தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

எழுத்து மின்சாரம் ஜெயகாந்தன்= பிறந்த தினம் By பெ கருணாகரன்

10:40 AM Apr 24, 2014 IST | admin
Advertisement

புதுமைப் பித்தனுக்குப் பிறகு, தமிழ்ச்சிறுகதை உலகில் மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்; எழுத்தாளர்கள் ஐம்பது வயதிலடையும், அனுபவங்களையும் புகழையும் தன் முப்பதாவது வயதிலேயே அடைந்தவர். சாகித்ய அகாடமி விருதும், இந்திய எழுத்தாளர்களின் உச்சக் கனவான ஞானபீட விருதையும் பெற்று தமிழ் இலக்கியத் தரத்தை உலகுக்குணர்த்தியவர். பேச்சாளர்; அரசியல்வாதி; இன்னும் நிறைய நிறைய எழுதலாம். ஆனால், அவற்றையெல்லாம் ஒரே வார்த்தையில் குறிப்பிட வேண்டுமென்றால் _ ‘ஜெயகாந்தன்!’. இயற்பெயர் முருகேசன்.

Advertisement

பழைய தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கடலூர் _ மஞ்சக்குப்பம்தான் ஜெயகாந்தன் பிறந்த ஊர். பெற்றோர் : தண்டபாணிப்பிள்ளை, மகாலட்சுமி அம்மாள். பிறந்த நாள் 24.4.1934.

Advertisement

குடும்பத்தார் பலரும் அரசியலில் ஈடுபட்டிருந்ததால் அவரையும் சிறுவயதிலேயே அரசியல் ஆர்வம் பிடித்துக்கொண்டது. சுதந்திரப் போராட்டத்தின்போது, ஜெயகாந்தன் குடும்பத்தினர் எல்லோரும் ஜெயிலுக்குப் போனார்கள். சிலர் காங்கிரஸ்காரர்களாக ஜெயிலுக்குப் போனார்கள். சிலர் கம்யூனிஸ்ட்களாக. காங்கிரஸ்காரர்கள் சிறையிலிருந்து வெளியே வரும்போது கம்யூனிஸ்ட்கள் சிறையேகுவர். கம்யூனிஸ்டுகள் வெளியே வரும்போது, காங்கிரஸ்காரர்கள் சிறை செல்வர். காங்கிரஸார் சிறையிலிருந்து வெளிவரும்போது, கம்யூனிஸ்ட்களை ‘துரோகி’ என்பார்கள்.
இவை, ‘நான் ஒரு தேசபக்தன். காந்தியத் தொண்டன்’ என்ற ஜெயகாந்தனின் கொள்கை உணர்வுகளை அசைத்துப் பார்த்தது, ‘கம்யூனிஸ்ட்களைத் துரோகி என்று சொல்வது தவறு. அவர்கள் உலகத்தைக் காப்பாற்றுவதற்காக ஜெயிலுக்குப் போனவர்கள்’ என்ற எண்ணம் அந்தச் சிறுவனின் மனதில் குமிழியிட, சிந்தனைகளில் சிவப்பு நிறம் ஏறத் தொடங்கியது.

காம்ரேட்!

அந்தக் காலக்கட்டத்தில் விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. ஆனால், சிறுவர்களை எந்தக் கட்சியிலும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்ற நிலை. மாறாக, ஜெயகாந்தனை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்துக் கொண்டார்கள். இவர் அங்கு சேர்ந்ததும், இவருக்காகவே பாலர் சங்கம் என்று புதிய பிரிவு தொடங்கப்பட்டது. அதில் இவர் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

1946_ல் ஒரு பெரிய ரயில்வே ஸ்ட்ரைக் நடந்தது. அதை அடக்க காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. இதனால், ஜெயகாந்தன், விழுப்புரம் கம்யூனிலிருந்து சென்னை கம்யூனுக்கு வர நேர்ந்தது. சென்னையில் ஜனசக்தி அச்சகத்தில் கம்போஸிங் செக்ஷனில் போட்டார்கள். பிறகு, கட்சி ஆபீஸில் ஆபீஸ் பையன் வேலை. அப்போது, ஜனசக்தியில் நிறைய எழுத்துப் பிழைகள் வரும். அவற்றை இவர் கிண்டல் செய்து கொண்டிருப்பார். இதனையட்டி, இவருக்கு பிழை திருத்தும் பணி வழங்கப்பட்டது. அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்ததால் இவருக்கு நல்ல பெயர்.
இந்த வாழ்க்கை நீண்ட நாட்கள் ஓடவில்லை. காரணம், அப்போது சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதன்பிறகு, தலைமறைவு வாழ்க்கை. தலைமறைவு வாழ்க்கையில் தோழர்களின் கடிதங்கள், பொருட்கள் பரிமாற்றம் ஜெயகாந்தன் வசம் ஒப்படைக்கப்பட்டது.

