For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

புரியாமலேயே ஃபயர் விடுவோம் -எலைட் சினிமாக்கள்!

05:06 PM Sep 12, 2024 IST | admin
புரியாமலேயே ஃபயர் விடுவோம்  எலைட் சினிமாக்கள்
Advertisement

வாழை படத்தில் 13 வயது மாணவனுக்கும் 20+ வயது பள்ளி ஆசிரியைக்கும் இடையேயான காட்சிகளுக்கு எழுத்தாளர் சாரு நிவேதா விமர்சனம் வைத்த பிறகு மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது. இதே காட்சிகளை ஆணுக்கும் பெண்ணை இடத்தை மாற்றி போட்டு பாருங்கள். 13 வயது மாணவியை 25 வயது ஆசிரியர் தொட்டு தொட்டு பேசி இருந்தால், அவ்வளவு ஏன் தவறான வார்த்தைகளை உபயோகித்தாலே போக்சோ சட்டம் பாய்ந்திருக்கும் என்பதுதான் இப்போதைய யதார்த்தம்.பெண்ணின் 16 வயது என்பது, குறிப்பாக ஒரு காலத்தில் பருவ உணர்ச்சிகளின் வாசலாக, பரவசமாக பார்க்கப்பட்டது. அதனால் தான் சினிமா பாடலாசிரியர்கள் அந்த காலத்தில் ஈரெட்டு பதினாறு என பாடி பாடி இளம் பெண்ணை பாலியல் உறவுக்கு தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

Advertisement

இன்றைய காலகட்டத்தில் அப்படி செய்தால் சிறுமி வன்கொடுமை சட்டத்திற்கு ஆளாக நேரிடும். பொதுவாகவே, 'கொண்டாடப்படும் சினிமாக்களுக்கு' பின்னால் என்று அலசி ஆராய்ந்து பார்த்தால் அவ்வளவாக யதார்த்தம் இருக்காது.ஆனாலும் சினிமாக்களை விட, பொதுமக்களின் சமுதாயம் மிகப்பெரிய நடிப்பாற்றலைக் கொண்டது என்பதால் உணர்ச்சிமயங்களுக்கு பஞ்சமே இருக்காது.52 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து சக்கை போடு போட்டு, இன்றும் சக்கை போடு போடும் வசந்த மாளிகை படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.ஒரு குடிகார ஜமீன் வாலிபன். பொம்பள சோக்காலி. அதுவும் செகரட்டியாக வந்த பெண் முன்னாடியே தினமும் விதவிதமான ரகங்களை கூட்டி வந்து அனுபவிக்கும் காமுகன்.இப்படிப்பட்டவன் திடீரென திருந்தி பெண் செக்ரட்டரி மீது காதல் கொள்வான். அந்தக் காதலின் மீது தவறு என்ன இருக்க முடியும்? என்ற கேள்வி தான் பொது புத்தி. அப்படிப்பட்ட ஜமீன் வந்து பெண் கேட்டால் உங்கள் வீட்டுப் பெண்ணை கொடுப்பீர்களா என்று கேட்டால் எத்தனை பேரிடமிருந்து உண்மையான பதில் வரும்? வசந்த மாளிகையில் ஒரு ஜமீன்தாரை கட்டிக்கொள்வதில் அவளுக்கு என்ன கேடு, இப்படி பாடாய்படுத்தி தற்கொலை முயற்சி அளவுக்கு கொண்டு செல்கிறாளே என்றெல்லாம் பதைபதைக்க வைத்து விடுவார்கள்.

Advertisement

ஒருவேளை வசந்த மாளிகை பட ஜமீன், குடிகார பெண்மணியாக இருந்து தினமும் இரவுக்கு ஒரு ஆணை வேட்டையாடுபவளாக இருந்து அவளுக்கு செகரட்டரி ஒருவன் மீது காதல் பிறந்தால் ஏற்றுக் கொள்வோமா? இந்த சினிமா காட்சிகளுக்கு நெஞ்ச நக்குற மாதிரி ஃபயர் விடுவது என்பது தனி காமெடி..!ஆழமா யோசிச்சு பார்த்தாதான், நடைமுறை எதார்த்தத்தை மறந்து கைதட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது புரியவரும்.தளபதி படத்தில் கலெக்டர் ஆபீஸில் கௌரவமாக வேலை பார்க்கும் ஒரு அரசு ஊழியரின் மகள், ஷோபனாவுக்கு லவ் பிறப்பது ரவுடி ரஜினி மீது. அதுவும் வெட்டுக் குத்துக்களை சர்வ சாதாரணமாக செய்யும் தாதாவின் அடியாள் மீது.ரஜினியின் காதலுக்காக பெண் கேட்டு செல்லும் மம்முட்டியிடம் ரவுடிக்கு பெண் தர முடியாது என மறுப்பார்.

