மூக்கைப் பாதுகாப்போம்!
நம் முகத்துக்கு பொலிவைத் தருவது மூக்கு. உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜனை உடலுக்குள் செலுத்தும் முக்கிய உறுப்பும் மூக்குதான். வாசனையை அறியும் ஆற்றல் மூக்கின் வியத்தகு செயல். பேச்சுக்கும் மூக்குக்கும் கூட தொடர்பிருக்கிறது. நாம் பேசும்போது குரல் சரியாக இருக்கவேண்டுமானால், மூக்கும் அதன் அருகில் உள்ள ‘சைனஸ்’ காற்றறைகளும் சரியாக இருக்க வேண்டும். வலமும் இடமுமாக மூக்கில் இருபகுதிகள் உண்டு. இவற்றின் நடுவில் இடைச்சுவர். மூக்கின் மேல் பாகம் கூரை போன்ற அமைப்பை உடையது. இந்தப் பாகத்தில் ஏறக்குறைய பத்தாயிரம் வகையான வாசனைகளைப் பிரித்துணர முடிகிறது. மூக்கின் முனைப்பகுதியில் மயிரிழைகள் உள்ளன. இவை மூக்குக்கு வரும் காற்றை வடிகட்டி, சுத்தப்படுத்தி மூக்குக்குள் அனுப்புகின்றன. இதையடுத்து, சங்கு போன்ற அமைப்பில் சுருண்டிருக்கும் ‘டர்பினேட்’களில் சளித்திரவம் சுரக்கிறது.இந்தத் திரவமானது, மூக்கினுள் புகுந்த காற்றைக் குளிர்வித்து, உடலுக்கு இதமான வெப்பநிலைக்குக் கொண்டு வருகிறது. அதன் பின்பே மூச்சுக்காற்று நுரையீரலுக்குள் நுழைகிறது.
வெளிக்காற்றின் வெப்பநிலை மிக அதிகமாக இருந்து, அப்படியே அது உள்ளே போனால், நுரையீரல் கண்டிப்பாக பாதிக்கப்படும். இதற்கான தடுப்பு ஏற்பாடுதான் சளித்திரவம். அசுத்தமான காற்றில் வரும் பல வகைப்பட்ட வைரஸ் கிருமிகள் மூக்கைத் தாக்கும்போது ஜலதோஷம் ஏற்படுகிறது. மூக்கில் இந்தக் கிருமிகள் தாக்கியதுமே, அங்கே ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்து, உடனடியாக மூக்குக்கு ரத்த விநியோகம் அதிகரிக்கிறது. அதன் அடுத்தகட்ட விளைவாக ‘டர்பினேட்கள்’ விரிவடைந்து, சளித்திரவம் அதிகமாகச் சுரக்கிறது. இதுதான் மூக்கைச் சிந்தச் சிந்தக் குறையாத சளியாகத் தொல்லை தருகிறது. சுத்தமான காற்றைச் சுவாசிப்பது, நன்றாக ஓய்வெடுப்பதுதான் ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்த சிறந்த வழி. பெரும்பாலும், ஜலதோஷம் ஒரு வாரத்தில் தானாகவே குணமாகிவிடும். என்றாலும், மூக்கடைப்பு, காய்ச்சல், தலைவலி போன்ற பின்விளைவுகள் வருவதுண்டு. மருத்துவ ஆலோசனை அவசியம்.
மூக்கடைப்பு ஒரு பக்கமாகவோ, இரண்டு பக்கமாகவோ இருக்கலாம். மூக்கில் உள்ள சளிச்சவ்வு வீங்கி மூக்கை அடைக்கும். ஒவ்வாமை காரணமாகவும் மூக்கடைப்பு ஏற்படுவதுண்டு. அப்போது தொடர்ச்சியாகத் தும்மல் வரும். குழந்தைகளுக்கு ‘அடினாய்டு’ எனும் அண்ணச்சதை வீங்கும்போதும், சைனஸ் அழற்சி தீவிரமாகும் போதும், மூக்கில் நீர்க் கோப்புச் சதை வளரும்போதும் மூக்கடைப்பு ஏற்படும். சிலருக்குப் பிறவியிலேயே மூக்கின் இடைச்சுவர் வளைந்திருக்கும். இவர்களுக்கு அடிக்கடி மூக்கு அடைத்துக்கொள்ளும். மூக்கில் அந்நியப் பொருள்கள் சிக்கிக்கொள்ளும்போதும், புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்களின்போதும் மூக்கடைப்பு உண்டாகும். தொடர்ச்சியாக மூக்கு அடைத்துக்கொள்ளும்போது, ‘காது-மூக்கு-தொண்டைக்குழாய்’அடைபட்டு, காது பாதிக்கப்படும். வாயினால் மூச்சுவிட வேண்டியது வரும். இதன் விளைவாக, குறட்டை விடுதல், தெற்றுப்பற்கள் உண்டாதல் போன்ற பாதிப்புகள் வரும்.
மூக்கடைப்பைப் போக்க பல வகையான சொட்டு மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சொட்டு மருந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இது மட்டுமல்ல, மூக்கடைப்புக்குச் சரியான காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். அப்போதுதான் நிரந்தரத் தீர்வு கிடைக்கும். ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அதற்கான மருந்துகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிட வேண்டும். இவர்கள் தங்களுக்குரிய ஒவ்வாமைப் பொருள்களை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும்.
மூக்கின் இடைச்சுவர் வளைவு, அண்ணச்சதை அழற்சி, நீர்க்கோப்புச்சதை போன்றவற்றுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். மூக்கடைப்பைப் போக்க நல்ல காற்றோட்டமான இடத்தில் படுக்கவேண்டும். படுக்கும்போது சுவாசம் சீராக வருவதற்கு ஏற்றவகையில் தலைபாகத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டு நோய் எதிர்ப்பாற்றலை வளர்த்துக்கொண்டால் மூக்கடைப்பு ஏற்படுவது குறையும்.
மூக்கைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால், ஈக்கள் மூக்கில் முட்டையிட்டு, புழுக்கள் வளர்ந்துவிடும். சிறு குழந்தைகள் பலப்பம், ரப்பர், பொத்தான், குண்டூசி, விதை என்று எதையாவது மூக்கில் போட்டுக்கொள்ளும். இவற்றை மருத்துவர் உதவியுடன்தான் அகற்ற வேண்டும். தினமும் குளிக்கும்போது மூக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். குளிர்ந்த நீரும் குளிர்பானங்களும் மூக்கின் பாதுகாப்பைக் கெடுக்கும் என்பதால், குறைத்துக்கொள் வது நல்லது. மூக்கைப் பலமாகச் சிந்தக் கூடாது. மூக்கைக் குடையக்கூடது. தும்மும்போதும் மூக்கைச் சிந்தும் போதும் கைக்குட்டையால் மூக்கை மறைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கிருமிகள் மற்றவர்களுக்குப் பரவாது. மூக்கில் பொடி போடக்கூடாது. அப்படிப் போட்டால் பின்னாளில் புற்று நோய் வந்துவிடும். சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.