கட்சியின் தடை நீக்கப்பட்ட பிறகு, 1952_ல் தனது பதினெட்டாவது வயதில் மீண்டும் கட்சி அலுவலகப் பிரவேசம். அவரை ஜனசக்தி ஆசிரியர் குழுவில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டார்கள்.

கம்யூனிஸ்ட்களால் வளர்க்கப்பட்டு, கல்வி அளிக்கப்பட்டு, அங்கேயே வாழ்ந்து கொண்டிருப்பதால் மட்டுமே ஒருவர் கம்யூனிஸ்ட்டாகிவிட முடியாது. ஒரு நேர்மையான இலக்கியவாதி, அரசியல்வாதியாக இருக்க முடியாது என்ற அடிப்படை மனோதத்துவமும், எதிலும் சமரசம் செய்து கொள்ளாத கொள்கை நெறியும் இவரை கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து 1964_ல் வெளியே அழைத்து வந்தது. எல்லோரும் கட்சியில் சேரும் வயதில் அவர் கட்சியிலிருந்து வெளியே வந்தார்.

படைப்புப் பட்டறை!

1950_ல் எழும்பூரில் அவரது மாமா வீடுதான் இவரது படைப்புப் பட்டறையாக இருந்தது. இங்கிருந்துதான் இவரது சிறுகதைகள் சூறாவளியாய்ச் சுழன்றெழுந்தன. இவர் எழுதி முதன்முதலில் பிரசுரமான கதை சௌபாக்கியம் இதழில் வெளியானது. அதன்பிறகு, ஏகப்பட்ட சிறுகதைகள், ஏகப்பட்ட நாவல்கள், குறு நாவல்கள், அதிரடி கட்டுரைகள்! அனைத்திலும் ஜெயகாந்தனின் தனித்துவம் தலைநிமிர்ந்து நின்றது.
ஜெயகாந்தன் கூறுகிறார். ‘‘நான் தனிமனிதனேயல்ல. பிறருடைய துயரம், வாழ்க்கைப் பிரச்னைகள் என்னை நீதிபதி ஸ்தானத்தில் அமர்த்தி, நீதி வழங்குமாறு கேட்கிறது. பக்கத்து வீட்டில் ஒரு பெண்ணைப் போட்டு அடிக்கிறார்கள். அதுதான் அக்னிப் பிரவேசம். நான் ஒரு நீதிபதியாக நின்று அதில் யோசிக்க வேண்டியதிருக்கிறது. உயர்வில்லை; தாழ்வில்லை எல்லாம் ஒரு நிறை என்பதுதான் நம்முடைய விதி. இதைப்புரிந்து கொள்ளாமலிருப்பது ஒரு விபரீதம். ஆகவே, இந்தச் சமத்துவப் பார்வையும் சமநோக்கும் எனக்கு எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்தன.’’

குடும்பம்!

இந்த ஞானச்சூரியனின் துணைவி _ ஞானாம்பிகை. ஆசிரியை. 1956_ல் திருமணம். ஜெயகாந்தனின் பெற்றோர் செய்துகொண்டது சீர்த்திருத்த திருமணம். ஜெயகாந்தன் செய்து கொண்டதோ வைதீகத் திருமணம். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். காதம்பரி, ஜெயசிம்ஹன், தீபலட்சுமி.

வாழ்வியல் ஞானி!

ஜெயகாந்தன் படித்தது ஐந்தாம் வகுப்புவரைதான். அதையும் மூன்று முறை படித்தார். இதற்குக் காரணம், வறுமையோ, வாய்ப்பில்லாமல் போனதோ, படிக்க வைக்க ஆள் இல்லாததோ அல்ல. சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் கற்றுக் கொள்வதற்குப் பள்ளிக்கூடம் தடையாக இருந்தது. வகுப்பறைகளில் கற்காத கல்வியையும் அனுபவங்களையும் நடைமுறை வாழ்க்கையில் கற்றறிந்தார். ‘இது எல்லோருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு’ என்கிறார் ஜெயகாந்தன்.

ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர், ஆசிரியராக இருந்த பத்திரிகைகள் ஏராளம்.

ஜெயக்கொடி, ஜெயபேரிகை, ஞானரதம், கல்பனா, நவசக்தி போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக இவர் இருந்தபோதும், அவற்றில் தொடர்ந்து நீடிக்கவில்லை. ஓர் இலக்கியவாதி அரசியல்வாதியாக இருப்பதில் இருக்கும் தடைகள்தான் பத்திரிகையாளராக இருப்பதிலும் இருந்திருக்கவேண்டும்.
ஜெயகாந்தனின் நாவல்கள் படமாயின. உன்னைப்போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள், கருணை உள்ளம் போன்ற படங்கள் சிறந்த படம், கதைகளுக்கான தேசிய, தமிழகஅரசு விருதுகளையும் பெற்றன. எடுக்கப்பட்ட சில படங்கள் வெளியிடப்படாமல் நிற்கின்றன என்பது ஒரு தமிழ் அவலம்!

ஏன் நிறுத்தினார்?

திடீரென்று ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தியபோது திகைத்தது தமிழ்கூறு நல்லுலகு. சஹ்ருதயர்கள் அவரை மீண்டும் எழுதச் சொல்லி வலியுறுத்தியபோது, அவரிடமிருந்து புன்னகையையே பதிலாகப் பெற முடிந்தது. இது குறித்துப் பல்வேறு இடங்களில் ஜெயகாந்தன் பேசியிருக்கிறார்.

‘‘வேலையில் இருக்கறவங்க வி.ஆர்.எஸ். வாங்கலாம்; ஓர் எழுத்தாளன் வி.ஆர்.எஸ். வாங்கக்கூடாதா?’’ என்று ஒரு முறை கூறினார்.

‘‘எழுதுவது போலவே எழுதாமல் இருக்கவும் ஓர் எழுத்தாளனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.’’ என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறார்.

காவ்யா பதிப்பகம் நடத்திய ஒரு கூட்டத்தில் இப்படிப் பேசினார். ‘‘என்னை ஓர் அர்த்தமுள்ள சக்தி எழுதும்படி வைத்தது. அதே சக்திதான் என்னைப் பிடித்து நிறுத்தியும் இருக்கிறது. எழுதமாட்டேன் என்று சொல்ல மாட்டேன்; நேரம் வரும்’’ அந்த நேரத்துக்காகத்தான் தமிழர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாலை நேர மகோன்னதங்கள்!!

கே.கே. நகரிலிருக்கும் ஜெயகாந்தன் வீட்டின் இரண்டாவது மாடி. கூரை வேயப்பட்டு ஒரு பர்ணசாலை மாதிரி காட்சியளிக்கும். இங்குதான் மாலை நேரங்களில் ஜெயகாந்தனின் சஹ்ருதயர்களின் சந்திப்பு நடக்கும். அவை மகோன்னதப் பொழுதுகள். கற்றாய்ந்த அறிஞராய் இருந்தாலும், ஆட்டோ ஓட்டுநராய் இருந்தாலும் எல்லோருக்கும் அங்கே சம அந்தஸ்து.

சில நேரங்களில் மீசையைத் திருகிக் கொண்டே பாட ஆரம்பித்து விடுவார் ஜெயகாந்தன். பாட ஆரம்பித்தால் நிறுத்தமாட்டார். பெரும்பாலும் பாரதியார், பாரதிதாசன் பாடல்களாகவே அவை இருக்கும். சில நேரங்களில் தன்னுடைய சினிமாப் பாடல்களையும் பாடுவார்.
ஜெயகாந்தனின் நண்பர் கே.எஸ். சுப்பிரமணியன், அந்தச் சந்திப்புகள் பற்றி இப்படிக் கூறுகிறார். ‘‘இவை மிகவும் சுவையான அர்த்தமுள்ள, இனிமையான ‘மாலை’ நேரங்கள். ஏழு மணியளவில் தொடங்கி காலை ஒன்று இரண்டு வரை நீளும். இலக்கியப் பரிமாற்றம்; அக்னிக் குஞ்சுகளின் ஒளிர்வு; அறிவுச் சீற்றத்தின் மின்னல் வெட்டு; சுருள் சுருளாகக் கிளர்ந்தெழும் புதுமைக் கோணக் கருத்துக்களின் எழில் நடம்; இயல்பான பிசிறில்லாத பல விகஸிப்புகள்; மருந்துப் புகையும் என் எதிரில் கமழும். ஆனால், கொச்சையான புரிதலோ, வக்கிரமான அணுகலோ அந்தச் சூழ்நிலையைச் சிறிதும் வடுப்படுத்த இயலாது…’’

மனசாட்சியின் குரலை எந்த மேடையாக இருந்தாலும் ஜெயகாந்தன் ஒலிக்கத் தயங்குவதில்லை. 1959_ம் ஆண்டு திருச்சியில் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு, தந்தை பெரியார் மாநாட்டின் திறப்பாளர். ஜெயகாந்தன் மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர். மாநாட்டை ஆரம்பித்து வைத்துப் பேசிய பெரியார், நமது இதிகாச புராணங்களையும், இந்து மதத்தையும், பிராமணர்களையும் தனது பாணியில் விளாசினார்.

ஜெயகாந்தனால் பெரியாரின் வாதங்களை ஏற்க முடியவில்லை. பெரியாரை மறுத்துப் பேச வேண்டாம் என்று மாநாட்டுத் தலைவர் வேண்டுகோள் வைத்தபோதும், ஜெயகாந்தன் எது பகுத்தறிவு, எது மூடத்தனம் என்றெல்லாம் ஆணித்தரமான வாதங்களை முன் வைத்தார். திராவிடர் கழகத்தினர் அவரது பேச்சால் கோபமடைந்தபோதும் வெளிப்படையான ஜெயகாந்தனின் பேச்சு பெரியாரை மகிழ்ச்சியடையவே செய்தது.

தகவல் உதவி::பெ. கருணாகரன்

பட உதவி : ஜமால்

Tags :
jayakandan
Advertisement
Next Article