தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

'நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு’ தினம்!

06:11 AM Aug 01, 2024 IST | admin
Advertisement

புற்றுநோய் என்பது மனித உடலின் எந்தப் பகுதியையும் பாதிக்கும் நோய். மனிதனின் வாழ்வியல் மாற்றம், உணவு பழக்கம், போதை பழக்கம், மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் உலக அளவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த உலக அளவில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததால் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு முக்கிய சில புற்றுநோய்களில் ஒன்றான நுரையீரல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆகஸ்ட் 1-ம் தேதி ‘நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு’ தினம் கடைபிடிக்கப்படுகிறது.. இந்தியாவைப் பொறுத்தவரை, அதிகளவில் ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோயாக உள்ளது நுரையீரல் புற்றுநோய் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது உலகெங்கிலும் புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மார்பகப் புற்றுநோயைப் பற்றி கிராமத்தில் இருக்கும் பெண்களுக்குக்கூட அரசாங்கமும் சில தன்னார்வ அமைப்புகளும் விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகின்றன. ஆனாலும், நுரையீரல் புற்றுநோயைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. காரணம், இது எளிதில் ஏற்படக்கூடிய மாசு நிறைந்த சூழலில் வசிக்கிறோம் என்பதுதான். கவனம்... நாம் வசிக்கும், வேலை செய்யும் இடங்களில் டீசல் வெளியேற்றிய புகையை சுவாசிப்பது, ஆஸ்பெஸ்ட்டாஸ் (Asbestos) கூரையின் கீழ் வசிப்பது போன்ற சூழல் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காற்று மாசும் ஒரு காரணம்.

Advertisement

இதைத் தவிர புகைப்பிடிப்பவர்களுக்கும் அப்புகையை அருகே இருந்து சுவாசிப்பவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு 90 சதவிகித வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் புகைக்கிறார் என வைத்துக்கொள்வோம். இப்படித் தொடர்ந்து 10 ஆண்டுகள் புகைபிடித்தால், அவரது உடல்நிலை, 20 ஆண்டுகளாக புகைபிடிப்பவரின் உடல்நிலைக்குச் சமமாகிவிடும். இதுபோன்ற நிலையில், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம். இதில், நாம் ஆறுதல் அடையக்கூடிய விஷயம் ஒன்று இருக்கிறது. நுரையீரல் புற்றுநோயின் அறிகுறி தெரிந்தவுடன், ஆரம்பத்திலேயே அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால், அதை முற்றிலும் குணப்படுத்திவிடலாம்!

நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பு யாருக்கெல்லாம் அதிகம்?

புகைப்பிடிப்பவர்களுக்குத்தான் நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம். 100-ல் கிட்டத்தட்ட 90 பேருக்கு, இப்புற்றுநோய் புகையிலையால்தான் வருகிறது. மற்றபடி மோசமான பேசிவ் ஸ்மோக்கிங்கிற்கு உள்ளாகும் நபர்கள் (நெருங்கிய ஒருவருக்கு உள்ள சிகரெட் பழக்கத்தால், அதிக சிகரெட் புகையை தானும் சுவாசித்து நேர்ந்து, அதனால் பாதிக்கப்படுவது), ரசாயண / பெட்ரோல் / ரப்பர் போன்ற தொழிற்சாலைகளில் பணிசெய்யும் நபர்கள், ஆஸ்துமா - பிரான்கிடிஸ் எனப்படும் நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள், மரபணுவால் குடும்ப வழியாக பாதிக்கப்படும் நபர்கள் ஆகியோருக்கும் இப்புற்றுநோய் வரக்கூடும்.

இதன் அறிகுறிகள் என்னென்ன?

நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் சிரமம். இருப்பினும் வருடம் ஒருமுறை சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்துகொண்டால் நுரையீரல் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறியலாம்.

10 - 15 வருடங்களாக புகைப்பழக்கம் இருப்பவர்கள் வருடம் ஒருமுறை கட்டாயம் சிடி ஸ்கேன் எடுத்து நுரையீரல் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய வேண்டும். இவர்களை போலவே யாருக்கெல்லாம் வரலாம் என்ற லிஸ்ட்டில் இருக்கும் பிறரும் கவனமாக இருக்க வேண்டும்.