அப்போது மம்முட்டி ஆவேசத்திரம் சோபனாவின் தந்தையாரை கழுத்தைப் பிடித்து தூக்கி பேச ஆரம்பிப்பார்..சாரி கத்த ஆரம்பிப்பார்.

" யாருடா நீ? எங்கோ கலெக்டர் ஆபீஸில் குமஸ்தாவா குப்பை கொட்டுறே. பசின்னு யாராவது வந்தா நாலணா குடுப்பியா? அவன் கொடுப்பான்டா எல்லாத்தையும் கொடுப்பான். அவனேயே கொடுப்பான்டா'" - இப்படி பேசும் மம்முட்டிக்காக தான் எல்லோருமே கைத்தட்டி இருக்கிறோமே தவிர, ஒழுங்காக படித்து அரசு வேலையில் சேர்ந்து தாயில்லாத ஒரு பெண்ணை சீராட்டி பாராட்டி வளர்த்த ஒரு வயதான தந்தை சாருஹாசனுக்கு ஆதரவாக ரசிக மனநிலை இருக்காது.இப்படிப்பட்ட ஒரு மனிதனை வயத வித்தியாசம் பாராமல் வாடா போடா என்று பேசுகிறானே மம்முட்டி என்று அவர் மீது கோபம் வராது.

இதற்கு அப்புறம் பெண் வீட்டிலிருந்து திரும்பும் மம்முட்டியிடம் ரஜினி சொல்வார் பாருங்கள், "யாரு தேவா இவங்க? எல்லாம் நாம போனா பயந்து ஒதுங்கி வழி விடுறவங்க". இப்போது மீண்டும் எதார்த்தத்தை பொருத்தி அந்த காட்சிகளை ஒருமுறை பாருங்கள்.நாம் இங்கே ஏற்கனவே சொன்ன மாதிரி, அனைவராலும் கொண்டாடப்படும் முதல் மரியாதை படத்தில்கூட அனைவரும் போக்கஸும் சிவாஜியின் மீது அனுதாபத்தில் தான் இருந்ததே தவிர, அந்தப் பாத்திரத்தை எத்தனை பேர் முழு முழு ஆய்வுக்கு உட்படுத்தினோம்.

ஒரு முறை எவரிடமோ தவறிவிட்ட. பெண்ணை தாய்மாமன் வற்புறுத்தலின் பேரில் மணந்ததாக சிவாஜி சொல்வார்.ஆனால் திருமண பந்தத்திற்கு உடன்பட்டுவிட்டு இல்லற தர்மத்தை அவர் நிறைவேற்றினாரா என்பதை கேட்டிருக்கிறோமா?"என்னைக்காவது உன்னை தொட்டு இருப்பேனே?" என்று திருமணம் நடந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு வீராப்புடன் கேட்கிறார் சிவாஜி.

20 ஆண்டுகளுக்கும் மேலாக மனைவியை தொடாமலே வைத்திருப்பது எவ்வளவு பெரிய குடும்ப வன்முறை அயோக்கியத்தனம்? 20 வருஷம் மனைவியை தொடாதவன் நல்லவரா, 20 வருஷமாகியும் கணவன் தொடவில்லை என்றாலும் கள்ளத்தொடர்பைகூட ஏற்படுத்திக் கொள்ளாத பொன்னானத்தா நல்லவரா? ஒரே ஒரு முறை கோவில் திருவிழாவின்போது உறவு கொண்டு விட்டு ஜெயிலுக்குப் போனவன் அதன்பிறகு மீண்டும் அந்த பெண்ணைத்தான், பொன்னாத்தாவைத்தான் சொத்து பாசத்தோடு என்றாலும் நேசத்தோடு தேடி வருகிறான்.

சொந்த மகளே என்றாலும் வயதுக்கு வந்து பிறகு ஒரு இடைவெளி விட்டு அப்பன்காரன் பேசும் நிலையில், ஒரு இளம் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி படையெடுக்கிறார் வயதான மனிதர். இதே ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியாக வாழும் 50 வயது பெண்ணின் வீட்டுக்கு ஒரு 20 வயது வாலிபன் படை எடுத்தால் எப்படி இருக்கும்?

முதல் மரியாதை படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களையும் மீண்டும் ஒரு முறை அலசிப்பாருங்கள். இந்தியா முழுக்க பல இடங்களில் வெள்ளி விழா கொண்டாடி இந்தி திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டாரை தந்த ஆராதனா படத்தின் கதாபாத்திரங்களைக்கூட, ஆழ்ந்து அலசினால் எரிச்சல்தான் மேலோங்கும். நடைமுறைகளை மாற்று பெயிண்ட் அடிக்கும் போது காவியம் ஆகிவிடும். அவ்வளவுதான்...!

ஏழுமலை வெங்கடேசன்

Tags :
Advertisement