லப்பர் பந்து - விமர்சனம்!
பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விளையாட்டுகளை மையமாக வைத்து நிறையப் படங்கள் வெளிவருகின்றன.ஆனால் அவை பெரும்பாலும் யதார்த்தத்தில் இருந்து விலகி மிகையான சித்தரிப்புகளாகவே அதிகம் இருக்கின்றன.வெகு சிலப் படங்களே நேரமையாகவும் அதே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் அமைகின்றன.அந்த வகையில் கிரிக்கெட் அதில் சென்டிமெண்ட் என்பது வெற்றிக்கான உறுதியான பார்முலா. அப்படி உருவான பல படங்கள் ஜெயித்திருக்கின்றன. சென்னை 28, கனா, ஜீவா, இந்தியில் கூமர், 83, ஜெர்சி, போன்ற படங்களைச் சொல்லலாம். கிரிக்கெட், செண்டிமெண்ட் அதில் லேசாகச் சாதிய பாகுபாடுகள் சேர்த்து விட்டால் இன்றைய வெற்றிப்படம் தயார். அப்படி வந்திருக்கும் ஒரு படம் தான் ஹரிஷ் கல்யாண், தினேஷ் நடிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வந்துள்ள லப்பர் பந்து.. இப்படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து அறிமுக இயக்குநராக இருந்தபோதிலும், தனது முதல் படத்திலேயே அடிச்சு ஆடி ஸ்கோர் செய்து அள்ளி விட்டார்.
‘அட்டகத்தி’ தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோருக்கு கதையின் பிரதான பாத்திரங்கள். இந்த இருவருக்கும் இடையேயான ஈகோ மோதல் தான் கதை. இருவருக்கும் சமமான வாய்ப்பை இயக்குநர் கொடுத்திருக்கிறார். வாய்ப்பை இருவருமே தவறவிடவில்லை.அதாவது வில்லேஜ் ஒன்றி உள்ள ஒரு கிரிக்கெட் அணியில் துவக்க ஆட்டக்காரராக இறங்கி அனைத்துப் பந்துகளையும் சிதற அடிப்பவர் கெத்து (தினேஷ்) அவரைப் பார்த்து வளர்ந்த ஒரு பையனாக அன்பு (ஹரிஷ்). அனைவருக்கும் அவர் சிம்ம சொப்பனமாக இருந்தாலும் அவரது வீக்னஸ் தெரிந்த ஒரு பௌலர் அன்பு. அவரது பேச்சை அவர் வேற்று சாதிக்காரர் என்பதாலேயே யாரும் மதிப்பதில்லை. ஆட்டத்திலும் சேர்த்துக் கொள்வதில்லை.சினிமா வழக்கப்படி அவர் யாரென்று தெரியாமலேயே தினேஷின் மகளைக் (சஞ்சனா) காதலிக்கிறார். ஒரு சூழ்நிலையில் அன்புவும் கெத்தும் எதிரெதிர் அணியில் விளையாட நேர்கிறது. அதில் அவரது பலவீனத்தைப் பயன்படுத்தி அவரை வீழ்த்திவிடுகிறார் அன்பு. அடுத்து என்ன ஆகிறது. இவர்கள் இணைந்தார்களா காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் லப்பர் பந்து கதை.
படத்தின் பெரும் பலமே அதன் கதாபாத்திர வார்ப்புகள்தான். ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தினேஷின் நண்பராக வரும் ஜென்சன் திவாகர் என அனைவரது கேரக்டர்களும் கதையோட்டத்துக்கு வலு சேர்க்கின்றன. அட்டகத்தி தினேஷுக்கு நீண்டநாட்களுக்குப் பிறகு பேர் சொல்லும்படியான ஒரு ரோல். ஈகோ தலைக்கேறிய நபராகவும், அதே நேரம் மனைவி, மகளிடம் அடங்கிப் போகும் குடும்பத் தலைவனாகவும் கலக்கியிருக்கிறார்.
ஹரிஷ் கல்யாண் முற்றிலும் புதிய கதாபாத்திரம். மேலும் கிராமப்புற பின்னணியில் அவர் நடித்துள்ள முதல் படம் இது. படத்தின் பெரும்பாலான பகுதிகளில் தனது நடிப்பை மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறார். கோபத்தை கட்டுப்படுத்தி, அளவிடப்பட்ட விதத்தில் வெளிப்படுத்துகிறார். இது களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் என்ன செய்தாலும் அட்டகாசமாக அடித்து நொறுக்கும் தினேஷுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது.
தினேஷின் மனைவி வேறு சாதியை சேர்ந்தவராக இருப்பதால், அவரிடம் மாமியாராக வரும் கீதா கைலாசம் காட்டும் கோபத்தையும் பாசத்தையும் சிறப்பான முறையில் டைரக்டர் வெளிப்படுத்தியிருக்கிறார். காளிவெங்கட், பால சரவணன் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரத்தில் சிறப்பான நடித்துள்ளனர். காளிவெங்கட் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் அப்ளாஸ் பறக்கிறது.
ஷான் ரோல்டனின் இசை, தினேஷ் புருஷோத்தமனின் கேமரா ஒர்க் , ஜி மதனின் எடிட்டிங் போன்றவை பலே சொல்ல வைக்கிறது . பாடல்கள் மான்டேஜ் காட்சிகளாக அமைத்திருப்பது சிறப்பு.
சாதியைக் காரணம் காட்டியேத் தன்னை ஒதுக்குகிறார்கள் எனது தெரிந்தும் பெரிதாக எதிர்த்துப் போராடாமல் நின்று சாதித்துக் காட்டுவோம். நமக்கு நடந்ததை நாம் பிறருக்குச் செய்யக் கூடாது எனக் கிளைமாக்ஸ் மேட்சில் அவர் செய்யும் காரியம் அடடே சொல்ல வைக்கிறது.படம் இப்படி ஆரம்பித்து இப்படித் தான் முடியும் என நம்மால் கேஷூ வலாக ஊகிக்க முடிந்தாலும் கிளைமாக்சில் ஒரு சின்னத் ட்விட்ஸைக் கொடுத்துத் தினேஷும், ஹரிஷும் நடந்து போகையில் அவர்கள் பனியனில் இருக்கும் அன்பு, கெத்து என்ற பெயர்களைக் காட்டி அன்பு தான் கெத்து என்பதை எல்லா ரசிககளும் உணர்து கை தட்டியப்படி வெளியேறிவதை பார்க்க முடிந்தது.
மொத்தத்தில் இந்த லப்பர் பந்து - நியூ டைரக்டர் தமிழரசன் பச்சமுத்துவின் கோல்ட் பால்.
மார்க் 3.5/5