For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ம. பொ. சிவஞானம்!

06:24 AM Oct 03, 2024 IST | admin
ம  பொ  சிவஞானம்
Advertisement

தாய்மொழியாம் தமிழுக்குத் தொண்டு, தமிழகத்துக்குச் சேவை, எல்லோரிடத்தும் அன்பு, எப்போதும் நேர்மை என்று வாழ்வது கடினம். ஆனால் அப்படி வாழ்ந்து காட்டியவரை மறந்துவிடுவது வெகு சுலபம் போலும்! ம.பொ.சி என்கிற ம.பொ.சிவஞானம் அப்படிப்பட்ட மாமனிதர். ஆனால் அவரை ஏனோ மறந்துவிட்டார்கள்அதாவது சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தமிழருக்கென்று ஓர் அரசு அமைந்தாக வேண்டும். தமிழ் மொழி வளர, தமிழர்கள் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும். தமிழர்களுக்கான உரிமைகளைத் தமிழர்களே நிர்ணயிக்க, தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்னும் வேட்கையுடன் தனி முழக்கமாக, தமிழ் முழக்கமிட்டவர் ம.பொ. சிவஞானம். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் பல பகுதிகள் பிற மொழி பேசும் மாநில எல்லைக்குள் செல்ல இருந்தது. அதற்கான முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி சென்னை, திருத்தணி கன்னியாகுமரி, நாகர்கோயில் போன்ற பகுதிகள் இன்றைய தமிழ்நாடு வரைபடத்தில் இருப்பதற்குக் காரணமாகத் திகழும் ம.பொ. சிவஞானம் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை வரலாற்று ஆசிரியர்கள் கூட சொல்ல மறந்த நிலையில் இளைய தலைமுறையினரை குறை சொல்வதில் பயனேதுமில்லை.

Advertisement

இளம் வயதில் இருந்தே சமூக அக்கறை கொண்டே வளர்ந்தார். மொழியின் மீது பற்றும் தேசத்தின் மீது மதிப்பும் கொண்டிருந்தவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயலாற்றினார். 1936-ம் ஆண்டில் சென்னை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டியின் துணைச் செயலாளராக இருந்தார். 1947-ம் ஆண்டில் சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பொறுப்பில் பணியாற்றினார். 1951-ல் தமிழ்நாடு காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராக செயலாற்றினார். இப்படியாக, தன் பொதுவாழ்வை அமைத்துக்கொண்டு, தமிழகம் முழுவதும் பயணப்பட்டார்.

Advertisement

தொழில் வளர்ச்சி மீதும் தொழிலாளரின் மேன்மை மீதும் மிகுந்த அக்கறை கொண்டிருந்த ம.பொ.சி. 1934-ம் ஆண்டில் சென்னை கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கத்தின் செயலாளராகவும் முன்னதாக 1932-ல் சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றி, தொழிலாளர்களின் வளர்ச்சிக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் போராடினார். சென்னை ராயபுரம் கணேஷ் அலுமினியத் தொழிலாளர் சங்கத்தின் துணைத்தலைவராக 1937-ம் ஆண்டில் இருந்து ஐந்து வருடங்கள், செயல்பட்டார். அதேநேரம் சென்னை பட்டன் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து பல தொழிலாளர் சங்கங்களுடன் கலந்து, பேசி, தொடர்பு கொண்டு, தொழிலாளர்களின் மேன்மைக்காக செயல்பட்டார்.

அதுமட்டுமா? அரசியல் பணி ஒருபக்கம், தொழிலாளர்களுடன் நல்லுறவு ஒருபக்கம் என்று இருந்து வந்த அதேவேளையில், சமூகத்திலும் பல பணிகளில் ஈடுபட்டார். 1934-ம் ஆண்டில், சென்னை வடசென்னை அரிசன சேவாசங்கத்தின் செயலாளராகவும் சென்னை அரிசன சேவா சங்கத்தின் பிரச்சாரகராகவும் கிராமணி குல மகாஜன சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றினார்.அதேபோல், 1968-ம் ஆண்டில் இருந்து மூன்று வருடங்கள், தமிழ்நாடு அரசு பிற்பட்டோர் நலக்குழு உறுப்பினராகவும் தமிழ்நாடு கதர் கைத்தொழில் வாரிய உறுப்பினராகவும் இருந்து செயலாற்றினார். 1976-ம் ஆண்டில், போலீஸ் கமிஷன் உறுப்பினராகவும் இருந்து செம்மையான முறையில் செயலாற்றியதைப் பலரும் நினைவுகூர்கிறார்கள்.

