For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

குட் பை சொன்ன சாதனை மகாராஜா விராட் கோலி!

09:26 AM Jun 30, 2024 IST | admin
குட் பை சொன்ன சாதனை மகாராஜா விராட் கோலி
Advertisement

டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. இந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்த விராட் கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். அப்போது  ‘’இதுவே தனது கடைசி சர்வதேச டி20 போட்டி’’ என அவர் அறிவித்தார். ஆம்.. “இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை தொடர். இதைத்தான் நான் சாதிக்க வேண்டும் என விரும்பினேன். ஒரு நாள் ரன் எடுக்க முடியாது என்ற எண்ணம் உங்களுக்கு வரும். கடவுள் மிகப் பெரியவர். இப்போது இல்லை என்றால் எப்போது என்ற தருணம் எங்களுக்கு இது. இந்திய அணிக்காக நான் விளையாடும் கடைசி டி20 போட்டி இதுதான். உலகக் கோப்பையை ஏந்த வேண்டுமென விரும்பினேன். இது ஓபன் சீக்ரெட். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கான நேரம் இது. அவர்கள் டி20 ஆட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். இது நீண்ட காத்திருப்பு. ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டுமென்ற காத்திருப்பு. ரோகித்துக்கு இது 9-வது டி20 உலகக் கோப்பை தொடர். எனக்கு 6-வது தொடர். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம். இந்த நாள் அற்புதமான நாள். நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என கோலி தெரிவித்தார்.

Advertisement

கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் விராட் கோலி. இதுவரை 125 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 4,188 ரன்கள் எடுத்துள்ளார். 38 அரைசதம் மற்றும் 1 சதம் விளாசியுள்ளார். அதிலும் விராட் கோலி நேற்று ஆடிய ஆட்டம்தான் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்தத் தொடர் முழுக்க விராட் கோலி சுமாராகத்தான் ஆடியிருந்தார். 7 போட்டிகளில் 75 ரன்களை மட்டும்தான் அடித்திருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் பவர்ப்ளேக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கோலி களத்தில் நின்று கடைசி வரை ஆடி அசத்தினார். அவரால்தான் இந்திய அணி 176 ரன்களை அடித்தது.

Advertisement

ஆனாலும் விராட் கோலியின் மீது மட்டும் தொடர்ச்சியாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அவரின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி அவ்வப்போது வைக்கப்படும் விமர்சனங்களின் மீதுகூட நியாயம் இருக்கிறது. ஆனால், அணியில் அவரின் இடத்தையே கேள்விக்குள்ளாக்கும் வகையிலான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதை விராட் கோலி தொடர்ச்சியாக எதிர் கொண்டு வந்தார்.. அதிலும் ஒவ்வொரு தொடருக்கு முன்பும், `விராட் கோலி அணியில் தேவையா?' என்கிற விவாதத்தை ஒரு கூட்டம் கிளப்பிவிடுகிறது. தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக் கெல்லாம் விராட் கோலி பதில் கூறிக்கொண்டே இருப்பார். அப்படி பதில் சொல்லவில்லையென்றால், விராட் கோலியை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள்.

இத்தனைக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக 10.. ரன்கள்… டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள்… ஆசியாவில் நடைபெற்ற போட்டிகளில் அதிவேக 8000 ரன்கள்… என இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலியின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்… சச்சின் டெண்டுல்கர் புகழின் உச்சியில் யாரும் தொட முடியாத உயரத்தில் இருந்தபோது, சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தவர் விராட் கோலி… ஒவ்வொரு சாதனைகளிலும் சச்சின் டெண்டுல்கர் தனது பெயரை பொன்னெழுத்துகளால் பொறித்துக் கொண்டிருந்தபோது அணிக்கு உள்ளே வந்த கோலி, அதன்பிறகு சரித்திரத்தை மாற்றி எழுதத் தொடங்கினார்.

2008ல் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முதலாக களமிறங்கிய விராட் கோலி எடுத்தது வெறும் 12 ரன்கள்… அடுத்த ஆண்டில் அதே இலங்கை அணிக்கு எதிரான முதல் சதத்தை பூர்த்தி செய்து, தனது சாதனைப் பட்டியலுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொண்ட இடமும், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் தான்… அதன்பிறகு 2011 உலகக் கோப்பை தொடரில் முக்கிய போட்டிகளில் பொறுப்பாக விளையாடி தனது முத்திரையை அழுத்தமாக பதித்தார் விராட் கோலி… நாட்கள் நகர நகர விராட் கோலி கையில் இருக்கும் பேட்டுகள் அனைத்தும் ரன் கொட்டும் மெஷின்களாக மாறின. விராட் கோலி விறுவிறுவென சாதனைகளைக் கடப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார்.

ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற இமாலய சாதனையை சமன் செய்துள்ள கோலி, சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சினுக்கு அருகில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்… அத்துடன் சர்வதேச போட்டிகளில் ஓர் அணிக்கு எதிரான அதிக சதங்கள் அடித்தவர் என்ற பட்டியலில் இலங்கைக்கு எதிராக 10 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார் கோலி.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக 8000 முதல் 13000 வரையிலான ரன்களை கடந்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவரும் கோலிதான்… 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை பூர்த்தி செய்த நிலையில், அந்த சாதனையை வெறும் 289 போட்டிகளிலேயே தொட்டிருக்கிறார் விறுவிறு விராட் கோலி… மேலும், தனது பிறந்த நாளில் சச்சினின் சதச் சாதனையை சமன்படுத்திய கோலி, 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி தொடர்களில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதையும் வென்று சாதனை படைத்துள்ளார்…. இந்த பட்டியலில் இதற்கு முன்பு 11 ஆட்ட நாயகன் விருதுகளுடன் முதலிடத்தில் இருந்தவர் மேற்கு இந்திய அணிகள் வீரர் கிறிஸ் கெயில்… அவரது சாதனையைத் தான் 12 விருதுகளுடன் சத்தமில்லாமல் தகர்த்துள்ளார் கோலி…

அத்துடன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்றவர்களில் சச்சினுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் கோலி… இதுபோன்று எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரராகிவிட்ட கோலி, கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளும் ஏராளம்… ஆரம்ப காலகட்டத்தில் களத்தில் அடிக்கடி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வந்த கோலி, இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தபோது, ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை என்ற விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் அதையும் சாதித்து குட்பை சொல்லி விட்டார்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement