For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மதுரை மீனாட்சி & சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் - கோலாகலமாக நடைபெற்றது!

05:24 PM Apr 21, 2024 IST | admin
மதுரை  மீனாட்சி   சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்   கோலாகலமாக நடைபெற்றது
Advertisement

திருமண வரம் தரும், திருமண வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்களைப் போக்கும் தெய்வத் திருமணங்களில் மீனாட்சி திருக்கல்யாணம் இன்று மதுரையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆம்.. உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், நேற்று திக் விஜயம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் இன்று காலை நடைபெற்றுள்ளது. இவ்விழா வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

Advertisement

தேசம் முழுவதும் தன் ஆளுகைக்கு உட்படுத்த திக்விஜயம் செய்த மீனாட்சி, கயிலையில் ஈசனைக் கண்டதும் அவரை மணந்துகொள்ள விரும்பினார். மீனாட்சியின் விருப்பத்தை நிறைவேற்றத் திருவுள்ளம் கொண்ட ஈசனும் சௌந்திரபாண்டியனாக மதுரைக்கு வந்து மீனாட்சியை மணம் புரிந்துகொள்வார். அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரை மாதம் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த வருடத்துக்கான சித்திரைத் திருவிழா ஏப். 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.பின்னர் தினமும் அம்மனும் சுவாமியும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் திருவீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 8-ம்( ஏப்.19) நாளில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது‌. 9ஆம் நாள் நிகழ்வாக நேற்றிரவு திக்கு விஜயம் நடைபெற்றது.

மதுரைக்குப் பெருமை சேர்க்கும் மீனாட்சி திருமண வைபவத்தைக் காண, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். இன்று அதிகாலையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்கள். வீதியுலா முடிந்ததும் இருவரும் திருக்கோயிலின் முத்துராமையர் மண்டபத்தில் எழுந்தருளி, கன்னி ஊஞ்சல் ஆடி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள். அங்கேதான் தேவாதி தேவர்கள் ஒன்று கூடி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தை பேசி முடிப்பதாக ஐதீகம்.

திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், அம்பிகையும் ஐயனும் புதுப் பட்டு உடுத்தி, அழகிய ஆபரணங்கள் பூண்டு திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபத்துக்கு எழுந்தருளினார்கள். பின்னர் சுந்தரேஸ்வரரின் சார்பில் ஓர் அர்ச்சகர் மங்கல நாணை எடுத்துக் கொடுக்க, மீனாட்சி அம்மன் சார்பில் ஓர் அர்ச்சகர் மீனாட்சி அம்மனுக்கு வைரத்தால் ஆன மங்கல நாண் அணிவிக்க, மீனாட்சி திருக்கல்யாணம் இனிதே நிறைவு பெற்றது..!

மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை தரிசிக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், மீனாட்சி அம்மனை தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளினர்.மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும்போதே, பக்தர்கள் கூட்டத்தில் இருக்கும் சுமங்கலிப் பெண்கள், புதுத் தாலிக் கயிறு மாற்றிக்கொள்வார்கள். மங்களகரமான இந்த நாளில் புதுத் தாலிக் கயிறு மாற்றிக்கொண்டால் மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை. சுமங்கலிப் பெண்களுக்கு புதுத் தாலிக் கயிறுகளை கோயில் நிர்வாகமே வழங்கியது.

திருக்கல்யாண நிகழ்வைத் தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு தீப ஆராதனைகள் காட்டப்பட்டன. பின்னர் ஓதுவார்களால் பன்னிரு திருமுறைகள் ஓதப்பட்டன. இவ்விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கோயில் அறங்காவல் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கலந்துகொண்டனர்.

மேலும் கோயில் வளாகத்தைச் சுற்றிலும் 20 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால் 200 டன் குளிரூட்டும் இயந்திரங்கள் (ஏ.சி) பொருத்தப்பட்டுள்ளன. திருக்கல்யாண மேடை முழுவதும் பல்வேறு வகையான 2 டன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சம் பக்தா்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு லடத்துக்கும் அதிகமானோருக்கு திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றது. இதையொட்டி, மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags :
Advertisement