தான் எடுத்துக்கொண்ட அரசியலில் நேர்மையாகவும் தொழிலாளர் நலனில் வீரியத்துடனும் சமூக நலனில் மிகுந்த அக்கறையுடனும் செயலாற்றிக் கொண்டிருந்த அதேகாலகட்டத்தில், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக, 1955-ம் ஆண்டில் பணியாற்றினார். அதே ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் தலைவராகவும் இருந்து செயல்பட்டார். இதனிடையே பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகங்கள் ம.பொ.சியின் மனசாட்சி என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள். இதுவரை 150 புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

சிவஞானம், ம.பொ.சிவஞானம் என்றும் ம.பொ.சி. என்றும் அழைக்கப்பட்டார் அல்லவா. இவரின் தமிழ்ப் புலமையால், 1950-ம் ஆண்டில், பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை, ‘சிலம்புச் செல்வர்’ எனும் பட்டத்தை வழங்கினார். அன்றில் இருந்து சிலம்புச் செல்வர் ம.பொ.சி. என்றே அழைக்கப்பட்டார்.இப்படி, சமூக, அரசியல், பொருளாதார, தமிழ் எழுத்துலகம் என பல்வேறு தளங்களிலும் உண்மையாகவும் நேர்மையாகவும் செயலாற்றிய ம.பொ.சி. சுதந்திரப் போராட்டத் தியாகியும் கூட! 1928-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரை சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அதற்காக, ஆறு முறை சிறைத்தண்டனை அனுபவித்திருக்கிறார். குறிப்பாக, தமிழக வடக்கு எல்லைக் கிளர்ச்சியைத் தொடங்கி, அதில் 1953-ம் ஆண்டு தணிகையில் ஆறு வார கடுங்காவல் தண்டனையும் சென்னை சிறையில் ஒரு வார சிறைவாசமும் மத்தியப் பிரதேசத்தின் அமராவதி சிறைச்சாலையில் ஓராண்டு காலமும் சிறைவாசமிருந்தார் சிலம்புச் செல்வர்.

காந்திய சிந்தனைகள் கொண்ட சிலம்புச் செல்வர், கதர் வளர்ச்சி, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு என தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். 1984-ம் ஆண்டு முதல் கிண்டி காந்தி நினைவு மண்டப ஆலோசனைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.1946-ம் ஆண்டில், தமிழரசுக் கழகம் என நிறுவினார். அதன் தலைவராகவும் செயல்பட்டார். மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தமிழகத்தில் தொடங்கி 1956-ல் தமிழ் மாநிலம் அமையச் செய்தார். அதற்காக ஏராளமான போராட்டங்களும் விளக்கக் கூட்டங்களும் நடத்தினார்.

தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை நடத்தி, வடக்கெல்லையில் ஒரு தாலுகாவும் ( தணிகை), தெற்கு எல்லையில் ஐந்து தாலுகாக்களும் (குமரி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம்) தமிழகத்துடன் இணையக் காரணமானார். அவற்றுக்காக பெருங்குரலெடுத்துப் போராடியவர் ம.பொ.சி. என்பதெல்லாம் வரலாறு.சென்னை மீது ஆந்திரர் உரிமை கொண்டாடியதை எதிர்த்துப் போராடி, “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முழக்கம் செய்து, தலைநகரைக் காத்தார். அதுதான்... அப்போது பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி.

உள்ளாட்சி மற்றும் சட்டமன்றப் பணிகளிலும் ஈடுபட்டு, தன் திறமையை, தன் நேர்மையைக் காட்டியிருக்கிறார் ம.பொ.சி. சென்னை மாநகராட்சியில் அப்போது இருந்த ஆல்டர்மேன் பதவியிலும் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 72-ம் ஆண்டு முதல் 78-ம் ஆண்டு வரை சட்டமன்ற பேரவை உறுப்பினராகவும் 78-ம் ஆண்டு தொடங்கி 86-ம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பணியாற்றினார். 95-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி ம.பொ.சி. மறைந்தார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில், பாண்டிபஜாரில், போக் ரோட்டில்... இப்போதைய செவாலியே சிவாஜிகணேசன் சாலையில், அவருக்கு சிலை வைத்து மரியாதை செலுத்தினார் கலைஞர் மு.கருணாநிதி.

ம. பொ. சிவஞானம் நினைவு நாளின்று

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement