தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஐயஹோ.. தமிழகத்தின் போக்கைப் பாரீர்!

05:56 AM Jul 23, 2024 IST | admin
Advertisement

மிழ் மண் எதிர்கொண்டுள்ள சவால்களை நினைத்தால் தலையே வெடித்து விடும் போல் இருக்கிறது....!

Advertisement

ஆளும்கட்சி...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒரு மாத காலத்திற்குள் எதிர்கொள்ள முடிந்த ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்திற்கு தலைவரை நியமிக்க முடியாமல் திணறுவது வியப்பாக இருக்கிறது? இளம்தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பற்றி துளியும் கவலை இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது? கோவை மற்றும் நெல்லையில் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டதுடன் ஜனநாயக மாண்புகளை குழிதோண்டி புதைத்த மேயர்களை அகற்றி பல நாட்கள் கடந்த பிறகும் கூட புதிய மேயரை உடனடியாக தேர்வு செய்ய முடியாத அளவுக்கு ஆளும்கட்சித் தலைமை பலவீனமாக இருக்கிறதா?

Advertisement

துணை முதல்வராகிறார் முதல்வரின் புதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்று முதன் முதலில் புரளியை கிளப்பியவர் யூட்யூப்பர் சங்கர்.. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே தனியொரு கட்டுரையை வெளியிட்டவர். அன்றிலிருந்து விவாதப் பொருளாக மாறியிருக்கும் துணை முதல்வர் பதவியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வெகு விரைவாக ஒப்படைத்து விடலாம்..!யூட்யூப்பர் சங்கரின் புரளிக்கு கிடைக்காத முக்கியத்துவம், நக்கீரன் செய்தியாளர் பிரகாஷுக்கு அமோகமாக கிடைத்துவிட்டது. கடந்த வாரத்தில் துணை முதல்வர் பதவி குறித்தும் அமைச்சரவை மாற்றம் குறித்தும் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட நான்கு வரி செய்தி, மாநிலத்திலும் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் சூடான விவாதத்தை ஏற்படுத்திவிட்டது. அன்றாடம் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் செய்தியாளர்கள் கூட தங்களுக்கு நெருக்கமான ஆளும்கட்சி பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டு தகவலை உறுதிப்படுத்தும் திறனின்றி, பிரகாஷ் பதிவையே மேலும் மேலும் பரப்பிக் கொண்டிருந்ததுதான், ஊடகத்துறைக்கு நேர்ந்துவிட்ட சாபக்கேடு. இல்லையென்றால், முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல, அமைச்சர் துரைமுருகன் எல்லாம் துணை முதல்வர் பதவி பற்றி பேசக் கூடுமா?

இயக்குனர் பா.ரஞ்சித்..

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து திரைப்படம் இயக்கியவுடனேயே தன்னை ஒப்பற்ற தலித் தலைவராக நினைத்துக் கொள்ள தொடங்கிவிட்டார். மேடைகளில் பேசும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தமிழினத்தின் வரலாற்றை முழுமையாக வாசித்து அறிந்து கொண்டவன் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையிலேயே அவரின் பேச்சுகள் பொதுதளங்களில் சர்ச்சையை கிளப்பியது. தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களின் விடியலுக்கு உண்மையான வழி கல்வியறிவு பெறுவதுதான் என்று டாக்டர் அம்பேத்கர், அயோத்திதாசர் என்று அறிஞர்கள் பலர் எடுத்துரைத்ததை மக்களிடம் கொண்டு செல்வதற்கு ஊக்கம் கொடுக்காமல், உணவுப் பழக்கத்திற்கும் ஆடல், பாடல்கள் போன்ற கவனத்தை சிதறடிக்கும் விடயங்களுக்கு முக்கியத்துவமும் பணமும் செலவழித்ததிலும் காட்டிய ஆர்வத்தின் மூலம் பா.ரஞ்சித் தன்னை அரைவேக்காடு என்று நிரூபித்திருக்கிறார். விளிம்பு நிலை மக்களை குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களை தவறான பாதையில் வழிநடத்துவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் பா.ரஞ்சித் வாழும் காலத்திலேயே, கல்வி மட்டுமே மனிதனை மானமுள்ளவனாக, மாமனிதனாக உருவாக்கும் என்பதை பிரபல இயக்குனர்கள் வெற்றிமாறனும் மாரி செல்வராஜும் அழுத்தம் திருத்தமாக கூறுவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சரியான திசையை காட்டிக் கொண்டிருக்கிறது என்ற நிம்மதியை தருகிறது.

அதிமுக

பதவியை பெற்றுத் தருகிற கால்கள், எத்தகையகதாக இருந்தாலும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதற்கு தயாராக இருப்பவரை, ஒப்பற்ற ஒரு சமுதாயத்தின் தன்நிகர் இல்லாத தலைவராக உருவகப்படுத்த, ஊடகவியலாளர்கள் உள்பட சிறு கூட்டம் துடிப்பதும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக மேற்கொள்ள வேண்டிய கூட்டணி வியூகத்தை இன்றைய தேதியிலேயே எடுக்க சொல்லி வற்புறுத்துவோராகவும் சிறு கூட்டம் மாறியிருப்பது வெட்கக்கேடனாது. அவரவர் சுயநலத்திற்காக, மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா வழியில் பயணித்து, அரசியல் பாடம் கற்றுக் கொண்ட அதிமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இல்லாத போராட்ட உணர்வுகளை, ஊடகவியலாளர்களும் அன்றாட பிழைப்புக்காக அரசியல் செய்து கொண்டிருக்கும் சில நபர்களும் உருவாக்க மெனக்கெடுவது, அறமாகுமா என்ன?

தமிழ் தேசியம்...

நூறாண்டுகளுக்கு முன்பு தனித்தமிழ் இயக்கத்தைக் கண்ட மறைமலையடிகள் பிறந்த மண்ணில், தமிழ் தேசியம் தழைத்தோங்குவதற்கு வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகச் சுடர்கள் திரு.வி.க., கி.ஆ.பெ,விசுவநாதம், சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி.,ஆகியோரின் உயிர்மூச்சாக இருந்த தமிழ் தேசியம், இன்றைக்கு எதிர்கொண்டிருக்கும் அவமானம் கொஞ்சம் நஞ்சமல்ல.. சி.பா.ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட அரசியல் இயக்கமான நாம் தமிழர் கட்சிக்கு, சீமானைப் போல சுயநலம் படைத்த வேறு எந்தவொரு தமிழ் தேசியவாதியாலும் இந்தளவுக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. மண்ணாசை, பொன்னாசையை விட பெண்ணாசை மீது தலைமை ஒருங்கிணைப்பாளருக்கும் அவரது தம்பிமார்கள் சிலருக்கும் இருக்கும் பித்து, சமூக ஊடகங்களில் சிரித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் தேசியத்தை உயிர் மூச்சாக கொண்டு களமாடி வரும் அறிவார்ந்த இளம் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல், உலகளவில் பரந்து கிடக்கும் தமிழ் தேசியவாதிகளை ரத்தக்கண்ணீர் வடிக்க வைத்திருக்கிறது.

நாதியற்று போய்விடுமோ தமிழ் இனம்?

தாரை இளமதி

Tags :
Politicsஅதிமுகஅரசியல்சீமான்தமிழ்நாடு அரசியல்திமுகபா ரஞ்சித்
Advertisement
Next Article