மத கஜ ராஜா - விமர்சனம்!
கோலிவுட்டில் தற்போது ஹீரோயின் இல்லாமல் கூட படம் வருகிறது. ஆனால் கோடம்பாக்க செட் பிராப்பர்டி என்றழைக்கப்படும் யோகிபாபு இல்லாத படமே இல்லை என சொல்லும் அளவுக்கு போய் விட்டது.இதற்கு காரணம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சம் தான். சந்தானம் ஹீரோவான பின்னர் யோகிபாபுவுக்கு போட்டியாக சூரி, சதீஷ் போன்ற காமெடி நடிகர்கள் இருந்தனர். அவர்களும் தற்போது ஹீரோவாகி விட்டனர்.முன்னொரு கால காமெடி மகாராஜா வடிவேலு கம்பேக் கொடுத்த பின்னர் காமெடி வேடங்களை விட குணச்சித்திர வேடங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனால் காமெடியன் என்றால் அது யோகிபாபு முகம் மட்டும் தான் என்கிற மகா காட்டமான நிலையில் கோலிவுட் உள்ளது.இச்சூழலில் எல்லை மீறிய கவர்ச்சி மற்றும் டபுள் மீனுங் வசனங்களுடன் 12 ஆண்டுகளுக்கு முன்னர் ரெடியான படமிது.. இப்பவும் பலருக்கு பிடித்துள்ளது என்பது மேலே சொன்ன சிரிப்பு நடிகர்களின் பஞ்சத்தால் மட்டுமே!
அதாவது கேபிள் டிவி நடத்தும் மதகஜராஜா (விஷால்) திடீரென தன்னுடைய ஹெட்மாஸ்டர் வீட்டு விழாவுக்கு கிளம்பி போகிறார். அங்கு தன் பால்ய பள்ளி கால நண்பர்களான சந்தானம், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் போன்றோரை சந்திக்கிறார். இதில் சந்தானத்துக்கு தன் மனைவியுடன் பிரச்சினை என்பதைத் தெரிந்து கொள்ளும் விஷால் அதை தலையிட்டு சரிசெய்து வைக்கிறார். இதுபோல, மற்ற நண்பர்களான நிதின் சத்யா, சடகோபன் ரமேஷூக்கும் அரசியல்பலம், ஆள் பண பலம்ம் கொண்ட தொழிலதிபரான சோனு சூட்டால் பிரச்சினை என்பதைத் தெரிந்து கொண்டு அதைத் தீர்த்து வைப்பதாக சொல்கிறார். சொன்னப்டி தன்னுடைய நண்பர்களுக்காக சாதாரண கேபிள் டிவி ஆபரேட்டரான விஷால் வில்லன் சோனு சூட்டை எதிர்த்து நண்பர்கள் பிரச்சினையை தீர்த்து எப்படித் தீர்த்து வைத்தார்? கூடவே அஞ்சலியுடன் வந்த காதல் வந்து பிரேக்கப் ஏன் ஆனது, வரலட்சுமி லவ்வுக்கு என்ன ஆனது? என்பது போன்ற எவருமே யூகிக்க முடியாத கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வதுதான் ‘மதகஜராஜா’ படக் கதை.
நாயகன் விஷால் அந்தக் காலத்தில் இளமையாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் அரசியல் மற்றும் பஞ்ச் வசனங்கள் பேசாமல் கேஷூவலாக இருப்பது பார்வையாளர்களுக்கு பெரும் ஆறுதல் அளித்திருக்கிறது. வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் காமெடி, காதல், என அனைத்திலும் அமர்க்களப்படுத்தியிருக்கும் விஷாலை, முன்னிலைப்படுத்தாமல் படம் முழுவதும் ஒரு நடிகையோ அல்லது ஒரு நடிகரோ உடன் இருப்பது போல் சுந்தர் சி திரைக்கதைக் கொண்டு போயிருப்பதால் விஷால் முகம் சலிப்பை தரவில்லை என்பதும் கூட குறிப்பிடத்தக்கது.
