பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குவதா? நெவர்!- கவர்னர் ரவி அதிரடி!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்முடிக்கு அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் பொன்முடியை அமைச்சராக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆர்.என்.ரவி பதில் கடிதம் அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. பொன்முடி குற்றமற்றவர் என சுப்ரீம் கோர்ட் அறிவிக்கவில்லை என கவர்னர் அந்தக் கடிதத்தில் பதிலளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக கேபினட்டில் உயர்கல்வி அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், ஐகோர்ட் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, அவர் எம்எல்ஏ, அமைச்சர் பதவிகளை இழந்தார் அதை. அடுத்து ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம், அவர் திருக்கோவிலூர் எம்எல்ஏவாக தொடர்வதாக அறிவிக்கப்பட்டது.மேலும், அவருக்கு அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். அப்படி முதல்வர் கடிதம் எழுதிய மறுநாள் கவர்னர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
நேற்று கவர்னர் சென்னை திரும்பிய நிலையில், முதல்வரின் பரிந்துரைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முதல்வருக்கு கவர்னர் எழுதிய கடிதத்தில், ‘பொன்முடிக்கான தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விடுவிக்கப்படவில்லை என்பதால் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் கவர்னர் மாளிகை தரப்பில் இருந்தோ, அரசு தரப்பில் இருந்தோ வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.