் எல்லாம் மாஞ்சோலை சென்று மக்களை சந்திப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறதா?
வாழ்வாதார பிரச்சனைக்கு தீர்வை காவல்துறை பெற்றுக் கொடுக்குமா? மாவட்ட ஆட்சித் தலைவர், வனத்துறை செயலாளர், தொழிலாளர் நலத்துறை செயலாளர், அமைச்சர்கள் ஏன் மாஞ்சோலை பகுதிக்கு சென்று மக்களை சந்திக்கவில்லை? இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாநில அளவில் பாகுபாடு இருப்பதாக புகார் சொல்லும் தமிழ்நாடு அரசு மாஞ்சோலை மக்களுக்கு பாகுபாடு காட்டுகிறதே உள்நோக்கம் என்ன?
தொமுச (திமுக தொழிற்சங்கம்), INTUC (காங்கிரஸ் ஆதரவு தொழிற்சங்கம்), கம்யூனிஸ்ட், அதிமுக தொழிற்சங்கங்கள் மாஞ்சோலை பிபிடிசி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கமாக இருந்தும் ஏன் சட்டமன்றத்தில் யாரும் இதுபற்றி பேசவில்லை? இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மதம், தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர், ஆதி திராவிடர், நாடார், மறவர், வண்ணார், ஆசாரி, பிள்ளை, கேரளாவின் ஈழவர், பணிக்கர், மாப்பிள்ளை கிறிஸ்தவர், நாயர் என்று அனைத்து சாதி மக்களும் ஒற்றுமையாக பாகுபாடு இல்லாமல் வாழ்ந்த மாஞ்சோலை போன்ற கிராமத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் இனி உருவாக்க முடியுமா?
யாருக்காக? எதற்காக? தெரியவில்லை.ஏதோ நடக்கிறது....!