மகா கும்ப மேளா செலவு ரூ.7,500 கோடியாமில்லே!
நாட்டின் பண்பாடு மற்றும் ஆன்மீக அடையாளத்தை பறைசாற்றும் திருவிழா தான் கும்ப மேளா. புராணங்களில் குறிப்பிட்டபடி, சாகாவரம் தரும் தேவாமிர்தம் பெற அசுரர்களும், தேவர்களும், பாற்கடலில் கைலாச மலையை போட்டு ஆதிசேஷன் பாம்பை கயிறாக்கி கடைகிறார்கள் அதை பகிர்ந்து கொள்வதில் வந்த சண்டையில் அமிர்தம் சிதறி நான்கு இடங்களில் விழுந்ததாம். அந்த இடங்களான அலகாபாத், உஜ்ஜைன், ஹரித்துவார் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கும்ப மேளா நடத்தப்படுகிறது. 12 வருடங்களுக்கு ஒருமுறை நடப்பது மஹா கும்ப மேளா.
கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் கங்கை,யமுனை,சரஸ்வதி நதிகளின் சங்கமம் தான் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கமம் மிகப் புனிதமான இடமாகும். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் தான் கும்ப மேளா நடக்கிறது. நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதில், இந்த கும்ப மேளா முக்கிய பங்காற்றுகிறது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.இந்தக் கும்ப மேளா சுதந்திரப் போராட்டக் காலங்களில் தான் சூடு பிடித்தது. அப்போது, பொதுமக்களிடம் தேசப்பற்றை வளர்ப்பதற்காக பலவித யுக்திகள் கையாளப்பட்டன. விநாயகர் சதூர்த்தியில் பிள்ளையார் ஊர்வலங்களை அறிமுகப்படுத்தியது போல், இந்த கும்ப மேளாவுக்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்பட்டது.
தொடக்க காலங்களில் சாதுக்கள் மட்டுமே பிரதானமாக இருந்த மேளாவில் இன்று சாதாரண மக்களும் மிகப் பெரிய அளவில் கலந்து கொள்கின்றனர். அதனால், அதிகமான எண்ணிக்கையில் மக்கள் ஒரே இடத்தில் கூடும் உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவாக கின்னஸ் புத்தகத்திலும் தடம் பதித்திருக்கிறது கும்பமேளா.ஆம்.. நம் இந்தியா, பல வகைகளையும், வண்ணங்களையும் கொண்ட அதிஅற்புதமான கலாச்சாரம். இங்கே வாழும் மக்கள், அவர்கள் பேசும் மொழி, உணவு, அவர்கள் உடை உடுத்தும் விதம், இசை, நாட்டியம் என அனைத்துமே ஒவ்வொரு 50, 100 கிலோ மீட்டருக்கும் மாறுபடுகிறது. இப்படி வேறுபட்டு நிற்கும் இந்த கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமென்றால், கும்பமேளாவிற்கு செல்ல வேண்டும்.
வரலாற்றில் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசன் ஹர்ஷவர்த்தன் காலத்தில் மகா கும்பமேளாக்கள் நடைபெற்ற பதிவுகள் காணப்படுகின்றன. சீனப் பயணியான யுவான் சுவாங் தனது நூல்களில் கும்பமேளாவின் கம்பீரம் குறித்து எழுதியுள்ளார். ஆதி சங்கரரும் கும்பமேளா மற்றும் அர்த்த கும்ப மேளா குறித்துப் பதிவு செய்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வது மகா கும்பமேளா. பொதுவாக கும்பமேளா குருபகவானின் பயணத்தை அடிப்படையாகக் கொண்டது. குருபகவான் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு ராசிக்கு மாறுவது வழக்கம். அப்படி அவர் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்யும் ஆண்டில் பிரயாகையிலும் (அலகாபாத்) , சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் போது நாசிக்கிலும் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் போது உஜ்ஜைனியிலும், கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போது கும்பகோணத்திலும் மகா கும்பமேளா கொண்டாடப்படும்.
இந்த நான்கு இடங்களில் கும்பகோணம் மட்டுமே குளம். மற்ற இடங்கள் நதிகள். மற்ற மூன்று இடங்களை விட பிரயாகை மிகவும் சிறப்புப் பெற்றது. காரணம் இங்கு மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அமைந்துள்ளது. கங்கை, யமுனை ஆகிய இரு நதிகளோடு கண்களுக்குப் புலப்படாத சரஸ்வதி நதியும் இங்கே ஓடிவந்து கலப்பதாக நம்பப்படுகிறது. இப்படி சிறப்புப் பெற்ற 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா வரும் ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழா கருதப்படும் கும்பமேளாவால் பல ஆயிரம் கோடிகளுக்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே கங்கையில் நீராடினால் புண்ணியம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கும்பமேளா நடைபெறும் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் குளிப்பது மட்டுமே நம்பிக்கையில்லை. அது ஒரு வித இறை உணர்வு. தினம் தினம் மந்திர உச்சாடனம், சாதுக்களின் ஜெபம், ஹோமம், நடனம், பிராத்தனை, என கும்பமேளா நடைபெறும் இடமே ஒருவித தெய்வீக தன்மையுடன் காட்சியளிக்கும்.கும்பமேளாவில் உடலெங்கும் திருநீறு பூசியபடி மலர்மாலை மட்டுமே சூடி நாக சாதுக்கள் எனப்படும் நிர்வாண சாமியார்கள் ஊர்வலமாக வருவார்கள்.
அவர்கள் அனைவரும் ஹர ஹர மகாதேவா என்று மந்திரம் ஜெபித்தவாறு கடுங்குளிரையும் பொருட்படுத்தாது புனித நீராடுவார்கள். குறிப்பாக உத்தர பிரதேசத்தின் பிரயாக் ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறும் கும்பமேளா வில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புனித நீராடு வர். கும்பமேளாவின் வரலாற்று ஆவண தொகுப்புகளை ஆராய்ந்தால் அதில் பல தகவல்கள் உள்ளன.
கடந்த 1882-ம் ஆண்டு நடை பெற்ற மகா கும்பமேளாவில் சுமார் 8 லட்சம் பக்தர்கள் மவுனி அமாவாசை நாளில் புனித நீராடியுள்ளனர். அப்போது நாட்டின் மக்கள் தொகை 22.5 கோடியாக இருந்தது. அப்போது கும்பமேளாவுக்கு ரூ.20,288 செலவிடப்பட்டுள் ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.3.6 கோடிக்கு நிகரானது. 1894-ம் ஆண்டு 10 லட்சம் பேர் பங்கேற்றபோது இதன் செலவு ரூ.69,427- ஆக உயர்ந்தது. 1906-ம் ஆண்டில் 25 லட்சம் பேர் பங்கேற்றபோது, இதன் செலவு ரூ.90,000-ஆக உயர்ந்தது. 1918-ம் ஆண்டு 30 லட் சம் பேர் பங்கேற்றபோது ரூ.1.4 லட்சம் செலவானது.ஆனால் தற்போது அடுத்த மாதம் நடைபெறவுள்ள கும்ப மேளாவில் 40 கோடி மக்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு ரூ.7,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.