இதயத்தின் செயல்பாடு சிறக்க தூக்கத்தில் அமைதி தரக்கூடிய சொற்களை கேட்கலாம் : ஆய்வுத் தகவல்
உறக்கம் - நாம் அனைவரும் அன்றாடம் செய்யும் ஒன்றுதான். 24 மணி நேரத்தில் சராசரியாக எட்டு மணிநேரம் உறங்குகிறோம் எனும்போது நம் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு உறக்கத்தில் செலவிடுகிறோம். தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் ஆரோக்கியமான உறக்கத்திற்கான வழிமுறைகள் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.. அந்த வகையில் உறக்கம் தொலைத்தால் எதுவும் சரியாக நடக்காது என்பது தான் நியதி. தேவையில்லாத குழப்பம், மன வேதனை போன்றவை உறக்கத்தை பாதிக்கிறது. நம்முடைய உடல் இயக்கம் சீராக நடைபெறுதற்கு தூக்கம் முக்கியமானது. பிறந்த குழந்தைகள் ஒரு நாளில் 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்குவார்கள்.
இந்தியாவில் ஒரு வருடத்தில் 10 மில்லியன் மக்கள் தூக்கமின்மையால் பாதிப்படைகிறார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. தூக்கமின்மை என்பது பல வகையில் இருக்கலாம். படுத்த பின் தூங்கமுடியாமல் மெத்தையில் புரண்டு கொண்டு இருப்பது, சில மணிநேரம் தூக்கத்திற்கு பிறகு முழிப்பு வந்து விட்டால், அதன் பிறகு தூங்க முடியாமல் போவது, இல்லையேல் பல மணி நேர தூக்கத்திற்கு பிறகும் அசதியாக உணர்வது, என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். தூக்கமின்மை என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சனையாக கருதப்பட்டாலும், அது பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுடன் நெருங்கிய தொடர்புடையது.
உடல்வலி ஆஸ்துமா, மூட்டு சம்மந்தமான கோளாறுகள், தைராய்ட் சுரப்பி அளவிற்கு அதிகமாக செயல்படுவது (Hyperthyrodism) இரத்த சோகை போன்ற பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளின் அறிகுறியாக தூக்கமின்மை இருக்கலாம். பொதுவாக பதற்றம் சார்ந்த கோளாறுகள் உடையவர்களுக்கு தூக்கத்தின் தொடக்கம் கடினமாக இருக்கும்.
சில மணிநேரங்கள் கழிந்த பிறகே தூக்கம் ஏற்படும். 'மனஅழுத்தம்" உள்ளவர்களுக்கு இயல்பாக தூங்க ஆரம்பித்தாலும் விடியற்காலையில் அவர்கள் பொதுவாக எழுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே தூக்கம் கலைந்துவிடும். ஏதோ ஒரு நாள் தூங்கவில்லை என்றால் பரவாயில்லை. வாரத்தில் மூன்று நாட்கள் 'தூக்கமின்மை" ஏற்பட்டு அது மூன்று மாதங்கள் வரை நீடித்தால் அது 'Chronic Insomnia" எனப்படும். அதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
ஆக வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்த இரவுத் தூக்கம் அவசியமானது. தினசரி சீராக தூங்குவதன் மூலம் உடலையும், மனதையும் புத்துணர்வாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். அதே சமயம், ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் தூங்கினாலும் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தூங்கும் போது அமைதி தரக்கூடிய சொற்களை கேட்பது இதய செயல்பாட்டை மென்மையாக்கும் என்று ஆய்வு கூறுகிறது. நம்மில் பலர் தூக்கத்தை வரவழைக்க சிலர் பாடல்கள் கேட்பதுண்டு. இரவில் பாடல் கேட்க்கும் போது குறிப்பாக மெல்லிசை பாடல்களை கேட்டும் பொழுது மனதில் உள்ள கவலைகள் யாவும் மறந்து மனது லேசாக இருக்கும். தூங்குவதற்கு முன்பு பாடல்கள் கேட்பதில் நல்லது இருந்தாலும் சில கெடுதல்களும் உள்ளது. தீமைகள் இரவில் ஹெட்செட் மாட்டி கொண்டு தூங்குவதற்கு முன்பாக பாடலை கேட்டுக் கொண்டு தூங்கும் போது அது உங்களுடைய சிறந்த தூக்கத்தை நிச்சயம் பாதிக்கும்.
இந்நிலையில் பிரான்ஸை சேர்ந்த மிக பழமைவாய்ந்த லீஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், தூங்கும் போது நாம் கேட்கும் சொற்களுக்கு நமது உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறா எனவும் நம் இதயத்தில் எவ்வாறு மாற்றம் நிகழ்கிறது எனவும் ஆராய்ச்சி செய்தனர். இதன் மூலம் அவர்கள், நிதானமான அல்லது அமைதி தரக்கூடிய வார்த்தைகளை தூக்கத்தில் கேட்கும் போது, நமது இதயத்தின் செயல்பாடு மென்மையாகிறது என கண்டறிந்தனர்.
ஏற்கெனவே சில பல ஆண்டுகளுக்கு முன்னால் ”மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்று தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், வார்த்தைகளின் பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களை செய்விக்கும் அளவுக்கு மனித மூளை, மனிதர்கள் தூங்கும்போதும் விழிப்புடன் செயல்படுகிறது ”என்று நிரூபித்திருக்கிறார்கள். அதாவது விழித்திருக்கும்போது செய்யப்பழகிய செயல்களை தூங்கும்போதும் அதே மாதிரி கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் தொடர்ந்து செய்தார்கள். இதன் முடிவில் மனிதர்கள் தூங்கும்போதும், அவர்களின் மூளை சிக்கலான அதேசமயம் தன்னிச்சையாக செய்யக்கூடிய செயல்களை செய்யும் என்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.ஒருவர் தூங்கும்போதும் கூட அவர் பெயரைச்சொல்லி அழைக்கும்போது அவர் விழிப்படைவதும், கடிகாரத்தின் குறிப்பிட்ட அலார ஒலிக்கு ஒருவர் எழுந்துகொள்வதும் கூட இதே காரணத்தின் அடிப்படையில் நடக்கும் மூளையின் செயற்பாடுகளே என்றும் உறுதிப்படுத்திய நிலையில் இப்போதைய ஆராய்ச்சி புது வடிவத்தைக் கொடுத்திருக்கிறது.
டாக்டர். செந்தில் வசந்த்