இதைத் தொடக்கத்தில் கண்டறிவதில் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. அதனாலேயே இந்தியாவில் அதிகம் பேரை தாக்கும் புற்றுநோயாக நுரையீரல் புற்றுநோய் உள்ளது.

தொடக்க நிலைக்கு அடுத்த நிலையில் இப்பாதிப்பு ஏற்படுவோருக்கு சில அறிகுறிகள் தெரியலாம். அவை

* இருமலின்போது ரத்தம்,

* பசி குறைதல்,

* உடல் எடை குறைதல்

* மூச்சுத்திணறல்

* சோர்வு

* தொடர் இருமல், நிமோனியா போன்ற பாதிப்புகள்

* புதிதாக வீசிங் தொந்தரவு

* பெருமூச்சு அல்லது இருமலுடன் கூடிய நெஞ்சு வலி

* மிக மோசமான இருமல்

போன்றவை. இவற்றில் எது வாரக்கணக்கில் தொடர்ந்தாலும் உடனடி மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் முக்கியம்.

சிகிச்சைகள் என்னென்ன?

முன்பெல்லாம் ஓபன் சர்ஜரி செய்து புற்றுநோயை குணப்படுத்தினார்கள். இப்போது அப்படியல்ல. சின்ன சின்ன துளைகள் மூலம் எளிமையாக அறுவை சிகிச்சை செய்து நுரையீரல் புற்றுநோயை சரிசெய்து விடலாம். அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இப்படியான சிகிச்சைகளை மேற்கொண்டால், 2 - 3 நாட்களிலேயே நோயாளிகள் வீட்டுக்கு சென்றுவிடலாம்.

ரோபோடிக் சிகிச்சைகள் மூலம் இதை இன்னும் எளிமைப்படுத்தலாம். இருப்பினும் இவையாவும் தொடக்க நிலை பாதிப்புகளுக்குத்தானே தவிர, தீவிர நிலைக்கு அல்ல. புற்றுநோய் தீவிரமடையும் போது, சிகிச்சைகளும் தீவிரமாகும். கீமோ வரை செல்லும். ஆகவே பிற புற்றுநோய்களைப்போல, எவ்வளவு விரைந்து கண்டறிகிறோமோ அவ்வளவு நல்லது.

இந்நோயாளிகளுக்கு கீமோ சிகிச்சை போலவே இம்யூனோதெரபி போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்படும். இம்யூனோ தெரபி என்பது, உடலிலுள்ள புற்றுநோய் திசுக்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது. இதன் மூலம் உடலே இப்புற்றுநோய் பாதிப்புக்கு எதிராகப் போராடும். இந்த இம்யூனோ தெரபி, மருந்து - மாத்திரைகள் - ஊசி முதல் உணவு வரை எல்லா வகையிலும் நோயாளிக்கு கொடுக்கப்படும். இவைதான் அடுத்தடுத்து உடலை மீண்டும் புற்று பாதிப்பு தாக்காமல் இருக்க உதவும்.

நுரையீரல் புற்றுநோயை தடுப்பது சாத்தியமா?

தடுப்பது சாத்தியமில்லை. ஆகவே யாருக்கு நோய் பாதிப்புக்கான சாத்தியக்கூறு உள்ளதோ, அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புகைப்பிடிப்பது நிச்சயம் கூடாது. புகைப்பிடிக்க தொடங்கி பல வருடங்கள் கழித்துதான் நோய் வருமென நினைத்து, புகைப்பதை நிறுத்துவதற்கு காலதாமதம் செய்யக்கூடாது.

சிகரெட் பழக்கத்தை விட முடியாமல் தவிப்போர், மருத்துவ உதவியை நாடவும். எவ்வளவு முன்கூட்டியே நோயை கண்டறிகிறோமோ அவ்வளவு விரைந்து எளிமையாக அதிலிருந்து மீளலாம் என்பதால் வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை கட்டாயம்

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
'Lung Cancer Awareness' Day!cancerCancer Awarenesshealth alertlung cancerworld lung cancer dayநுரையீரல் புற்றுநோய்
Advertisement
Next Article