For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா- தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு பேராபிஷேகம் - விடீயோ

09:24 PM Oct 25, 2023 IST | admin
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 வது சதய விழா  தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு பேராபிஷேகம்   விடீயோ
Advertisement

ர்வதேச புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன், முடி சூட்டிய நாளை அவன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ராஜராஜ சோழனின் 1038 வது சதய விழா நேற்று, (24 ஆம் தேதி), காலை மங்கல இசையுடன் துவங்கியது.தொடர்ந்து திருமுறை பாடல்கள், கருத்தரங்கம், 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து சதய விழாவான இன்று ராஜராஜ சோழன் மீட்டெடுத்த பன்னிரு திருமுறைகளுக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு, ஓதுவார்கள் பன்னிரு திருமுறைப் பாடல்களை பாடி ஊர்வலமாக, யானை மீது எடுத்துச் சென்றனர்.

Advertisement

.இந்த ‘சதய விழா’ ஆயிரம் ஆண்டுகளை தாண்டியும் கொண்டாடப்பட்டு வருகின்றது? சாமானியர் முதல் தமிழ்நாட்டு முதலமைச்சர் வரை அரசு விழாவாகவே அறிவித்து தொடர்ந்து கொண்டாடி மகிழ்ந்து வரும் சதய திருவிழா கொண்டாட்டம் பற்றி இன்றைய இளசுகள் யாருக்கு எதுவும் தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லாமல் போய் விட்டதுதான் சோகம். ஆனலும் வழக்கம் போல் இரண்டு நாட்கள் அரசு விழாவாக ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்படுகிறது. சதயவிழா பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை ஒட்டி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.

Advertisement

உலக மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்று விளங்கும் இந்த பெரிய கோயிலை கட்டியவர் மாமன்னன் ராஜராஜசோழன். வானளாவிய கோபுரம் கொண்ட பெரிய கோவில் நமது முன்னோர்களின் பழங்கால வாழ்வியலின் வெற்றி சின்னம். நதிக்கரை நாகரீகத்தின் வெளிப்பாடு. சோழ சாம்ராஜ்யத்தின் அருமை பெருமைகளை ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பறை சாற்றும் பொக்கிஷமாக இந்த கோயில் விளங்குகிறது. . ராஜராஜேஸ்வரம், தஞ்சைப் பெருவுடையார் கோயில், பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படுகிறது.

தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இது பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். கோட்டைச் சுவர் வாயிலை அடுத்து உள்ள ஐந்து அடுக்கு கோபுர வாயிலுக்கு கேரளாந்தகன் நுழைவாயில் என்று பெயர். அடுத்து 3 அடுக்குகளுடன் ராஜராஜன் திருவாயில் அமைந்துள்ளது. இவை தவிர, தென்புறம் இரண்டும், வடபுறம் இரண்டுமாக நான்கு வாசல்கள் உள்ளன. பெரிய கோயில் கோபுரத்தைவிட பெருவுடையாரின் விமானம் பிரமாண்டமானது. சுமார் 216 அடி உயரத்துடன் திகழும் இந்த விமானம், ஆசியாவிலேயே மிகப் பெரிய விமானம், தஞ்சைப் பெருவுடையார் கருவறை விமானம்தான். சிற்பக்கலை, கட்டிடக் கலை ஓவியக் கலை என ஆலயம் சார்ந்த அத்தனை கலைகளையும் சிறப்பாக பறை சாற்றும் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ள கோவில் தஞ்சை பெரிய கோவில் என்றால் அது மிகை ஆகாது.

அப்பேர்பட்ட கோயிலை நமக்கு வழங்கிய ராஜ ராஜ சோழன் சதய விழாவான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் வெளிப்புறத்தில் அமைந்துள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து பல்வேறு கட்சியினர், அமைப்பினர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து பெருவுடையாருக்கு 48 வகையான பொருட்களைக் கொண்டு பேராபிஷேகம் செய்யப்பட்டது.

வில்வம் இலை, வன்னி இலை, நொச்சி இலை, பிச்சி இலை, அத்தி கொழுந்து, அரசன் கொழுந்து, ஆலம் கொழுந்து, மாங்கொழுந்து, பலாக்கொழுந்து, விளாக்கொழுந்து, ஜெர்மன் பச்சிலை, விபூதி அபிஷேகம், தைலகாப்பு அபிஷேகம், சாம்பிராணி தைலம் அபிஷேகம், நவகவ்ய அபிஷேகம் , திரவிய பொடி அபிஷேகம், வாசனைப் பொடி அபிஷேகம், நெல்லி முன்னி பொடி அபிஷேகம், மஞ்சள் பொடி அபிஷேகம், அரிசி மாவு பொடி அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. மேலும், தேன் அபிஷேகம், நெய் அபிஷேகம், பசும் பால் அபிஷேகம், பசுந்தயிர் அபிஷேகம், மாதுளை முத்து அபிஷேகம், பிலாச்சுளை அபிஷேகம், ஆரஞ்சு சுளை அபிஷேகம், அன்னாசி அபிஷேகம், திராட்சை அபிஷேகம், விளாம் பழம் அபிஷேகம், கொளிஞ்சி பழம் அபிஷேகம், நார்த்தம் பழச்சாறு அபிஷேகம், சாத்துக்குடிசாறு அபிஷேகம், எலுமிச்சை பழச்சாறு அபிஷேகம், கருப்பஞ்சாறு அபிஷேகம், இளநீர் அபிஷேகம், அன்னாபிஷேகம், சந்தன அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், ஏகதாரை அபிஷேகம், சகஸ்ரதாரை அபிஷேகம், சிங்கேதனம் அபிஷேகம், வலம்புரி சங்கு அபிஷேகம், சொர்ணாபிஷேகம், கங்கா ஜலம் அபிஷேகம், 108 ஸ்தாபன கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி ஆகிய 48 பொருட்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத், சதயவிழாக் குழுத் தலைவர் து.செல்வம், பரம்பரைஅறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, துணைமேயர் மரு.அஞ்சுகம் பூபதி, துணைத் தலைவர் சந்திரசேகரமேத்தா, தருமபுரஆதீனம் குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாநகர நலஅலுவலர் மரு.சுபாஷ் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement