FIFA சிறந்த வீரர் விருதை வென்ற Messi & Aitana Bonmatí!
வேர்ல்ட் ஃபுட்பால் சேம்பியனான மெஸ்ஸி, பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார். அவரின் ஒப்பந்தம் இந்த ஆண்டோடு முடிவடைந்த நிலையில், அவர் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் இணைந்தார். அணியில் இணைந்ததோடு அந்த அணிக்காக முதல் கோப்பையையும் வென்றுகொடுத்து மெஸ்ஸி அசத்தினார். அதோடு இந்த ஆண்டுக்கான 'பாலன் டி ஓர்' விருதுக்கும் அவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த விருதை மெஸ்ஸி ஏற்கனவே 7 முறை வென்றநிலையில், நார்வேயின் இளம் வீரர் எர்லிங் ஹாலந்தை வீழ்த்தி 8-வது முறையாக ஆண்டுக்கான 'பாலன் டி ஓர்' விருதை கைப்பற்றினார்.இந்த நிலையில், பிபா-வின் சிறந்த வீரர் விருதையும் மெஸ்ஸி தட்டி சென்றுள்ளார்.
லண்டனில் 2023 ஆம் ஆண்டுக்கான பிபா-வின் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சிறந்த வீரர் விருதை பெறுபவர் யார் என்பதில் மெஸ்ஸிக்கும், எர்லிங் ஹாலந்துக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவருமே 48 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் அதிக தேசிய அணியின் கேப்டன்கள் மெஸ்ஸிக்கு வாக்களித்ததால் இந்த விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. இந்திய கால்பந்து அணி கேப்டன் சுநீல் சேத்ரி, ஹாரி கானே, முகமது சலா ஆகியோர் மெஸ்ஸிக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.இந்த சீசனில் மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்றதோடு, அதில் சிறந்த வீரருக்கான தங்க கால்பந்து விருதையும் தட்டிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு மெஸ்ஸி கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்த விருதை வென்றுள்ளார்.
மேலும் பார்சிலோனா கால்பந்து வீராங்கனை ஐய்டானா பொன்மதி, சர்வதேச அளவில் சிறந்த பெண் கால்பந்து வீராங்கனைக்கான விருதை (2023) தட்டிச் சென்றார். 25 வயதான பொன்மதி, நடுகள ஆட்டக்காரர். 2023 இல் ஸ்பெயின் உலக கோப்பை பட்டம் வெல்ல இவர் காரணமாக இருந்தார். சிறந்த கால்பந்து வீராங்கனையாக என்னை பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி. மேலும் விளையாட்டின் விதிகளையும் உலகத்தையும் மாற்றியமைக்கும் சக்திவாய்ந்த பெண்களில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று பொன்மதி கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டு எனக்கு மறக்கமுடியாத தனித்துவமான ஆண்டாகும். 2024 இன் தொடக்கத்தில் விருதுபெறுவதையும் மறக்கமுடியாது. பார்சிலோனா அணிக்கு நான் மிகவும் கடைமைப்பட்டிருக்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.
மான்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சியாளர் பெப் கார்டியோலா 2023 ஆம் ஆண்டுக்கான ஆடவருக்கான சிறந்த நிர்வாகிக்கான விருதையும், இங்கிலாந்து பயிற்சியாளர் சரினா வீக்மன் சிறந்த பெண் பயிற்சியாளருக்கான விருதையும் பெற்றனர். சரினா, நான்காவது முறையாக இந்த விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் சிறந்த கோல் கீப்பருக்கான விருதை ஆடவர் பிரிவில் மான்செஸ்டர் சிட்டி அணியின் கோல் கீப்பர் எடர்சன் வென்றார். மகளிர் பிரிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கோல் கீப்பர் மேரி எர்ப்ஸ் விருது பெற்றார்.