வரலட்சுமி, அஞ்சலி என இரண்டு இளம் நாயகிகள். காதல் என்ற பெயரில் சினிமா வழக்கப்படி ஹீரோவை சுற்றி வரும் கிளாமர் ஹீரோயின்ஸ். முன்னரே சொன்னது போல் சில இடங்களில் இவர்களது கவர்ச்சியும் காட்சிகளும் எல்லை மீறி முகம் சுழிக்க வைக்கிறது. இப்போதைக்கு சிரிப்பு நடிகர்கள் யாருமே இல்லாமல் போய் விட்ட சூழலில் மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு என காலஞ்சென்ற நடிகர்களை மீண்டும் திரையில் பார்ப்பது குதூகலத்தைக் கொடுக்கிறது. அதிலும் மனோபாலா & மணிவண்ணன் இரண்டு பேரின் கேரக்டர்களும் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக, இரண்டாம் பாதியில் அரசியல்வாதி நல்லமுத்துவாக மனோபாலா காமெடி அட்டகாசம்.மேலும் விஷாலின் நண்பராக நடித்திருக்கும் சந்தானம், வரும் காட்சிகள் எல்லாமே சிரிக்க வைக்கிறது. அதிலும், மனோபாலா, லொள்ளு சபா மனோகர், சுவாமிநாதன் ஆகியோருடன் சந்தானம் கூட்டணி அமைக்கும் போது காமெடி காட்சிகள் சரவெடியாக வெடித்து மக்களை மத்தாப் பூவாக சிரிக்க வைக்கிறது.
வில்லன் ரோலில் வரும் சோனு சூட், வழக்கமான பணக்கார வில்லன் வேடத்தில் கச்சிதமாக பொருந்தி, பர்ஃபெக்டாக நடித்து கவர்கிறாட். கெஸ்ட் ரோலில்
நடித்திருக்கும் ஆர்யா, விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் சடகோபன் ரமேஷ், நித்தின் சத்யா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். ஆனால் அவுட் ஆஃப் பேஷனாகி விட்ட ஹீரோ அறிமுக காட்சி, ஹீரோ- ஹீரோயினுக்கு பார்த்ததும் வரும் லாஜிக் இல்லாத லவ் டிராக், நினைத்ததும் வரும் பாடல்கள் இதெல்லாம் முதல் பாதியில் சகித்துக் கொள்ள ஒரே காரணம் சந்தானம் காமெடிதான். ஆனால், அதே சந்தானம் மாமியார் வைத்து காமெடி என்ற பெயரில் செய்யக்கூடைய விஷயங்கள் உவ்வே ரகம்.
விஜய் ஆண்டனி இசையில் ’மை டியர் லவ்வர்’ மற்றும் ரயில் பாடல் லவ்லி! கேமராமேன் ரிச்சர்ட் எம்.நாதன் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருப்பதோடு, சண்டைக்காட்சிகளில் கேமராவை சுழலவிட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
மொத்தத்தில் இப்போதெல்லாம் வரும் எல்லா படங்களில் சிரிப்பு வரவழைக்க வேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக சில காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். அவை பார்ப்பதற்கு யதார்த்தமாக இருக்காது. ஆனால், 10-15 ஆண்டுகளுக்கு முன்பு தயாரான அலட்டல் இல்லாத யூகிக்கக் கூடிய வழக்கமான மசாலா கதை, கொஞ்ச்மேனும் சிரிக்க வைக்கும் காமெடி, இரண்டு ஹிட் பாடல்கள், தாராள கவர்ச்சி காட்டும் கதாநாயகிகள் என்ற சுந்தர் சி-யின் பக்கா டெம்ப்ளேட் சினிமாவொன்று ஜெமினி பிலிம் சர்க்யூட்டை உயிர்தெழ வைத்து விட்டதென்னவோ நிஜம்..! மற்றபடி கண்டிப்பாக குடும்பத்தோடு போய் பார்க்கத் தகுந்த படமில்லை இது!
மார்க் 2.25/5